சிறீ விஷ்ணு | |
---|---|
2019இல் சிறீ விஷ்ணு | |
பிறப்பு | Rudraraju Vishnuvardhan[1] 29 பெப்ரவரி 1984[2][3] அந்தர்வேதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[4] |
படித்த கல்வி நிறுவனங்கள் | காந்தி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், விசாகப்பட்டினம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது வரை |
சிறீ விஷ்ணு (Sree Vishnu) (பிறப்பு உருத்ரராஜு விஷ்ணுவர்தன் ; 29 பிப்ரவரி 1984) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றும் ஓர் இந்திய நடிகராவார். சிறு சிறு வேடங்களில் தோன்றிய பிறகு, விஷ்ணு பிரேமா இஷ்க் காதல் (2013) என்ற படத்தில் நடித்தார். பின்னர் இவர் செகண்ட் ஹேண்ட் (2013), அப்பட்லோ ஒகடுண்டேவாடு (2016) போன்ற படங்களில் தோன்றினார். 2018ஆம் ஆண்டில், உன்னதி ஒகேட்டே ஜிந்தகி (2017) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5]
சிறீ விஷ்ணு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதிபாலத்தில் பிறந்தார். இவர் விசாகப்பட்டினத்தின் காந்தி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டு வரை ஐதராபாத்தில் இணையத்தள வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு இவர் திரைப்படத் தொழிலில் ஈடுபட தனது பணியை விட்டுவிட்டு உதவி இயக்குநரானார்.[6]
கல்லூரியில் இருந்தபோது இவர் நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் 19 வயதுக்குட்பட்ட ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.[7] விஷ்ணு சக நடிகர் நர ரோகித்தின் நண்பராவார். மேலும், அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.[8]
விஷ்ணு பல குறும்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று, பவன் சாதினேனி இயக்கிய "பெவர்ஸ்", யூடியூப்பில் பிரபலமானது. பாணம், சோலோ ஆகிய படங்களிலி ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில், பிரேமா இஷ்க் காதல் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[9] 2014 இல், இவர் உள்துறை அமைச்சரின் மகனாக நர ரோகித்தின் "பிரதிநிதி" என்ற படத்தில் நடித்தார்.[9] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கை இவரது "செகண்ட் ஹேன்ட்" (2013) படத்தின் மதிப்பாய்வில், "விஷ்ணு வசனம் பேசுவதில் பிரகாசிக்கிறார்" என்று எழுதியது.[10]
வேறு சில சிறிய வேடங்களைத் தொடர்ந்து, 2016 இல் இவர் அப்பட்லோ ஒகடுண்டேவாடு படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[9][11]