சிரஞ்சீவி (Chiranjivi (சமக்கிருதம்: चिरञ्जीवि, ப.ச.ரோ.அ: ciranjīvi), இந்து சமய நூல்களின்படி, பூமியில் பிறந்தவர்களில், நடப்பு கலி யுகம் முடியும் வரை, சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள்.[1]
சமசுகிருத மொழியில் சிரஞ்சீவி என்பதை சிரம் அல்லது நிரந்தரம் மற்றும் சீவனைக் குறிக்கிறது. இதுவே சாகா வரம் பெற்றவர் என்ற பொருளில் அமரத்துவம் அடைந்தவர் என்பதைக் குறிக்கிறது.
இறுதி மன்வந்தர காலத்தின் போது, சாகா வரம் வேண்டி, ஹயக்கீரிவன் எனும் அசுரன், பிரம்மாவிடமிருந்த வேதங்களை விழுங்கி கடலடியில் மறைத்து வைத்தார்.. பின்னர் பகவான் விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து, ஹயக்கீரிவனை கொன்று, அசுரனிடம் இருந்த வேதங்களை விடுவித்தார்.
இதிகாச, புராணங்களின்படி இறவா வரம் பெற்ற 7 சிரஞ்சீவிகளைக் குறித்துள்ளது.[2]சில வேத அறிஞர்கள் சிரஞ்சீவிகள் எண்மர் எனகூறுகின்றனர்.[3]
பெயர் | விளக்கம் |
---|---|
அசுவத்தாமன் | துரோணர் எனும் முனிவர் கடும் தவம் இயற்றியதால், உருத்திரன் அம்சமாக அசுவத்தாமன் எனும் மகனை ஈன்றார். அருச்சுனன்-சுபத்திரையின் பேரனும், அபிமன்யுவின் மகனுமாக பரிட்சித்து உத்தரையின் கருவறையில் இருக்கமையில், அசுவத்தாமன் கொல்ல முயன்றதால், கிருஷ்ணர் அஸ்வத்தாமனை உடல் முழுவதும், ஆறாத வலியுடைய புண்களால் அவதிப்படுவாய் என சாபமிட்டார்.[4] |
மகாபலி | மகாவிஷ்ணுவின் பரம பக்தனான பிரகலாதனின் பேரனும், அசுரர்களின் மன்னரான மகாபலி சக்கரவர்த்தி, இந்திரனை வென்று மூவுலகங்களை அடக்கி ஆண்டார். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து, தன் காலடியால் அழுத்தி மகாபலியை பாதாள உலகத்திற்கு அனுப்பி வைத்தார்.[5] |
வியாசர் | பராசரர் ரிஷியின் மகனும், சுகப் பிரம்மத்தின் தந்தையும், மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தை இயற்றியவருமான வியாசர்.[6]இவர் துவாபர யுகத்தின் முடிவில் பிறந்தார். |
அனுமன் | இராம பக்த அனுமன் எனப்பெயரெடுத்தவர்.[7] அனுமன் திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. தன்னலமற்ற தன்மை, தைரியம், பக்தி, புத்திசாலித்தனம், வலிமை மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை குணங்களைக் கொண்டவர் அனுமன். |
விபீடணன் | அசுரர் குல மன்னர் இராவணின் தம்பி. தர்மத்தின் பக்கம் நின்ற வீடணன் .[8], சீதையை இராமரிடம் ஒப்படைக்க இராவணனிடம் வேண்டியவர். இராம-இராவணப் போரில், இராமரின் பக்கம் நின்று போரிட்டவர். போரின் முடிவில் இராவணனைக் கொன்ற இராமர், விபீடணனை இலங்கைக்கு மன்னராக முடிசூட்டப்பட்டவர். |
கிருபர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு போர்க்கலையை கற்பித்தவரும், குரு நாட்டின் அரச குருவும், அசுவத்தாமனின் தாய்மாமனும் ஆவார். இவரது தங்கை கிருபியை துரோணர் மணந்தார். குருச்சேத்திரப் போரின் போது கௌரவர் பக்கம் நின்று போரிட்டவர்களில் உயிருடன் இருந்தவர்களில் கிருபரும், அஸ்வத்தாமன் மட்டுமே.[9] |
பரசுராமர் | ஜமதக்கினி-ரேணுகா தம்பதியர்களுக்கு பிறந்தவர் மற்றும் விஷ்ணுவின் 6வது அவதாரம் ஆவார். இவர் போர்க் கலையில் வல்லவர். சத்திரிய மன்னர் குலத்தை கொன்றவர். கலி யுகத்தின் இறுதியில் மீண்டும் தோன்றி கல்கியின் தற்காப்புக் குருவாக இருப்பார் என்று கல்கி புராணம் கூறுகிறது.[10] |
சில புராணங்கள் கூடுதலாக கீழ்கண்டவர்களை சிரஞ்சீவிகளாக கூறுகிறது.[11]
பெயர் | விளக்கம் |
---|---|
மார்க்கண்டேயர் | மார்க்கண்டேய புராணத்தை இயற்றியவர். பதினாறு வயதில் இறப்பார் என்ற விதியை, தீவிர சிவ பக்தியால், மரணத்தின் கடவுளான எமதர்மராஜனிடம் காப்பற்றப்பட்டவர். [12] |
காகபுசண்டர் | இராமரின் பரம பக்தன். இவர் காகம் வடிவம் எடுத்து, இராமாயணத்தை கருடணுக்கு கூறினார்.[13] |
ஜாம்பவான் | பிரம்மாவின் கொட்டாவியிலிருந்து தோன்றியவர். கரடிகளின் அரசன். இராமாயணத்தின் போது ஜாம்பவானுக்கு ஏற்கனவே ஆறு மன்வந்தரம் வயது ஆகியிருந்தது. இராமாயணக் காவியத்தில் சீதையைத் தேடும் முயற்சியில் இராமருக்கு உதவியவர்..[14] |
அகத்தியர் | ரிக் வேதத்தின் பல மந்திரங்களை இயற்றியவர். தமிழ் மொழி, சோதிடம் மற்றும் சித்த மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர்.[15] |
நாரதர் | பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவரும், தேவ ரிஷியும், விஷ்ணு பக்தரும் ஆவார். வீணை இசைத்துக் கொண்டே அனைத்து லோகங்களுக்கும் சஞ்சரிப்பவர் ஆவார். [16]இவர் பெயரில் நாரத புராணம் உள்ளது. |