சுப்பு பஞ்சு | |
---|---|
பிறப்பு | சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம் 16 பெப்ரவரி 1969 இராயவரம், புதுக்கோட்டை, தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | ப. அரு. சுப்ரமணியம், பஞ்சு சுப்பு |
பணி | நடிகர், தயாரிப்பாளர், பின்னணிக் குரலாளர் மற்றும் நடன இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1988-1993 2007-தற்போது வரை |
சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam), சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் (பிறப்பு 16 பிப்ரவரி 1969) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.[1] இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார்.[2] 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார். சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
சுப்பு, நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனாகப் பிறந்ததைத் தொடர்ந்து குழந்தைப் பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருந்துள்ளார். பிரதாப் போத்தன் இயக்கத்தில் டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். ரசினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் பாலகோபி என்பவரின் கண்காணிப்பில் தனது தந்தையின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் உதவி தயாரிப்பு மேலாளராக அவரது தந்தையால் பணிக்கப்பட்டார். குரு சிஷ்யன் தொடங்கி 2007 ஆம் ஆண்டில் வெளியான மாயக் கண்ணாடி வரை அவர் தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் சுப்பு செயல் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து முதன்மை தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[3]
2002 ஆம் ஆண்டில், அகத்தியன் இயக்கத்தில் காதல் சாம்ராஜ்யம் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார்.[4] இருப்பினும், திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டிற்குப் பின்னர் அத்திரைப்படம் திரைக்கு வராமலே நின்று போனது. 2008 ஆம் ஆண்டில், சன் தொலைக்காட்சியில் வெளிவந்த அரசி தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். தனது படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒன்றிற்காக இயக்குநர் சமுத்திரக்கனி இவரை அணுகினார். அத்திரைப்படத்திற்காக ஒரு வார கால அளவே நடிக்க வேண்டிய அளவில் இருந்த கதாபாத்திரமானது இவரின் நடிப்பிற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால் விரிவாக்கப்பட்டது. இவரது முதல் தமிழ் திரைப்படம் சரோஜா (2008) திரைப்படமாகும். மு. இராசேசின் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ஆர்யாவின் சகோதரனாக நடித்தார்.[5] இத்திரைப்படம் 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக மாறியதைத் தொடர்ந்து சுப்புவிற்கு நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகளைத் தந்தது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த தூங்கா நகரம் திரைப்படத்தில் தாசில்தாராகவும்[5] அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் மற்றும் ஆண்மை தவறேல் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
இவர் முன்னதாக கைலாசம் பாலச்சந்தரின் தயாரிப்பில் உருவான விடுகதை படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.[6] பின்னணிக் குரல் தருபவராக சிவாஜி திரைப்படத்தில் சுமனுக்காகவும் கந்தசாமி திரைப்படத்தில் முகேஷ் திவாரிக்காகவும் பணியாற்றியுள்ளார்.[7]
இவர் ஹமாம் மற்றும் லெட்சுமி செராமிக்ஸ் பொருட்களுக்கான விளம்பரப் படங்களிலும் தோன்றியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் ஆயிரத்தில் ஒருவன் என்ற விளையாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.