![]() 2008-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°49′12″N 101°4′12″E / 4.82000°N 101.07000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோலாகங்சார் மாவட்டம் |
தோற்றம் | 1830 |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 44,568 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 31100 |
மலேசிய தொலைபேசி எண் | 05 |
இணையதளம் | சுங்கை சிப்புட் நகராண்மைக் கழகம் |
சுங்கை சிப்புட் (ஆங்கிலம்: Sungai Siput; மலாய்: Sungai Siput; சீனம்: 打扪) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த நகருக்கு ’சங்கு நதி’ எனும் அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு. சுங்கை சிப்புட் துணை மாவட்டத்தின் பெயரும் சுங்கை சிப்புட் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தத் துணை மாவட்டம் கோலாகங்சார் மாவட்டத்தில் இருக்கின்றது.
சுங்கை சிப்புட் நகரம் மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை உறுதி செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தத் தொகுதி இந்தியர்களின் அரசியல் கோட்டையாக இருந்து வருகிறது.
சுங்கை (Sungai) என்றால் மலாய் மொழியில் ஆறு அல்லது நதி என்று பொருள். சிப்புட் (Siput) என்றால் நத்தை அல்லது சங்கு. அதனால், சுங்கை சிப்புட் என்பது நத்தை நதி அல்லது சங்கு நதி என்று பொருள் படுகிறது. இந்த ஆறு முன்பு மஸ்ஜீத் இந்தியா எனும் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்தது.
நகர வளர்ச்சியின் காரணமாக, அந்த ஆறு முறையாகக் கவனிக்கப் படாததால் இப்போது தூர்ந்து போய் விட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சுங்கை சிப்புட் ஆற்றில் நிறைய நத்தைகள் இருந்தன. அந்த நத்தைகளில் சிலவகை மனிதர்களின் உணவாகவும் அமைந்தன.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் சுங்கை சிப்புட் ஓர் அமைதியான நகரமாக விளங்கியது. 1948-ஆம் ஆண்டு அதன் வரலாற்றையே மாற்றி அமைத்தது. மலேசிய மக்கள் அனைவரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. [1]
1948 சூன் 16-இல் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் 12 ஆதரவாளர்கள் மூன்று பிரித்தானிய நிர்வாகிகளைச் சுட்டுக் கொன்றனர். காலை 8.30-க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் (Elphil Estate) நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.[2][3]
முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தூரத்தில் இருந்த பின் சூன் (Phin Soon Estate) தோட்ட நிர்வாகி ஜே.எம். எலிசன் (John Allison) என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் (Ian Christian) என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது.[4]
அந்தப் பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அதன் பின்னர், மலாயாவில் அவசர காலம் பிரகடனம் செய்யப் பட்டது.
அப்போது மலாயாவில் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவின் இயக்குநராக அரால்டு பிரிக்ஸ் (Harold Rawdon Briggs) என்பவர் இருந்தார். அவர் புதுமையான ஒரு திட்டத்தைச் செயல் படுத்தினார். அதன் பெயர் பிரிக்ஸ் திட்டம்.[5]
மலாயா நாடு காடுகளும் மலைக் குன்றுகளும் நிறைந்த ஒரு நாடு. இவற்றின் எல்லைப் பகுதிகளில் 500,000 கிராமப்புற மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தான் மலாயாக் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுப் பொருள்களை அச்சுறுத்தல் காரணமாக வழங்கி வருகின்றனர் என்பதை அரால்டு பிரிக்ஸ் உணர்ந்தார்.[6]
அரால்டு பிரிக்ஸின் திட்டம் இதுதான்: இந்த ஒதுக்குப்புற கிராம மக்களைப் புதுக்கிராமங்களில் புதுக் குடியேற்றம் செய்வது. அவ்வாறு குடியேற்றம் செய்யப் பட்டவர்களுக்கு போலீஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்குவது. இறுதியில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றது.[7]
ஆயுதம் இல்லாமல் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடித்த ஒரே நாடு மலாயா தான் என்று உலக வரலாறு சொல்கிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் கம்யூனிஸ்டுப் பயங்கரவாதிகள் மலாயாவில் தோற்கடிக்கப் பட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைப் பொருத்த வரையில் 1960-ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ‘கறுப்பு’ பட்டியலில் இருந்தது.[8]
மலேசிய அரசியலில் சில முக்கிய தலைவர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை இந்த சுங்கை சிப்புட் நகரத்தைச் சாரும். அமரர் துன் சம்பந்தன், துன் சாமிவேலு, டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், துன் லியோங் இயூ கோ, தோக் பாங்கு அமீட் போன்றவர்கள் இந்த நகரில் இருந்து தான் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர்.
துன் வீ. தி. சம்பந்தன் அவர்கள் சுங்கை சிப்புட்டில் பிறந்தவர். இவர் ம.இ.கா என்று அழைக்கப் படும் மலேசிய இந்திய காங்கிரசின் 5-ஆவது தலைவர். இவர் மலேசிய அரசாங்கத்தில் பல அமைச்சுகளில் அமைச்சர் பதவியை வகித்துள்ளார். மலேசிய வரலாற்றில் மிக முக்கிய நாளாக அமைவது மலேசியாவின் சுதந்திர தினம் ஆகும். மலேசியா 31 ஆகத்து 1957-இல் சுதந்திரம் அடைந்தது.
மலாயாவில் முதன்முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தின் கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மலேசிய அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக தேர்வு செய்யப் பட்டார்.
மலேசிய விடுதலை பெற, நாட்டின் மூன்று முக்கியத் தலைவர்கள் இலண்டனுக்குச் சென்று விடுதலை உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அந்த மூவரில் இந்தியர்களின் தலைவராக துன் சம்பந்தன் கையெழுத்திடார். இது மலேசிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஆகும்.
1960-ஆம் ஆண்டுகளில், மலேசிய இந்தியர்களை ஒன்றுபடுத்தி அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்து வெள்ளி சேகரித்தார். அந்த முதலீட்டைக் கொண்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்தார். தற்போது இந்தச் சங்கம் ஆசியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.
துன் ச. சாமிவேலு, சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியில் 1974-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008-ஆம் ஆண்டு வரை சுங்கை சிப்புட் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வந்தார். இவர் 29 ஆண்டுகள் மலேசியத் தகவல் தொழில்நுட்பம், மலேசியப் பொதுப் பணித் துறைகளில் அமைச்சராக இருந்து வந்தவர்.
இவருடைய தந்தை ஒரு பால் மரம் வெட்டும் தொழிலாளி. ஒரு சாதாரண தொழிலாளியின் மகன் ஒரு நாட்டின் அமைச்சராக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் துன் ச. சாமிவேலு. இவர் தொடக்க காலத்தில் கோலாலம்பூரில் ஒரு பேருந்து ஓட்டுபவராகப் பணியாற்றினார். பகலில் வேலை செய்து இரவு நேரங்களில் படவரைஞர் துறையில் உயர் கல்வி படித்தார். பின்னர், அவர் ஒரு கட்டிடக் கலைஞரானார்.
படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்தவர். 1959-இல் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1979-ஆம் ஆண்டில் அதன் தலைவர் ஆனார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.
மலேசியாவின் அனைத்துலக வாணிபத் துறை அமைச்சர் ரபிடா அஜீஸுக்கு (Rafidah Aziz) அடுத்ததாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தான் நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் சேவை செய்தவர் ஆவார். துன் சாமிவேலு 2010 டிசம்பர் 6 ஆம் தேதி ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். துணைத் தலைவராக இருந்த டத்தோ ஜி. பழனிவேல் அதன் தலைவராக பொறுப்பு ஏற்றாறார்.
துன் சாமிவேலு அவர்கள் சுங்கை சிப்புட் மக்களுக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். சுங்கை சிப்புட் நகரத்தை ஒரு நவீன நகரமாக மாற்றியமைத்த பெருமை இவரையே சாரும். சுங்கை சிப்புட் நகரத்திற்குள் நுழைவதற்கான சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றி அமைத்தார். இந்த நகரத்தின் சாலைகளின் இரு மருங்கிலும் நிறைய மரங்களை நட்டு வைக்கப் பட்டுள்ளன.
மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ், 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மக்கள் நீதிக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். இவர் 1999-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல், 2004-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டவர்.
இவர் மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.[2] சூலை 2011-இல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். 28 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். மலேசியாவில் தூய்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைத் தன் தொகுதி மக்களிடம் வழங்கினார். அப்போது அவர் கைது செய்யப் பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப் பட்டனர்.
இவர்கள் கமுந்திங் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் பல்லாயிரம் இந்தியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டினர்.[3] மலேசிய இந்துக் கோயில்கள், மாதாகோயில்களில் இவர்களுக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர் கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.[4][5]
டாக்டர் ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மூன்று மாதங்களில் ரத்துச் செய்யப் படும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.
டாக்டர் ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார்.[6] இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.
சுங்கை சிப்புட் நகரிலும் கோலாகங்சார் மாவட்டத்திலும் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன. கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 962 மாணவர்கள் பயில்கிறார்கள். 140 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[9]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD4109 | கோலாகங்சார் | SJK(T) Gandhi Memorial | காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி (கோலாகங்சார்) | 33000 | கோலாகங்சார் | 111 | 15 |
ABD4110 | சுங்கை சிப்புட் (வ) | SJK(T) Mahathma Gandhi Kalasalai | மகாத்மா காந்தி கலாசாலை (சுங்கை சிப்புட்) | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 437 | 33 |
ABD4111 | சுங்கை பூயோங் தோட்டம் | SJK(T) Ladang Sungai Biong | சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி | 33500 | சவுக் | 9 | 7 |
ABD4112 | காத்தி தோட்டம் | SJK(T) Ladang Kati | காத்தி தமிழ்ப்பள்ளி | 33500 | சவுக் | 27 | 7 |
ABD4113 | பாடாங் ரெங்காஸ் | SJK(T) Ladang Gapis | காப்பிஸ் தமிழ்ப்பள்ளி | 33700 | பாடாங் ரெங்காஸ் | 36 | 10 |
ABD4114 | பாடாங் ரெங்காஸ் | SJK(T) Ladang Perak River Valley | பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி | 33700 | பாடாங் ரெங்காஸ் | 23 | 8 |
ABD4115 | எங்கோர் | SJK(T) Enggor | எங்கோர் தமிழ்ப்பள்ளி | 33600 | கோலாகங்சார் | 28 | 11 |
ABD4116 | சங்காட் சாலாக் தோட்டம் | SJK(T) Ladang Changkat Salak | சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி | 31050 | சாலாக் வடக்கு Salak Utara |
44 | 10 |
ABD4117 | சுங்கை சிப்புட் தோட்டம் | SJK(T) Tun Sambanthan | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்} | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 43 | 9 |
ABD4118 | எல்பில் தோட்டம் | SJK(T) Ladang Elphil | எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 26 | 9 |
ABD4119 | சுங்கை ரெய்லா தோட்டம் | SJK(T) Ladang Sungai Reyla | சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 38 | 9 |
ABD4120 | டோவன்பி தோட்டம் | SJK(T) Ladang Dovenby | டோவன்பி தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 140 | 12 |