சுரேன் ராகவன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
6-வது வட மாகாண ஆளுநர் | |
பதவியில் 7 சனவரி 2019 – 20 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
முன்னையவர் | ரெஜினால்ட் குரே |
பின்னவர் | பி. எஸ். எம். சார்லசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுரேன் இராகவன் 21 நவம்பர் 1961 |
குடியுரிமை | இலங்கையர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை சுதந்திரக் கட்சி |
முன்னாள் கல்லூரி | கென்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து |
தொழில் | கல்வியாளர் |
கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan, பிறப்பு: 21 நவம்பர் 1961) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.[1]
ராகவன் 2005 ஆம் ஆண்டில் கென்ட் பல்கலைக்கழக அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் ஜேம்ஸ் மெடிசன் அறக்கட்டளையின் புலமைப்பரிசில் பெற்று சேர்ந்தார். இலங்கையில் சமஷ்டி ஆட்சி குறித்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்த பின்னர் முதுநிலை கலைப் பட்டம் பெற்றார்.[2][3] 2008 ஆம் ஆண்டில் கென்ட் பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டம் பெற மற்றொரு ஜேம்ஸ் மெடிசன் அறக்கட்டளையின் புலமைப்பரிசில் பெற்றார். ஜேம்ஸ் மெடிசன் அறக்கட்டளை புலமைப்பரிசிலை இரண்டுமுறை பெற்ற ஒரேயொரு ஆசிய பிராந்திய மாணவரும் இவரே. அவர் 2008 முதல் 2011 வரை வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர் விருது திட்ட அறிஞராகவும், ஒன்ராறியோ மாணவர் உதவித் திட்ட விருதைப் பெற்றவராகவும் இருந்தார். Multimational Federaiism and Sinhala Buddhism. Is there a (In)compatibility? The Case of Ethnonationalism in Sri Lanka என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை தயாரித்த பின்னர் 2012 ஆம் ஆண்டில் கென்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2][4] 2012 இல் முனைவரானார்.[3][5]
ராகவன் செயிண்ட் பால் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும், பௌத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கான ஆக்ஸ்போர்டு மையத்தில் ஆராய்ச்சியாளராகவும், கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் வருகை ஆராய்ச்சி அறிஞராகவும் இருந்தார். அவர் Colombo School for Critical Studies இன் தேசிய இயக்குநராகவும் இருந்தார். OCIC, தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் ஆசிய சினிமா மையம் உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களுக்கு அவர் நடுவர் உறுப்பினராக இருந்துள்ளார். அவர் இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் ஏற்பாடு செய்தார்.
ராகவன் 2018 நவம்பரில் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும், அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானியாகவும் நியமிக்கப்பட்டார்.[3][6] 2019 சனவரியில் இவர் வட மாகாண ஆளுநராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.[7][8] வடமாகாணத்துக்கு ஆளுநராக நியமனம் பெற்ற முதலாவது தமிழரும் இவரே. 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகக் கேட்டுக் கொண்டதை அடுத்து சுரேன் இராகவன் 2019 நவம்பர் 20 இல் பதவி விலகினார்.[9][10]
சுரேன் ராகவன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணியின் தேசியப் பட்டியலில் இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் சேர்க்கப்பட்டார்.[11] தேர்தலை அடுத்து இராகவன் இலங்கை பொதுசன முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டு, 2020 ஆகத்தில் பதவியேற்றார்.[12][13][14]