சிறீநாதன் அல்லது ஸ்ரீநாத்ஜி கண்ணன் ஏழு வயதுப் பாலகன் வடிவில், வடநாட்டு நாதத்துவரை (நாத்வாரா) தலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருவுருவம் ஆகும்.[1] இராஜஸ்தான் மாநிலம், உதயப்பூருக்கு வடகிழக்கே 48 கி.மீ தொலைவில், நாதத்துவரை அமைந்துள்ளது. வல்லப செம்பெருந்தாயத்து புஷ்டி மார்க்கிகளின் பிரதான இறைவன் சிறீநாதனே!
கோவர்த்தன மலைப் பகுதியில், முகமும் கரங்களும் தெரிய, உடல் புதைந்த நிலையில் காணப்பட்ட சிறீநாதனின் திருவுருவை, விரஜாபூமியில் வதிந்த மக்கள் கண்டு, மாதவேந்திர புரி அடிகள் தலைமையில் சென்று எடுத்து வந்து அதை வழிபட ஆரம்பித்ததாக சில மரபுரைகள் சொல்கின்றன. இந்த மூர்த்தியின் தொல்பெயர் "தேவதாமன்" (தேவனை - இந்திரனை வென்றவன்) என்று அமைந்திருந்தது.[2] பிற்காலத்தில், வல்லபருக்குக் கனவில் காட்சியளித்த அவ்விறைவன், தன்னை வழிபடுமாறு கூற, அவரால், "கோபாலன்" எனப் பெயர் சூட்டப்பட்டு, "கோபால்பூர்" எனப் பெயர் சூட்டப்பட்ட நகரில் அவனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.[3] அவருக்குப் பின் வந்த அவர் மகன் விட்டலநாதரே, இவ்விறைவனுக்கு "சிறீநாதன்" என்ற பெயரை இறுதியில் சூட்டினார்.
முகலாயப் படையெடுப்பின் போது, பாதுகாப்புக் கருதி, இம்மூர்த்தம் விரஜா பூமியிலிருந்து அகற்றப்பட்டு, இன்று நாதத்துவரை என்றறியப்படும் சிகாத் கிராமத்தில் 1672ஆம் ஆண்டு கொணர்ந்து வைக்கப்பட்டது.[4] 18ஆம் நூற்றாண்டு வரை, தொடர்ச்சியான அரசியல் குழப்பநிலைகளால், சிறீநாதனை உதயப்பூருக்கும் அடிக்கடி இடம்மாற்ற வேண்டி நேரிட்டது எனினும், இராஜபுதன அரசர்களின் தொடர்ச்சியான ஆதரவால், சிறீநாதனின் வழிபாடுகளில் குறையேதும் நிகழவில்லை.
கரும்பளிங்குக் கல்லில் புடைப்புச் சிற்பமாக, கோவர்த்தன மலையைத் தூக்குமாற் போல், கையை மேலே உயர்த்திய நிலையில் சிறீநாதர் காட்சியருள்கிறார். "சிபுக்" என்றறியப்படும் பெரிய வைரக்கல்லொன்று அவரது இதழ்களின் கீழே காட்சியளிக்கிறது. பசுக்கள், சிங்கம், பாம்பு, மயில்கள் என்பன அவர் அருகே நின்றுகொண்டிருக்கின்றன. என்றோ ஒருநாள், இங்கு வீற்றிருக்கும் சிறீநாதர் மீண்டும் கோவர்த்தனத்துக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என்பது இங்குள்ள ஐதிகம்.
அடிக்கடி இடம்பெயர்வுக்கு ஆனதால், தேரொன்றும், சமையலறை, களஞ்சியம், தாம்பூலம் முதலானவை எல்லாம் சிறீநாதன் ஆலயத்தில் தயாராக இருந்தன. ஒரு வீட்டில் இருக்கும் பொருட்களெல்லாம் அங்கு தயார்நிலையில் இருந்ததால், அது "சிறீநாதரின் வீடு" எனப் பொருள்பட செல்லமாக "ஸ்ரீநாத்ஜி கீ ஹவேலி" என்று அழைக்கப்பட்டது.
வல்லபரின் பரம்பரையில் வந்ததாகச் சொல்லப்படும் "குலர்" எனும் பூசாரிகளே இங்கு பூசைகளில் ஈடுபடுகின்றனர். ஏழு வயதுப் பாலகனாகவே சிறீநாதன் கருதப்படுவதால், நீராட்டல், ஆடையணிவித்தல், உணவளித்தல் முதலிய செயற்பாடுகள், சற்று வித்தியாசமாக அதேவேளை ஒரு குழந்தைக்குத் தாய் செய்வது போல உண்மையாக நிகழ்த்தப்படுகின்றன. ஒருநாளில் எட்டுத்தடவை திறக்கப்படும் சிறீநாதனின் ஆலயம், ஆரத்திகளுக்கும் சிங்காரம் என்றழைக்கப்படும் எட்டு வகையான அலங்காரங்களுக்கும் புகழ் பெற்றது. ஆலயம் மூடப்பட்டிருக்கும் தருணங்களில் சின்னக்கண்ணன் தன் ஆயர்குலத் தோழர்களுடன் விளையாடச் சென்று விடுவதாக ஐதிகம்.
புஷ்டி மார்க்கம் பரந்துள்ள எல்லா இடங்களிலும் சிறீநாதனுக்கு ஆலயங்கள் எழுந்துள்ளன. பாகித்தானின் சிந்து பகுதி, கோவா, ரசியா, ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலான பல இடங்களிலும் சிறீநாதன் "ஹவேலி"கள் அமைந்துள்ளன.