சிர்பூர் ஏரி (Sirpur Lake) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர்-தார் சாலையில் அமைந்திருக்கிறது. ஏரியின் மொத்த பரப்பளவும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியும் சேர்ந்து மொத்தம் 800 ஏக்கர் (சுமார் 3.6 சதுர கிலோமீட்டர்) பரப்பளவாகும். இந்த ஏரி இந்தூர் நகராட்சி ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும்.
சிர்பூர் ஏரி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தூர் மாநிலத்தின் ஒல்கர்களால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் மற்றும் அரச வீடுகள் அழிந்த பிறகு, ஏரியைச் சுற்றி மதத் தளங்கள் ஏராளமாக வளரத் தொடங்கின. பல ஆண்டுகளாக இதன் அருகில் வசிக்கும் மக்களால் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது. மீன்பிடித்தல், வேட்டையாடுதல், மாடு மேய்த்தல், கழிவுகளை கொட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஏரியின் சூழலியலை கிட்டத்தட்ட அழித்துவிட்டன.[1]
குறிப்பிடத்தக்க பறவை வாழ்விடமாக இந்த ஏரியை இந்தூரின் ஒல்கர்களால் அங்கீகரித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்தூரின் புகழ்பெற்ற பத்மசிறீ விருது பெற்றவருமான புகைப்படக் கலைஞர் பாலு மோண்டே ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கினார். முதலில் தனியாகவும் பின்னர் அவரது நண்பர்களுடன் இணைந்தார். குறிப்பாக, அபிலாசு காண்டேகர். மாண்டே மற்றும் காண்டேகர் ஆகியோர் இணைந்து 1992 ஆம் ஆண்டு தி நேச்சர் வாலண்டியர்சு என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவினர். முதன்மையாக ஏரியின் சூழலியலை மீட்டெடுத்து அதை சிறந்த பறவைகள் வாழும் இடமாக உருவாக்கினர்.[2][3]
ஏரி மீட்கப்பட்டதால், அது பல பறவை இனங்களின் தாயகமாக மாறியது. மங்கோலியா மற்றும் சைபீரியாவிலிருந்து சிர்பூரில் குளிர்காலத்திற்காக பறவைகள் இடம்பெயர்ந்தன. ரத்தி செல்டக் உட்பட புலம்பெயர்ந்த பறவைகள் பல வரத் தொடங்கின. சிர்பூரின் பறவைகள் என்ற புத்தகத்தில் இங்கு மொத்தம் 130 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.[4]
இந்த ஏரி 2015 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் 19 முக்கியமான பறவைப் பகுதிகளில் ஒன்று என பன்னாட்டு பறவைகள் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்டது.[3][5][6]
இந்தூருக்கு அருகிலுள்ள மற்றொரு பறவைகள் சரணாலயம் யசுவந்த் சாகர் ஆகும்.
சிர்பூர் ஏரியின் சூழலியல் பற்றி மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கற்பிப்பதற்காக ரூ.2.5 கோடி செலவில் ஒரு விளக்க மையம் நிறுவப்படுகிறது.[7]