சிவேயி என்பவர்கள் மங்கோலிய மக்கள் ஆவர். இவர்கள் தூரக் கிழக்கு மங்கோலியா, வடக்கு உள் மங்கோலியா, வடக்கு மஞ்சூரியா மற்றும் ஒக்கோத்ஸ்க் கடற்கரைக்கு அருகில் இருந்த பகுதிகளில் வாழ்ந்தனர். வடக்கு வேயி அரசின் காலம் முதல் 1206ஆம் ஆண்டு செங்கிஸ் கான் தலைமையின் கீழ் மங்கோலியர்கள் எழுச்சியடைந்தது வரை சிவேயி மக்களைப் பற்றி குறிப்பிடும் பதிவுகள் காணப்படுகின்றன. செங்கிஸ் கானின் காலத்தில் மங்கோலியர் மற்றும் தாதர் ஆகிய பெயர்கள் அனைத்து சிவேயி பழங்குடியினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.[1][2]
சிவேயி மங்கோலியர்கள் தங்களுக்குத் தெற்கிலிருந்த கிதான் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர். மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கில் இருந்து வந்த அழுத்தத்தின் விளைவாக சிவேயி மக்களால் ஒன்றிணைந்த பேரரசை என்றுமே நிறுவ இயலவில்லை. சிவேயி மக்கள் பழங்குடியினத் தலைவர்களால் தலைமை தாங்கப்பட்ட நாடோடிக் கூட்டமைப்புகளாகவே தொடர்ந்தனர். சில சமயங்களில் துருக்கியர்கள், சீனர்கள் மற்றும் கிதான்களிடம், அரசியல் சூழ்நிலையின் மாற்றத்திற்கு ஏற்ப அடிபணிந்தவர்களாகத் திகழ்ந்தனர். தாங் அரசமரபின் காலத்தில் இருந்த 20 சிவேயி பழங்குடியினங்களில் மெங்வு சிவேயியும் ஒரு பழங்குடி இனமாகும். இவர்கள் லியாவோ அரசமரபின் காலத்தில் மெங்கு என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பொதுவாகச் செங்கிஸ் கானின் மங்கோலியர்களின் மூதாதையர்களாகக் கருதப்படுகின்றனர். மெங்வுவைக் குறிக்கப்பயன்படுத்தப்படும் தற்போதைய கொரிய உச்சரிப்பானது மங்கோல் ஆகும். சீன மொழியில் இன்றும் மங்கோலியாவானது மெங்கு என்று தான் அழைக்கப்படுகிறது.