சுருதி ஹரிஹரன் | |
---|---|
பிறப்பு | சுருதி ஹரிஹரன் 2 பெப்ரவரி 1989 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | நடிகை, தயாரிப்பாளர், நடன அமைப்பாளர். |
சுருதி ஹரிஹரன் (Sruthi Hariharan) இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றுகிறார். திரைப்படங்களில் பின்னணி நடிகையாக பணிபுரிந்த பிறகு, நடிப்பதற்கு தொடங்கினார். கர்நாடகா மாநிலத் திரைப்பட விருது, இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு சிஐஎம்ஏ விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பெங்களூரு டைம்ஸ் என்ற இதழின் மிகவும் விரும்பத்தக்க பெண்மணி என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான சினிமா கம்பெனியில் அறிமுகமானார். கன்னட திரைத் துறையில் இவரது முதல் அறிமுகம் லூசியா என்ற திரைப்படத்தின் மூலம் ஏற்பட்டது. கோதி பன்ன சாதர்ண மைக்கட்டு, உர்வி, நதிச்சாரமி, பியூட்டிஃபுல் மனசுகளு போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக விமர்சனங்களும், பொதுமக்கள் இடையே அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. 2016 இல், இவர் கலாத்மிகா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.
இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தின் ஒரு தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] கர்நாடகாவின் பெங்களூருவில் வளர்ந்தார். இவரது தாய் மொழி தமிழ் ஆகும். இவர் சிசு கிரிஹா மாண்டிசோரி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் வணிக மேலான்மையில் பட்டம் பெற்றார். பரதநாட்டியத்திலும் சமகால நடனத்திலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார். தாய் மொழி தவிர, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.[3]
இவர் கலாசார நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டுள்ளார். கிறிஸ்தவக் கல்லூரியில் கலாச்சார குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் நாடக அரங்கிற்குச் சென்றார்.[4] இவர் நடன இயக்குநரான இம்ரான் சர்தாராவின் நடன குழுவில் சேர்ந்து, கன்னடத் திரைப்படத் தொழிலில் உதவியாளராகவும், நடன அமைப்பாளராகவும் பணிபுரிந்தார்.[4] இவர் மூன்று வருடங்களாக நடன அமைப்பாளராக இருக்கிறார். மேலும் பல பாடல்களில் தோன்றியுள்ளார்.[5]
2012 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படம் சினிமா கம்பெனியில் அறிமுகமானார். தெக்கு தெக்கோர தேசத்து மற்றும் கால் மீ @ ஆகிய இரண்டு மலையாள படங்களில் பணிபுரிந்துள்ளார்.[6] பிரான்சிஸ் இயக்கத்தில் வெளிவந்த கால் மீ @ என்ற படத்தில் இவர் ஒரு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்ணாக நடித்திருந்தார். அதே சமயத்தில் நந்துவின் தெக்கு தெக்கோர தேசத்து என்ற படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடித்திருந்தார்.[7] பவன் குமாரின் கன்னட படமான லூசியாவில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடுத்தர வர்க்கப் பெண் மற்றும் ஒரு திரைப்பட நடிகை என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார்.[8] மேலும் முதல் முறையாக தானே பின்னணியும் பேசியுள்ளார்.[9] லூசியா விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது, பின்னர் பல இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[10]
2018 ம் ஆண்டு கன்னடத் திரைப்படமான விஸ்மயா படப்பிடிப்பின்போது அர்ஜுன் சர்ஜா தன்மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சமூக ஊடகங்கள் மூலம் குற்றஞ்சாட்டினார். அர்ஜுன் மீது காவல் துறையினர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.[11]