சீக்கியம் தொடரின் ஒரு பகுதி |
சீக்கியம் |
---|
![]() |
சீக்கிய அலைந்துழல்வு (Sikh diaspora) வழமையான பஞ்சாப் பகுதியிலிருந்து தற்கால பஞ்சாபி சீக்கியரின் புலம் பெயர்ந்து வாழ்தலைக் குறிக்கும். இவர்களது சமயம் சீக்கியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக பஞ்சாப் பகுதி சீக்கியத்தின் தாயகமாக விளங்குகின்றது. சீக்கிய அலைந்துழல்வு பெரும்பாலும் பஞ்சாபி அலைந்துழல்வின் உட்கணமாகும்.[2]
1849இல் சீக்கியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கைப்பற்றிய பிறகே சீக்கியர்கள் புலம் பெயரத் தொடங்கியதாக பெரிதும் கருதப்படுகின்றது. சீக்கிய அலைந்துழல்வின் புகழ்பெற்ற நபராக சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசா துலீப் சிங் உள்ளார்; பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இவரை வாழ்நாள் முழுமைக்கும் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார். துலீப் சிங்கின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சாபிலிருந்து சீக்கியர்களின் புலம் பெயர்வு வீதம் கூடியது. இருப்பினும் கடந்த 150 ஆண்டுகளில் அவர்கள் புலம் பெயர்ந்த இடங்கள் மாறி வந்துள்ளது. சீக்கிய புலம்பெயர்வு சீக்கியர்களுக்கு அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தைத் தந்துள்ளது.
உலகளவில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீக்கியர்கள் உலகின் மிகப் பெரிய அமைப்புசார் சமயங்களில் ஐந்தாவதான சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் சீக்கியர்கள் 0.39%[3] ஆக உள்ளனர்; இவர்களில் 83% இந்தியாவில் வாழ்கின்றனர். இந்திய சீக்கிய சமூகத்தில் 19.6 மில்லியன், அதாவது 76% வட இந்திய மாநிலமான பஞ்சாபில் வாழ்கின்றனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராக 65% விழுக்காடு வாழ்கின்றனர். 200,000க்கும் கூடுதலானவர்கள் அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராட்டிரம், உத்தராகண்டம் மற்றும் சம்மு காசுமீரில் வாழ்கின்றனர்.[4]
இந்திய மரபிலிருந்து தனிப்பட்ட சீக்கிய அடையாளம் அரசியல்ரீதியாக 1606இல் ஐந்தாம் சீக்கிய குரு குரு அர்ஜன் தேவின் உயிர்க் கொடையை அடுத்து நிறுவப்பட்டது; இதனை உறுதிப்படுத்துமாறு 1699இல் குரு கோவிந்த் சிங் நிறுவிய 'மெய்யான' உடன்பிறப்புரிமை அல்லது கால்சா (ਖ਼ਾਲਸਾ) அமைந்தது.[5] எனவே 400 ஆண்டுகளாகவே சீக்கியர்களின் வரலாறு உள்ளது. குருக்களின் காலத்தில் சீக்கியர்களின் குடிபெயர்வு தற்கால இந்தியா, பாக்கித்தான் எல்லைகளுக்குள்ளாகவே, குறிப்பாக பஞ்சாப் பகுதியின் சீக்கிய பழங்குடி மையப்பகுதிக்குள்ளேயே இருந்தது. சீக்கிய சிற்றரசுகளின் உருவாக்கமும் சீக்கியப் பேரரசு (1716–1849) வளர்ச்சியும், அடுத்து லடாக், பெசாவர் போன்று தாங்கள் வென்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் இந்தப் பெயர்வுகள் தற்காலிகமானதாகவும் நிலையற்றதாகவும் இருந்தன; சீக்கியப் பேரரசின் மாறிவந்த எல்லைகளைப் போன்று இவர்களது வாழ்விடமும் மாறி வந்தது. சீக்கியப் பேரரசு காலத்தில் சீக்கிய மகாராசா ரஞ்சித் சிங்கைக் குறித்து அறிய பிரான்சின் முதலாம் நெப்போலியன், பிரித்தானியர் முயன்றதால் இருபுற புலம்பெயர்வு நடைபெற்றது.[6]