![]() | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||
|
சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று பனகல் அரசர் இரண்டாம் முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
1923 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[1][2][3][5]
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர்.
மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீதிக் கட்சி உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தது. நீதிக் கட்சித் தலைவர் தியாகராய செட்டியின் சர்வாதிகாரப் போக்கு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. செட்டி தெலுங்கர்களுக்கு மட்டும் பதவி அளித்தார் என்றக் குற்றச்சாட்டை எழுப்பிய பி. சுப்பராயன், ராமலிங்கம் செட்டியார், சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார் ஆகிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டனர். தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவும் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.[1][4][6][7]
31 அக்டோபர் 1923 இல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் மழை காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 17 தொகுதிகளிலிருந்து 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிகம் பேர் இதில் வாக்களித்தனர். மொத்தம் 36.2 சதவிகித வாக்குகள் பதிவாகின.[8][9][10] தேர்தல் முடிவுகள்:[8]
கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்டவர் | நியமிக்கப்பட்டவர் | மொத்தம் |
---|---|---|---|
நீதிக்கட்சி | 44 | 0 | 44 |
சுயாட்சி கட்சி | 11 | 0 | 11 |
சுயேட்சைகள் | 6 | 1 | 7 |
அரசு எதிர்ப்பாளர்கள் | 37 | 0 | 37 |
நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் | 0 | 11 | 11 |
நியமிக்கப்பட்ட ஏனையோர் | 0 | 17 | 17 |
மொத்தம் | 98 | 29 | 127 |
வகுப்பு வாரியாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல்:[8]
கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்டவர் | நியமிக்கப்பட்டவர் | மொத்தம் |
---|---|---|---|
பிராமணர் | 13 | 1 | 14 |
பிராமணரல்லாதோர் | 61 | 8 | 69 |
தாழ்த்தப்பட்டோர் | 0 | 9 | 9 |
முஸ்லீம்கள் | 13 | 1 | 14 |
இந்திய கிருத்துவர்கள் | 5 | 2 | 7 |
ஐரோப்பியர்/ஆங்கிலோ இந்தியர் | 6 | 8 | 14 |
மொத்தம் | 98 | 29 | 127 |
நீதிக்கட்சி சென்ற தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களைப் பெற்றதற்கான காரணங்கள்:[10]
நீதிக்கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிந்தாலும், அதற்கு தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. ஆளுனர் வில்லிங்டன் பிரபு, பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். சட்டமன்றம் கூடிய முதல் நாள் அன்றே சி. ஆர் ரெட்டி தலைமையில் எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. நியமிக்கப் பட்ட உறுப்பினர்களின் துணையுடன் அரசு அத்தீர்மானத்தை 65-43 என்ற கணக்கில் தோற்கடித்தது. (10 உறுப்பினர்கள் வாக்களிக்க வில்லை). இந்திய வரலாற்றில், சட்டமன்றங்களில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவே.[10][11][12]
பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் ஏ. பி. பாட்ரோ, டி. என். சிவஞானம் பிள்ளை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். புதிய அமைச்சரவை நவம்பர் 19, 1923 இல் பதவியேற்றது. அப்துல்லா கடாலா சாஹிப் பகாதூர், எஸ். அற்புதசாமி உடையார் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளர்களாக பொறுப்பேற்றனர். எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை பேரவைத் தலைவராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆளுனரின் செயற்குழுவில் சார்லஸ் டாட்ஹன்டர், ஏ. ஆர். நாப், சி. பி. ராமசாமி அய்யர், வாசுதேவ ரவி வர்ம ராஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 7, 1926 இல் முடிவுற்றது.[1][8]
நீதிக்கட்சி அரசு முந்தைய மூன்றாண்டுகளில் பின்பற்றிய கொள்கைகளையே மீண்டும் பின்பற்றியது. 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்து அறநிலையச் சட்டம், இவ்வரசினால் 1925 இல் நிறைவேற்றப்பட்டது. மாகாணத்திலிருந்த பல இந்து வழிபாட்டுத் தலங்களை அரசு நிர்வகிக்கத் தொடங்கியது. தற்காலத்தில் தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறை தோன்ற இச்சட்டமே முன்னோடியாகும்.[13][14]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: Check |isbn=
value: invalid character (help); Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)