செயநாகரன் | |||||
---|---|---|---|---|---|
மயபாகித் பேரரசன் | |||||
ஆட்சி | மயபாகித் பேரரசு: 1309–1328 | ||||
முன்னிருந்தவர் | ராடென் விஜயன் | ||||
பின்வந்தவர் | திரிபுவன விஜயதுங்கதேவி | ||||
| |||||
அரச குலம் | இராயச வம்சம் | ||||
இறப்பு | 1328 |
செயநகரன் அல்லது ஸ்ரீ மகாராஜ வீராண்டகோபால ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவ ஆதீசுவரன் அல்லது ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவதீசுவர விக்ரமோத்துங்கதேவன், அல்லது காலா கெமெத் என்றெல்லாம் அறியப்பட்டவன், 1295இல் கெதிரியின் மன்னனாகவும் 1309 - 1328 வரை மயபாகித் பேரரசின் அரசனாகவும் விளங்கிய மன்னன் ஆவான்.[1]:201,233 ராடென் விஜயனின் மகனான செயநகரனின் வரலாற்றை, பரராத்தன், நகரகிரேதாகமம் முதலான சாவக நூல்கள் சொல்கின்றன. இவனது ஆட்சியின் போதே கஜா மடா (ஆனைத் தளபதி) என்பவன் அப்பேரரசில் முக்கியத்துவமடையத் தொடங்கினான்.
ராடென் விஜயனின் ஐந்து மனைவியரில், செயநகரன், மூத்தவளான திரிபுவனேசுவரியின் மகன் என்றும், இந்திரேசுவரியின் மகன் என்றும் வேறுபட்ட மரபுரைகள் சொல்கின்றன. இந்திரேசுவரியின் மகனான செயநகரன், குழந்தைகள் அற்ற திரிபுவனேசுவரியின் மகனாக, பட்டத்து இளவரசனாக வளர்ந்தான் என்பதே தகும். விஜயனின் ஆட்சியின் பிற்காலத்தில் ஏற்பட்ட கடுமையான கிளர்ச்சிகள், மயபாகித் பேரரசை ஆட்டம் காண வைத்தன. 1319இல் 'குதி' என்பவன் தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியொன்றில், அரண்மனையும், நகரும் கிளர்ச்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டபோது, கயா மடா, மற்றும் தன் காவலனின் உதவியுடன் அங்கிருந்து தப்பினான் செயநகரன்.[1]:233 குதிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்பதையுணர்ந்த கயா மடா, அவனது கிளர்ச்சியை அடக்கியொழித்து நகரை மீட்டபோதே, செயநகரன் மீண்டும் நகர் திரும்ப முடிந்தது. 1325 முதல் 1328 வரை சீனாவுடன் செயநகரன் வாணிபத் தொடர்புகளைப் பேணியமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.[1]:234
பேரழகனாக இருந்தபோதும், செயநகரனின் பெண்பித்து அவனுக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது. அரசவை ஊழியர் பலரது மனைவியருடனும் மகள்மாருடனும் அடிக்கடி அத்துமீறி நடந்துகொண்ட செயநகரன், அவனது காம விளையாட்டுக்களைக் குறிக்கும் வகையில், "காலா கெமெத்" எனும் பெயராலேயே அழைக்கப்பட்டான்.
1328இல், அறுவைச் சிகிச்சை ஒன்றின் போது, தன் வைத்தியர் தங்கன் என்பவரால், திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டான் செயநகரன். தீவிர விசாரணைக்குப் பின், தங்கன் கயா மெடனால் கொல்லப்பட்டதாக ஒரு கதையும், கயா மெடனின் திட்டப்படியே செயநகரன் கொல்லப்பட்டதாக இன்னொரு கதையும் சொல்லப்படுகின்றது. தன் மனைவியைக் காமக்கிழத்தியாக்கிய கோபத்தில், அரசவைப் பிரமுகர் ஒருவரே இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.[1]:234 எவ்வாறெனினும் செயநகரனின் கொலை, மர்மமாகவே இருந்து வருகின்றது.
அவன் மறைவுக்குப் பின் அரசாட்சிக்குப் பொறுப்பாக இருந்த இராசமாதா காயத்திரி, தான் பௌத்த துறவறத்தை ஏற்றிருந்ததால், அரசோச்ச மறுத்தாள். பின் அவளாணைப்படி, அவள் மகள் திரிபுவன விஜயதுங்கதேவி, மயபாகித்தின் அரசியாக முடிசூடிக் கொண்டாள். 1330களில், சிங்கசாரியின் இளவரசனாக விளங்கிய கர்த்தவர்த்தனன் அல்லது சக்கரதாரன் என்பவனை மணந்துகொண்ட துங்கதேவி, 1334இல் ஹயாம் வுரூக்கைப் பெற்றெடுத்ததுடன், 1350இல் அவனிடம் ஆட்சியைக் கையளித்து, அரசியலிலிருந்து விலகிக் கொண்டாள்.[1]:234