சிரோகி ஆடு (Sirohi goat) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் தோன்றிய ஒரு சிறிய, நடுத்தர ஆட்டு இனம் ஆகும்.
சிரோகி ஆடுகள் அஜ்மீர், பில்வாரா மாவட்டம், டோங்கு மாவட்டம், ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளன. இந்த ஆடுகள் ராசத்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் 10 முதல் - 200 வரையிலான எண்ணிக்கையில் மந்தைகளாக காணப்படும். [1]
சிரோகி ஆடுகள் இளம் பழுப்பு அல்லது அடர்பழுப்பு நிறத்தில் உள்ளன. அரிதாக சில முற்றிலும் வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. பெரும்பாலான சிரோகி ஆடுகள் நடுத்தர அளவில் தட்டையான இலை போன்ற தொங்கிய காதுகள் கொண்டிருக்கின்றன.[2]
இந்த இன ஆடுகள் தேவ்கர்த், பர்பாத்சிறீ, அஜ்மீரி போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.
சிரோகி ஆடுகள் இறைச்சி, பால் என இரு தேவைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் தரமில்லாத வளர்ப்பு நிலையிலும் எடை அதிகரிப்பு, பால் சுரப்பு கொண்டதாக உள்ளன. இவை பல்வேறு கால நிலைகளில் நோய்களைத் தாங்கி வளரும் ஆற்றல் கொண்டவை. சிரோகி ஆடுகள் முக்கிய இனப்பெருக்க நிலப்பகுதியாக ராஜஸ்தானின் ஆரவல்லி மலைகள் அமைந்துள்ளது என்றாலும், இவை பரவலாக மற்ற பல இந்திய மாநிலங்களிலும் உள்ளன. [3] சராசரியாக 90% ஆடுகள் ஒற்றைக் குட்டிகளையும், மீதமுள்ள 10% இரட்டை குட்டிகளையும் ஈனுகின்றன.