சிரான் உபேந்திர தெரணியகல (Siran Upendra Deraniyagala) இலங்கையைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் இயக்குநர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார். அத்துடன், இலங்கையில் தொல்லியல் தொடர்பிலான பல்வேறு பொறுப்புக்களையும் இவர் வகித்துள்ளார்.
சிரான் தெரணியகல 1942 மார்ச் முதலாம் தேதி இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் போல் ஈ. பி. தெரணியகலவும் ஒரு புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர். இவரது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் இவர் புனித தோமஸ் கல்லூரியில் பெற்றார். பின்னர் 1963, 1966ம் ஆண்டுகளில் கேம்பிரிட்சில் கட்டிடக்கலை, சமசுக்கிருதம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டனில் இருந்த தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியலில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார்.[1]
இலங்கை திரும்பிய சிரான் தெரணியகல, 1968ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணியில் அமர்ந்தார். அக்காலத்தில் அறிவியல்சார் அகழ்வாய்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1988ல் ஆவார்டில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இதற்காக இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையும், தொடர்ந்த இது தொடர்பான வெளியீடும் இலங்கையில் மட்டுமன்றி ஏனைய தென்னாசிய நாடுகளின் வரலாற்றுக்கு முந்தியகால தொல்லியல் ஆய்வுகள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.[1]