செப்டம்பர் 2010 குவெட்டா குண்டுவீச்சு September 2010 Quetta bombing | |
---|---|
இடம் | குவெட்டா, பலூசிசுதான், பாக்கித்தான் |
நாள் | 3 செப்டம்பர் 2010 |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு |
இறப்பு(கள்) | 73+ |
காயமடைந்தோர் | 200[1] |
தாக்கியோர் | இலசுகர்-இ-யாங்வி |
செப்டம்பர் 2010 குவெட்டா குண்டுவீச்சு (September 2010 Quetta bombing) பாக்கித்தானில் உள்ள குவெட்டா நகரில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு நிகழ்வாகும்[2] . பாலசுதீனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகக் சியா இசுலாமியர்களால் கொண்டாடப்படும் குத்சு தின ஊர்வலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது[3][4] ஊர்வலத்தில் குண்டு வெடித்ததால் குறைந்தபட்சம் 73 நபர்கள் கொல்லப்பட்டனர்[5], 160 நபர்கள் காயமடைந்தனர்.
சன்னி இசுலாம் வகை மக்களை அதிகமாகக் கொண்டுள்ள பாக்கித்தானில், நபிகளின் வழித்தோன்றலைப் பின்பற்றும் சியாக்கள்[5] உள்ளிட்ட சிறுபான்மை சமுகத்தினர் பாக்கித்தான் மக்கள்தொகையில் 35 முதல் 40 சதவீதமாகும். இச்சிறுபான்மை சமுகத்தினருக்கு எதிராக குறுங்குழுவாத தாக்குதல்கள் நடைபெறுவதைக் காணமுடிகிறது. இத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற இதே போன்ற மற்றொரு தாக்குதலில் 12 சியாக்கள் கொல்லப்பட்டனர். இலசுகர்-இ-யாங்வி, சிபா-இ-சபா போன்ற சன்னி இசுலாம் தீவிரவாத அமைப்புகள் பாக்கித்தானில் சுதந்திரமாக இயங்குகின்றன. இவ்வமைப்புகள் சியா இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
தாக்குதல் நிகழ்த்தப்பட்ட அன்றைய தினத்தில், பாதுகாப்பு கவலைகள் காரணமாக பெரிய கூட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம்[6] என்று பாக்கித்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் இரகுமான் மாலிக் முன்னதாக சியா சமூகத்தினரிடம், கோரிக்கை விடுத்திருந்தார்.
எருசலேமை இசுரேலியர்கள் ஆக்ரமிப்பதை எதிர்த்து சியா இசுலாமியர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஊர்வலம் நடத்துவது வழக்கம் ஆகும். இந்த நாளை குத்சு தினமாக அவர்கள் அனுசரிப்பார்கள்[7]. 2010 ஆம் ஆண்டு குத்சு தின ஊர்வலத்தில், சுமார் 2500 சியா இசுலாமியர்கள் கலந்து கொண்டனர். குண்டு வெடிப்பின் ஓசை அதிகமாயிருந்த காரணத்தால் ஊர்வலத்தில் மக்கள் நெருக்கியடித்து ஓடத் தொடங்கினர்[5]. நகரத்தின் மீசான் சவுக் பகுதியில், பிற்பகல் 3.05 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இக்குண்டுவீச்சில் 15 கிலோகிராம் வெடிப்பொருட்களை அந்த மனித வெடிகுண்டு பயன்படுத்தியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது [8]
இலசுகர்-இ-யாங்வி அமைப்பு இக்குண்டு வீச்சு சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது. 22 வயது இளைஞர் இரசீத் மௌவியா இந்நிகழ்வில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார் என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது[8].
குண்டு வெடிப்பு தொடர்ந்து, நகரமெங்கும் பரந்த எதிர்ப்புக்கள் வெடித்தன. நகரம் முழுவதும் கேட்குமாறு நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எதிர்ப்பாளர்களால் பல கடைகள் எரிக்கப்பட்டன[8]. மற்றவர்கள் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை தீயிட்டுக் கொளுத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்[7]. பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க சாலைகளில் படுத்த நிலையில் காணப்பட்டனர்.
குண்டு வெடிப்புக்குப் பின்னர் காவல்துறையினர் அப் பிரதேசத்தை சுற்றிவளைத்ததுடன், மீண்டும் ஆகாயத்தை நோக்கி காற்றில் சுட்டனர். கூட்ட நெரிசலில் பிரிந்து போன உறவினர்களைக் கண்டுபிடிக்க இச்செயல் மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது[5].
சியா இசுலாமியர்களின் ஊர்வலத்தில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பாக்கித்தான் நகரமான குவெட்டாவில் திரண்டனர்[9].
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் தெரிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த காயமடைந்தவர்கள் இறந்த காரணத்தால் ஒரே இரவில் மேலும் உயர்ந்தது என சனிக்கிழமையன்று காவலர்கள் தெரிவித்தனர்.
குண்டு வீச்சுக்கு அடுத்தநாள் பள்ளிக்கூடங்கள் , கடைகள் மூடப்பட்டிருந்தன. பாக்கித்தான் நாடெங்கிலும் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முதலமைச்சர் யூசஃப் ரசா கிலானி இத்தாக்குதலுக்கு காரணமான அமைப்பின் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாக தீவிரவாத அமைப்புகள், தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தி குறுங்குழுவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்று செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் இரெகுமான் மாலிக் தெரிவித்தார். இலசுகர்-இ-யாங்வி, அல்கொய்தா மற்றும் தாலிபான்கள் போன்ற அமைப்புகளும் இதே நோக்கத்தில் செயல்படுகின்றன என்று மேலும் அவர் தெரிவித்தார்[10] சியாக்கள் மீதான இக்கொடுஞ் சம்பவத்திற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்[5] சிறுபான்மை இசுலாமியர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் இத்தகைய தாக்குதல்களளால் பொதுமக்கள் உயிர் இழப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[11]
கொடுமையான இத்தாக்குதலை வெள்ளை மாளிகையும் கண்டித்து இரங்கல் தெரிவித்தது[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)