சுல்தான்பேட்டை தோப்பு போர் (Battle of Sultanpet Tope) என்பது நான்காவது ஆங்கிலேய மைசூர் போரின் போது பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் மைசூர் அரசின் படைகளுக்கு இடையே 1799 ஏப்ரல் 5 மற்றும் 6 தேதிகளில் நடந்த ஒரு சிறிய நடவடிக்கையாகும். இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். [1]
1792 ஏப்ரல் 3 ஆம் தேதி, பிரிட்டிசு படை ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகில் முகாமிட்டது. ஆங்கிலேய இராணுவத் தளபதி அபெர்கிராம்பி என்பவர் தீவின் தென்மேற்குப் பகுதியில் முகாமிட்டு அந்த இடத்தை முற்றுகையிடத் தயாரானார். [2]
கார்ன்வாலிஸ் பிரபு ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டதிலிருந்து (1792) கோட்டைகளை வலுப்படுத்துவதில் சுல்தான் மிகுந்த கவனம் செலுத்தினார். ஆனால், கோட்டையின் வடமேற்கு பகுதியில் அவர் அமைத்திருந்த ஒரு இராணுவ நிலையைத் தவிர, அவரது கவனம் முக்கியமாக தெற்கு மற்றும் கிழக்கு பக்கங்களுக்கு திரும்பியது. [3]
காவிரி ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைத்திருந்த பாதுகாப்புப் பணிகள் அவ்வளவு வலுவாக இல்லை. இருப்பினும் அவை இரட்டை சுவர் மற்றும் பள்ளத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தன. பிரிட்டிசு இராணுவத்தை தடுக்க ஆழமான அகழி வெட்டப்பட்டது. சில கிராமங்கள் காலி செய்யப்பட்டன. மேலும் பல தோப்புகள் பாக்கு மரங்கள் மற்றும் கோகோ மரங்கள் போன்றவை திப்புவின் இராணுவத்திற்கு பாதுகாப்பு அளித்தன. [4] 1,700 கெஜம் (1,600 மீ) [4] தூரத்திற்குள், சுல்தான்பேட்டை என்ற இடத்தில் அமைந்திருந்த மரங்களால் சூழப்பட்ட தோப்பு திப்புவின் வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. இது பிரிட்டிசாரை மிகவும் எரிச்சலூட்டியது. [4] [5]
தளபதி பெயர்ட் இந்த தோப்பைத் அழித்து எதிரிகளை வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டார். ஆனால் ஏப்ரல் 4 மற்றும் 5 அன்று இரவு நேரத்தில் அவர் தோப்பை அடைந்தபோது அந்த இடத்தில் எவரும் இல்லாதைக் கண்டார். [4]
பகலில், மைசூர் துருப்புக்கள் இந்த நிலையை மீண்டும் கைப்பற்றின. எனவே அவற்றை வெளியேற்றுவது பிரிட்டிசு இராணுவத்திற்கு முற்றிலும் அவசியமாக இருந்ததால், ஏப்ரல் 5 ஆம் தேதி மாலையில் கர்னல் ஷே, மற்றும் கர்னல் வெல்லஸ்லி ஆகிய இருவரின் கீழும் படைகள் முற்றுகையிட்டு திப்புவின் படைகளைத் தாக்கினர். [6] [5]
வெல்லஸ்லியின் தலைமையில் கீழ் நான்கு படைப்பிரிவுகளுடனான இரண்டாவது தாக்குதல் ஏப்ரல் 6 காலை காலையில் தோப்பைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பிரிட்டிசு படைகள் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்குள் முன்னேற அனுமதித்தது [5] மேலும் தளபதி ஹாரிசு தனது முற்றுகை நடவடிக்கைகளை தொடர முடிந்தது. இராணுவம் ஏப்ரல் 7 அன்று அதன் இறுதி நிலையை எடுத்தது. [4]