![]() | ||||||||||||||||
| ||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 98 இடங்கள் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
|
சென்னை மாகாணத்தில் இரட்டை இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான நான்காம் தேர்தல் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று, முனுசாமி நாயுடு சென்னை மாகாணத்தின் முதல்வரானார். இந்திய தேசிய காங்கிரசு சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்ததால் இத்தேர்தலைப் புறக்கணித்து விட்டது.
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
1926 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் 1926 வரை மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். 1926 இல், பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவே கருதப் பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.[1][2][3][5][6]
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் ஆட்சியில் பங்கேற்கக் கூடாதென்ற நிலை எடுக்கப்பட்டது.
முந்தைய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் ஆட்சி அமைந்திருந்தது. சுயாட்சிக் கட்சியும், நீதிக் கட்சியும் சுப்பராயனின் ஆட்சிக்கு எதிரணியில் இருந்தன. ஆனால் இரு ஆண்டுகளுக்குள், நீதிக் கட்சி சுப்பராயனுக்கு ஆதரவான நிலை எடுத்தது. 1927 இல் இந்தியா வந்து போன சைமன் கமிஷனின் பரிந்துரையில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே 1929 இல் நடைபெற வேண்டிய தேர்தல், ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் சீர்திருத்தம் எதுவும் ஏற்படவில்லை. அதனால் 1930 இல் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்ததால் இரு கட்சிகளும் இத்தேர்தலை புறக்கணித்து விட்டன. இத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் சென்னை மாகாணத்தை எட்டியிருந்தது.[1][7][8]
செப்டம்பர் 1930 இல் நடைபெற்ற இத்தேர்தலில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 45 இடங்களில் போட்டியிட்ட நீதிக்கட்சி 35 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. முதல்வர் சுப்பராயனின் தேசீயவாத சுயேட்சைகளும், அவர்களுக்கு ஆதரவளித்த லிபரல் கட்சியினரும் பத்துக்கும் குறைவான இடங்களில் வென்றனர். 35 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][7][8]
நீதிக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைகள் மேலும் பல இடங்களில் வெற்றி பெற்றனர். ஆளுனர் ஜார்ஜ் ஃபெடரிக் ஸ்டான்லியால் நியமிக்கப்பட்ட 32 உறுப்பினர்களில் பலரும் நீதிக்கட்சியை ஆதரித்தனர். அக்கட்சியின் தலைவர் பி. முனுசாமி நாயுடு சென்னை மாகாணத்தின் நான்காவது முதல்வரானார். பி. ராமசந்திர ரெட்டி சட்டமன்றத் தலைவரானார். பி. டி. ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். சுப்பராயன் எதிர்கட்சித் தலைவரானார்.[1][7] பதவியேற்ற சிறிது காலத்திற்குள் நீதிக்கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. ஜமீந்தார் எவருக்கும் அமைச்சர் பதவி தரப்படாததால் கோபம் கொண்ட ஜமீந்தார் கோஷ்டி முனுசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. பொபிலி அரசர் தலைமையில் செயல்பட்ட அவர்கள், 1932 இல் முனுசாமியை கட்சித் தலைமையிலிருந்தும், முதல்வர் பதவியிலிருந்தும் இறக்கினர். நவம்பர் 5, 1932 இல் பொபிலி அரசர் மாகாணத்தின் முதல்வரானார்.[8][9][9][9]
நீதிக்கட்சி வெற்றி பெற்ற கடைசித் தேர்தல் இதுவே. உட்கட்சி பூசல், மக்களின் அதிருப்தி, காங்கிரசின் வளர்ச்சி, நாட்டில் மிகுந்த தேசிய உணர்வு ஆகிய காரணங்களால் நீதிக்கட்சி இதற்குப்பின் எத்தேர்தலிலும் வெற்றி பெற இயலவில்லை. கட்சி ஜமீந்தார்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் மக்களின் ஆதரவை அறவே இழந்து விட்டது. போபிலி அரசரின் ஊழல் மலிந்த திறனற்ற நிர்வாகம் கட்சியை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றது.[8][10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)
{{cite book}}
: Check |isbn=
value: invalid character (help); Cite has empty unknown parameter: |coauthors=
(help)