சீமா | |
---|---|
2014 இல் 61 வது தென்னிந்தியத் திரைப்பட பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சீமா | |
பிறப்பு | சாந்தகுமாரி 22 மே 1957 |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | சாந்தி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1973 முதல் தற்போது வரை |
பெற்றோர் | மாதவன் நம்பியார், வசந்தி |
வாழ்க்கைத் துணை | ஐ. வி. சசி (தி. 1980–2017) |
பிள்ளைகள் | அனு, அனி |
சீமா (Seema) 1957 மே 22 இல் பிறந்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்கள், 20 தமிழ்ப் படங்கள், ஏழு தெலுங்குப் படங்கள், நான்கு கன்னடப் படங்கள் ஆகியவற்றிலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது 14 ஆவது வயதில் நடனமாடுபவராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் லிசா பேபி இயக்கத்தில் நிழலே நீ சாட்சி என்ற படத்தில் ஒரு நாயகியாக நடித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அப்படம் நடிகர் விஜயன், விது பாலா ஆகியோர் நடிப்பில் அதே பெயரில் வெளிவந்தது.
தனது 19 ஆவது வயதில் நாயகியாக தனது முதல் படமான இயக்குநர் ஐ. வி. சசியின் இயக்கத்தில் வெளிவந்த "அவளுட ராவுகள்" என்ற படத்தில் அறிமுகமானார்.[2] சீமா மிக அதிகமானப்படங்களில் நடிகர் ஜெயனுடன் நடித்துள்ளார், சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியுடன் 47 படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தனது "மஹாயானம்" படத்திற்குப் பிறகு சிறிது காலம் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். சீமா மீண்டும் 1998 ஆம் ஆண்டில் "ஒலிம்பியா அந்தோனி ஆடம்" என்றப் படத்தின் மூலம் திரைக்கு வந்தார். சீமா 1984 ஆம் ஆண்டிலும் 1985 ஆம் ஆண்டிலும் சிறந்த நடிகைக்கான கேரளா மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.[3]
சென்னையில் குடியேறிய மலையாளக் குடும்பத்தில் மாதவன் நம்பியார், வசந்தி ஆகியோருக்கு ஒரே மகளான சீமா சென்னை புரசைவாக்கத்தில் பிறந்தார். இவரது தந்தை தலச்சேரியைச் சேர்ந்தவர் மற்றும் தாயார் திருப்பூணித்துறை அம்பல மேட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை சென்னையில் டி. வி. எஸ். பார்சல் சர்வீஸில் பணிபுரிந்து வந்தார். சீமாவின் ஏழாவது வயதில் அவரது தந்தை தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டார். சீமா தனது தாயாருடன் கோடம்பாக்கத்தின் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தார்.[4] சென்னை, பி.என். தவான் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் படித்துள்ளார்.[5]
பிரபல மலையாலத் திரைப்பட இயக்குனர் ஐ. வி. சசியைத் 1980 ஆகஸ்ட் 28 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனு மிலன் என்ற ஒரு மகளும் அனி சசி என்ற ஒரு மகனும் பிறந்தனர். அனு தனது தந்தையின் இயக்கத்தில் சிம்பொனி என்றப் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜயன் இவருக்கு சீமா எனப் பெயரிட்டார்.[6]