மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. மட வளாகம் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள சிவாலயங்களைக் கொண்டுள்ளது.[1] துங்கா நதியின் வடக்குக் கரையில் உள்ள மூன்று முக்கிய சன்னதிகள் உள்ளன. தெற்குக் கரையில் மடாதிபதியின் குடியிருப்பும், முந்தைய மடாதிபதிகளின் அதிஷ்டான சன்னதிகளும், சத்வித்யா சஞ்சீவினி சம்ஸ்கிருத மஹாபாதசாலாவும் உள்ளன.
அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் (கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும்.[2]
ஸ்ரீஆதி சங்கரர், இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது, சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் கருவுற்ற தவளையை வெப்பமான வெயிலில் இருந்து காக்க ஒரு பாம்பு குடை போல் காத்து நிண்றதைக் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அகிம்சை என்பது ஒரு புனித ஸ்தலத்திற்கு ஏற்றது எனக் கருதி, ஸ்ரீ ஆதி சங்கரர் தனது முதல் பீடத்தை சிருங்கேரியில் நிறுவ முடிவு செய்தார். சிருங்கேரி விபாண்டக முனிவரின் மகனான ரிஷ்யசிருங்க முனிவருடனும் தொடர்புடையது.
சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியாரை ஶ்ரீ ஆதி சங்கரர் நியமித்தார். தற்போதைய 36 வது ஜகத்குரு ஆச்சார்யா ஜகத்குரு பாரதி தீர்த்த மஹாஸ்வாமி ஆவார். இவரது குரு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமி ஆவார்.
சிருங்கேரி மடத்தின் முதல் தளத்தில் நூலகம் ஒன்று உள்ளது. இதில் பண்டைய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சுமார் 500 பனை ஓலைச் சுவடிகளும், மிகப்பெரிய காகிதக் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சமஸ்கிருதத்தில் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதிகள் அத்வைத தத்துவத்தும், சமஸ்கிருத இலக்கணம், தர்மசூத்திரங்கள், நெறிமுறைகள் மற்றும் கலைகள் போன்ற செவ்வியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.[3][4]