சிரம்பான் 2
துணைநகரம் | |
---|---|
Seremban 2 | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°41′N 101°54′E / 2.683°N 101.900°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் |
அரசு | |
• நகராட்சி | சிரம்பான் மாநகராட்சி |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 62,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 70300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +06-601 2000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
சிரம்பான் 2 (மலாய்; ஆங்கிலம்: Seremban 2; சீனம்: 芙蓉 2) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்திற்கு துணைநகரமாக திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகும். முன்பு சிரம்பான் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு செம்பனை தோட்டத்தில் இந்த நகரம் அமைக்கப்பட்டு உள்ளது.
சிரம்பான் நகருக்கு மேற்கே உள்ள மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 218-ஆம் வெளியேற்ற முனையில் (EXIT 218) அமைந்திருக்கும் இந்த நகரத்தை சிரம்பான் மாநகராட்சி நிர்வகிக்கிறது. 2,300 ஏக்கர்கள் (9 km2) பரப்பளவு நிலத்தை உள்ளடக்கியது இந்த சிரம்பான் 2 நகரம்.
சிரம்பான் மாவட்ட நிர்வாக வளாகம், சிரம்பான் நீதிமன்ற வளாகம், சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் சிரம்பான் தீயணைப்பு மீட்புத் துறை தலைமையகம் போன்றவை சிரம்பான் 2 துணை நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.[2]
சிரம்பான் 2 துணைநகரம் தன்னகத்தே அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நகரமாகும். இதன் மக்கள்தொகை 62,000. இது ஒரு நவீன நகரத்தின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. நெகிரி செம்பிலானில் மிகவும் முற்போக்கான மற்றும் வெற்றிகரமான உருவாக்கங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் கட்டுமானங்கள் தற்போது 90% நிலையில் நிறைவடைந்த நிலையில் உள்ளன.[3]
சிரம்பான் சுங்கச் சாவடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், சிரம்பான் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை; ELITE எனும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை ; மற்றும் LEKAS எனும் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை போன்ற சாலைகள், கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா போன்ற முக்கியமான இடங்களுக்கு சிரம்பான் 2 துணைநகரத்தை மிகவும் அருகில் கொண்டு வந்துள்ளன.[4]
அண்மைய தேசிய கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சிரம்பான் 2 நுழைவாயிலாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பு திட்டத்தில் போர்டிக்சன், நீலாய் மற்றும் லாபு ஆகிய இடங்களும் சேர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான மத்திய அரசின் முயற்சிகளில் இதுவும் ஒரு பகுதியாகும்.[5]