செரி கேசரி வருமதேவன் (ஆங்கிலம்: Sri Kesari Warmadewa; இந்தோனேசியம்: Shri Kesari Warmadewa; பாலினியம்: ᬲ᭄ᬭᬶᬯ᭄ᬳᬶᬭᬤᬮᬾᬫ᭄ᬓᬾᬲᬭᬶᬯᬃᬫᬤᬾᬯ; சமசுகிருதம்: Śrī Kesarī Varmadeva) என்பவர் பாலி இராச்சியத்தின் முதல் அரசர் ஆவார். பாலி இராச்சியம் தொடர்பான நான்கு கல்வெட்டுகளில் இவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செரி கேசரி வருமதேவன், பாலியில் வர்மதேவ அரச மரபு சார்ந்த பேரரசை உருவாக்கியவர். அதே வேளையில் இந்தோனேசியாவில் வருமதேவா அரச மரபையும் (Warmadewa dynasty) தோற்றுவித்தவர் ஆகும்.
இந்தோனேசியா பாலி தீவில் சானூர் (Sanur) எனும் கடற்கரை நகரத்தில், 1932-ஆம் ஆண்டு ஒரு கல்தூணைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் பெலாஞ்சோங் கல்தூண் (Belanjong pillar). 914-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட அந்தக் கல்தூண் சமசுகிருத மொழியிலும் பழைய பாலி மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
செரி கேசரி வருமதேவன் தொடர்பான 4 கல்வெட்டுகள்:[1][2]
செரி கேசரி வருமதேவனின் அனைத்து கல்வெட்டுகளும்; அவரின் இராணுவ வெற்றிகளுக்கு (Jaya-stambha) நினைவுச் சின்னங்களாக அமைகின்றன. பாலியின் குருன் மற்றும் சுவால் மலைப் பகுதிகளில் எதிரிகளுக்கு எதிரான அவரின் போராட்டங்களை அந்தக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
பழைய பாலி மொழி பல்லவ கிரந்த எழுத்து வடிவங்களைக் கொண்டது. பெலாஞ்சோங் கல் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914-ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்டவை.
செரி கேசரி வருமதேவன் தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இப்போது அந்தத் தூண் பெலாஞ்சோங் ஆலயத்தில் (Blanjong Temple) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றார்கள்.
கி.பி. 920-ஆம் ஆண்டுகளில் மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சய வம்சாவளியினருக்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது.
கல் தூண் குறிப்புகளின் படி செரி கேசரி வருமதேவா என்பவர் பௌத்த மதத்தைச் சார்ந்த சைலேந்திர அரச மரபைச் (Sailendra Dynasty) சேர்ந்த மன்னர்.[3][4]
சைலேந்திர வம்சம் என்பது மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஓர் அரச மரபு ஆகும். செரி கேசரி வருமதேவா பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலி தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மலுக்கு தீவுகளையும் கைப்பற்றினார்.[5]
பெலாஞ்சோங் கல்தூண் தான் இப்போதைக்குப் பாலி தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.[6]