செ. க. ஜானு (C. K. Janu, பிறப்பு 1970) ஓர் இந்திய சமூக ஆர்வலர் ஆவார்.[1]
இவர் கேரளாவில் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை மறுவிநியோகம் செய்ய வேண்டும் என்று 2001 முதல் போராட்டம் நடத்தி வரும் ஆதிவாசி கோத்ரா மகா சபையின் தலைவராகவும் உள்ளார். இந்த இயக்கம் தலித்-ஆதிவாசி நடவடிக்கை குழுவினைச் சார்ந்தது ஆகும். 2016 ஆம் ஆண்டில், இவர் ஒரு புதிய அரசியல் கட்சியான ஜனதிபத்ய ராஷ்டிரிய சபாவை துவங்கினார், மேலும் 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுல்தான்பத்தேரியிலிருந்து என்டிஏவின் ஒரு பகுதியாக போட்டியிட்டார்.[2] இவரது கட்சி 2018 இல் கூட்டணியினை விட்டு வெளியேறியது.[3]
ஜானு வயநாட்டிற்கு அருகில் உள்ள மனதவாடி எனும் ஆதிவாசி கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது வரலாற்றுப் பின்னணி காரணமாக இவர் ஆதியா என்று அழைக்கப்பட்டார். ஆதியா என்றால் அடிமை என்று பொருள் . இவர்கள் பெரும்பாலும் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். இவருக்கு எந்த முறையான கல்வியும் இல்லை ஆனால் வயநாட்டில் நடத்தப்பட்ட ஒரு எழுத்தறிவு பிரச்சாரத்தின் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.[4]
ஜானு தனது ஏழாவது வயதில், உள்ளூர் பள்ளி ஆசிரியர் வீட்டில் வீட்டு வேலைக்காரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு ஐந்து ஆண்டுகள் கழித்தார். 13 வயதிற்குள், இரண்டு ரூபாய் (3.5 அமெரிக்க சென்ட்) தினக்கூலிக்கு தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். பின்னர், இவர் தையல் கற்றுக் கொண்டு ஒரு சிறிய கடையைத் தொடங்கினார், அது நிதி நெருக்கடியால் மூடப்பட வேண்டியிருந்தது.[5]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரான இவரது மாமா பி.கே.காலனால் சி.கே.ஜானு ஈர்க்கப்ட்டு இடது சாரி கட்சியில் சேர்ந்தார்.[6] இவர் 1970 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய கேரள மாநில கர்சக தொழிலாளி சங்கத்தின் (KSKTU) மூலம் ஒரு ஆர்வலராக ஆனார், வயநாட்டில் திருநெல்லி காட்டில் ஒரு பழங்குடி எழுச்சியை வழிநடத்தினார், விரைவில் பழங்குடியினரின் குரலாக அடையாளம் காணப்பட்டார். இவர் 1987 வரை யூனியனின் பிரச்சாரகராக பணியாற்றினார். இவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும் இவர்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதற்கும் பழங்குடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) ஜானுவின் நிலைப்பாடு கட்சி அரசியலில் அனுபவத்தைப் பெற உதவியது. 2001 ஆம் ஆண்டில், ஜானு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு நடத்தி, நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலம் கோரி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு குடில் கெட்டி போராட்டத்தில் ஈடுபட்டார், அந்தப் போராட்டம் 48 நாட்கள் நீடித்தது.[5]
பிப்ரவரி 19, 2003 அன்று, ஜானு முத்தங்காவில் நில ஆக்கிரமிப்பு போராட்டத்தினையும் வழிநடத்தினார்.[7] அந்தப் போராட்டம் காவல் துறையினரின் வன்முறையில் முடிவடைந்தது, இதில் ஒரு காவல் துறை அதிகாரி மற்றும் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.[8] இது முத்தங்கா சம்பவம் என்று அறியப்பட்டது மற்றும் ஜானு சிறையில் அடைக்கப்பட்டார், இவர் மீது 75 வழக்குகள் தொடரப்பட்டன.[4]
சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த மூன்று வயது மகளை பழங்குடித் தலைவர் தத்தெடுத்து இவருக்கு சி. கே. ஜானகி என்று பெயரிட்டார். தாயும் மகளும் ஜானுவின் தாய் மற்றும் சகோதரியுடன் பனவள்ளியில் தங்கியுள்ளனர்.[9]