சூரியநெல்லி வன்புணர்வு வழக்கு

சூரியநெல்லி வன்புணர்வு வழக்கு 1996இல் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி சிற்றூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தொடர்ந்து 40 நாட்களாக 42 ஆடவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. இந்த 40 நாட்களில் கேரளாவின் பல பகுதிகளுக்கும் அச்சிறுமி கொண்டு செல்லப்பட்டு வன்புணரப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மிகவும் அறியப்பட்ட, பெரும் பதவிகளில் இருப்பவர்களாவர். தற்போது மாநிலங்களவை துணைத்தலைவராக இருக்கும் பி.ஜே.குரியனும் இவர்களில் ஒருவர்.

இச்சிறுமி சனவரி 16, 1996இல் ஓர் பேருந்து நடத்துநரால் ஆசை காட்டப்பட்டு, பயமுறுத்தப்பட்டு, கடத்தப்பட்டு வன்புணரப்பட்டார். இதனைத் தொடர்ந்து வேறு இருவர் காவலில் வைக்கப்பட்டார்; இவர்களில் ஒருவர் பெண்மணி, மற்றவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இந்த இருவரும் இச்சிறுமியை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும், பிரபலமானவர்கள் உட்பட, வன்புணர ஏற்பாடு செய்தனர். பயப்பட்ட, அதிர்ச்சியடைந்த, நோயுற்ற சிறுமியை பெப்ரவரி 26 அன்று இவ்விருவரும் விடுவித்தனர். சிறிதளவு பணம் கொடுத்து அவளை இதனை யாரிடமும் கூறக்கூடாதென பயமுறுத்தினர்.[1]

1999இல் பொதுமக்கள் அழுத்தத்திற்கு பின்னர், இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு முதல் சிறப்பு நீதிமன்றத்தை நியமித்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை தலைமை ஆய்வாளர் சிபி மாத்யூ நடத்திய சிறப்புப் புலனாய்வில் குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

செப்டம்பர் 6, 2000இல் சிறப்பு நீதிமன்றம் 35 நபர்களுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கியது. முதல் குற்றவாளி, நடத்துநர் ராஜூவும் இரண்டாம் குற்றவாளி உஷாவும் 13 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்றனர்.தவிர அபராதத் தொகையும் பிற குற்றங்களுக்காக மேலும் நான்காண்டுகள் தண்டனையும் பெற்றனர். நான்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இருவர், முக்கிய குற்றவாளி வழக்கறிஞர் எஸ். எஸ். தர்மராஜன் உட்பட, காணாது போயினர்.

சனவரி 20, 2005இல் கேரள உயர் நீதிமன்றம் தண்டனை பெற்ற 35 பேரையும் விடுவித்ததுடன் தர்மராஜனையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றத்தையே இழைத்ததாக கூறி தண்டனையை ஐந்தாண்டுகளாக குறைத்தும் ரூ.50000 வரையிலான அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

பாதிக்கப்பட்ட சூரியநெல்லி சிறுமி பலமுறை தன்னை பி. ஜே. குரியன் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். குற்றச்சாட்டின்படி, குரியன் இவரை குமுளி விருந்தினர் மாளிகையில் வைத்து வன்புணர்ந்ததாகக் கூறினார். இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் ஏப்ரல் 4, 2007இல் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் குரியனை விடுவித்தது. இதற்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[2][3]

பெப்ரவரி 6, 2012இல் கேரளக் காவல்துறை வன்புணர்வால் பாதிக்கப்பட்டவரை ஓர் நிதிமோசடி வழக்கில் கைது செய்தது. 2010இல் குற்றம் சாட்டப்பட்டவர் செங்கணாச்சேரியில் விற்பனைவரித் துறையில் பணி புரிந்தபோது ரூ.2,26,000 மதிப்பளவில் மோசடி செய்ததாக வழக்கு பதிவானது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இப்பெண் பின்னர் கோட்டயத்திற்கு தண்டனை பணிமாற்றம் செய்யப்பட்டார். செங்கணாச்சேரி அமர்வு நீதிமன்றம் இவரை நீதிமன்றக் காவலில் வைக்க தீர்ப்பு வழங்கியது. இது இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வழக்கை சோடித்திருப்பதாக கருத்து நிலவுகிறது.

சனவரி 31, 2013 அன்று உச்ச நீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்து முற்றிலும் மீளாய்வு செய்ய திரும்பவும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பியது.[4] இந்த வழக்கில் பி.ஜே. குரியனையும் சேர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி உள்ளார்.[5][6][7][8][9][10] இதனிடையே மூன்றாம் குற்றவாளி தர்மராசன் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.[11][12]


இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2006ஆம் ஆண்டில், அச்சன் உறங்காத வீடு என்ற மலையாளத் திரைப்படம் வெளியானது.[13][14]

சான்றுகோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-22. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  2. http://www.indianexpress.com/news/suryanelli-sex-scam-sc-relief-for-exminister/240075
  3. http://www.ndtv.com/article/south/suryanelli-rape-case-cpm-demands-re-investigation-says-pj-kurien-should-resign-331933
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. http://english.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do?contentId=13349175&programId=1073750974&tabId=1&contentType=EDITORIAL
  6. http://www.deccanherald.com/content/302037/victim-still-haunted-rape-16.html
  7. http://www.ndtv.com/article/south/raped-by-42-men-in-40-days-sixteen-years-later-she-awaits-justice-311943?pfrom=home-lateststories
  8. http://www.indianexpress.com/news/happy-but-nightmare-returns-suryanelli-victim-s-mother/1067651/
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  11. http://www.ndtv.com/article/south/suryanelli-rape-case-kottayam-court-asks-dharmarajan-to-serve-life-term-331652
  12. http://news.oneindia.in/2013/02/16/suryanelli-case-convict-brought-to-kerala-remanded-1151705.html[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Handling a sensitive issue". Online edition of The Hindu. Friday, Mar 10, 2006 இம் மூலத்தில் இருந்து ஜூலை 21, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100721080117/http://www.hindu.com/fr/2006/03/10/stories/2006031000490200.htm. பார்த்த நாள்: February 11, 2013. 
  14. "Achan Urangatha Veedu".[தொடர்பிழந்த இணைப்பு]