சிராணி பண்டாரநாயக்கா | |
---|---|
இலங்கையின் 43வது தலைமை நீதிபதி | |
பதவியில் 28 சனவரி 2015 – 29 சன்வரி 2015 | |
நியமிப்பு | மைத்திரிபால சிறிசேன |
முன்னையவர் | மொகான் பீரிஸ் |
பின்னவர் | க. சிறீபவன் |
பதவியில் 18 மே 2011 – 13 சனவரி 2013 | |
நியமிப்பு | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | அசோகா டி சில்வா |
பின்னவர் | மொகான் பீரிஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1958 (அகவை 66) குருணாகல், இலங்கை |
துணைவர் | பிரதீப் காரியவாசம் |
பிள்ளைகள் | சவீன் |
முன்னாள் கல்லூரி | அநுராதபுரம் மத்திய கல்லூரி கொழும்பு பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகம் |
தொழில் | கல்விமான், வழக்கறிஞர் |
சிராணி பண்டாரநாயக்கா (Shirani Bandaranayake, ஷிராணி பண்டாரநாயக்கா, பிறப்பு: ஏப்ரல் 1958) இலங்கையின் 43 வது மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதலாவது பெண்ணும் ஆவார். கொழும்பு பலகலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் தலைவராக இருந்த இவர் முதன் முறையாக 1996 ம் ஆண்டு மீயுயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். இவர் 2011 மே 18 இல் தலைமை நீதிபதியாக சனாதிபதி மகிந்த ராசபக்சாவால் நியமிக்கப்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய முறையில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, 2013, சனவரி 13 இல் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்[1] புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன சிராணியின் பதவி நீக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி 2015 சனவரி 28 அன்று அவரை மீண்டும் 43வது தலைமை நீதிபதியாக நியமித்தார்.[2] இவர் 2015 சனவரி 29 அன்று அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார்.[3]
அதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவிநெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று இவர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு சனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இவருக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கையொப்பம் இட்ட குற்றச்சாட்டுக்கள் (impeachment) தொடுக்கப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு திசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது.[4][5] இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிறநாட்டு அரசுகள், இலங்கையின் வழக்குரைஞர் கழகம் (bar association) உட்பட்டோர் கடுமையாக விமர்சித்தன.[6] ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் சிராணியின் வீட்டுக்கு முன் ஆர்பாட்டம் நடத்தினர்.[7] சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.[8] 2013 சனவரி 13 அன்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிராணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து நீக்கினார்.[9][10] அவருக்குப் பதிலாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[11][12] 2015 அரசுத்தலைவர் தேர்தலில் ராசபக்ச தோவியடைந்து மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். சிராணி பண்டாரநாயக்கா சட்ட விதிகளுக்கு அமைய பதவியில் இருந்து அகற்றப்படவில்லை எனவும், அது சட்டத்துக்கு முரணானது என்றும் கூறி சிராணியின் பதவியை மீளப்பெற்றுக்கொடுத்தலை 100 நாள் திட்டங்களுள் ஒன்றாக எடுத்து அவரை பிரதம நீதியரசராக 2015 சனவரி 28 அன்று மீள்வித்தார்.[13][14][15] பண்டாரநாயக்கா பதவியில் அமர்ந்து அடுத்த நாள் சனவரி 29 அன்று தனது பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார்.[16][17][18] இதனை அடுத்து சிறீபவன் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக 2015 சனவரி 30 அன்று மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.[19][20][21]