சுமதி முத்தட்கர் | |
---|---|
பிறப்பு | 10 செப்டெம்பர் 1916 மத்தியப் பிரதேசம் |
இறப்பு | 28 பெப்ரவரி 2007 (அகவை 90) கொல்கத்தா |
சுமதி முத்தட்கர் (Sumati Mutatkar) (பிறப்பு: 1916 செப்டம்பர் 10 -இறப்பு: 2007 பிப்ரவரி 28) பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவைச் சேர்ந்த இவர், இந்திய பாரம்பரிய இசைப் பாடகரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார். மேலும் இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் இசைத் துறை பேராசிரியராகவும் இருந்துள்ளார். [1] நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் நாக்பூரைச் சேர்ந்த ஸ்ரீ சாவ்லா ராம் மற்றும் அமராவதியின் பண்டிட் வாமன்புவா ஜோஷி ஆகியோரிடமிருந்து தனது ஆரம்ப இசை பயிற்சியினைப் பெற்றார். பண்டிட் கோவிந்த ராவ் புர்ஹான்புர்கரிடமிருந்து துருபாத் மற்றும் தமர் பாடல்களைக் கற்றுக்கொண்டார்.
கலாச்சாரத் திட்டத்தின் பரப்புதலுக்கான புலனாய்வாளராக அவர் பண்பாட்டுத் துறையுடன் தொடர்புடையவர். அவர் தற்போது கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் கௌரவ இயக்குநராக உள்ளார். [2] இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான, சங்கீத நாடக அகாடமி இவரது வாழ்நாள் சாதனைகளுக்காக 1979ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [3] 1999இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கியது. [4] 2001-2002 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசால் இவருக்கு காளிதாஸ் சம்மன் விருது வழங்கப்பட்டது. [5]
இவர் அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த மத்திய மாகாணத்தில் உள்ள பாலகாட் என்ற இடத்தில் நீதிபதியான கஜனன் அம்பர்டேகர், மற்றும் சுந்தரி சுபேதர் ஆகியோரின் மூத்த குழந்தையாக பிறந்தார்..
குவாலியர் கரானாவின் பண்டிட் ராஜபய்ய பூச்ச்வாலே, ஆக்ரா கரானாவின் உஸ்தாத் விலாயத் உசேன் கான், மற்றும் ராம்பூர் கரானாவின் பண்டிட் அனந்த் மனோகர் ஜோஷி மற்றும் உஸ்தாத் முஷ்டாக் உசேன் கான் (இறப்பு 1964) உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்களிடமிருந்து பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார். [6] இருப்பினும், இவர் முதன்மையாக பண்டிட் எஸ்.என்.ரதன்ஜங்கரின் மாணவியாவார். [7] லக்னோவில் உள்ள மாரிஸ் கல்லூரி என்று அழைக்கப்படும் பட்கண்டே இசை நிறுவனத்தில் அவரிடம் பயிற்சி பெற்றார் .
நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, சுமதி முத்தட்கர் லக்னோவில் உள்ள மாரிஸ் கல்லூரி என்ப்படும் பட்கண்டே இசை வித்யாபீத்துக்கு மாறினார். அங்கிருந்து அவர் இறுதியில் இசையில் 'இந்திய இசையின் கலாச்சார அம்சம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் முனைவர் பட்டம் பெற்றார். [8]
1953ஆம் ஆண்டில், அகில இந்திய வானொலியில் இசை இயக்குநராக சேர்ந்தார். பின்னர் இசை துணைத் தயாரிப்பாளராகவும் ஆனார். அகில இந்திய வானொலியின் தேசிய நிகழ்ச்சிகள் மற்றும் இசை சம்மேலன்களில் பங்கேற்றார். இசை மாநாடுகளில் கலைஞராகவும் அறிஞராகவும் பங்கேற்றுள்ளார். பின்னர், 1968ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் நுண்கலை பீடத்தில் சேர்ந்தார். இறுதியில் 1981 செப்டம்பரில் அதன் தலைவராக ஓய்வு பெற்றார். இவர் தனது பணிக் காலத்தில், இசைத்துறையில் ஏராளமான ஆராய்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிட்டார். மேலும் இந்த விஷயத்தில் பல புத்தகங்களையும் வெளியிட்டார். [1]
இவர் மூச்சுக்குழாய் நோயினால் பாதிகப்பட்ட இவர் 2007 பிப்ரவரி 28, அன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 91ஆவது வயதில் இறந்தார். சாகும்வரை தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.