சேதி சந்த் | |
---|---|
![]() சிந்தி இந்துக்களின் விருப்பமான கடவுள் ஜூலேலால் | |
பிற பெயர்(கள்) | சிந்திக்களின் புத்தாண்டு |
கடைப்பிடிப்போர் | சிந்தி இந்துக்கள் |
வகை | இந்து |
கொண்டாட்டங்கள் | 2 days[1][2] |
அனுசரிப்புகள் | Sindhi New Year's Day, mela (fairs), social feast, processions, dancing[3] |
நாள் | மார்ச்/ஏப்ரல் |
தொடர்புடையன | உகாதி, குடி பத்வா |
சேதி சந்த் (Cheti Chand) என்பது சிந்தி இந்துக்களுக்கான சந்திர இந்து புத்தாண்டின் நவராத்திரி நோன்பு தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு திருவிழா ஆகும்.[3][4] திருவிழாவின் தேதி சந்திர இந்து நாட்காட்டியின் சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது ஆண்டின் முதல் நாளில், சிந்தி மாதமான சேத் ( சித்திரை ) மாதத்தில் விழுகிறது.[3] இது பொதுவாக கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் மகாராட்டிராவில் குடி பத்வா கொண்டாடப்படும் நாளிலும், இந்தியாவின் தக்காணப் பகுதியின் பிற பகுதிகளில் உகாதி கொண்டாடப்படும் அதே நாளிலும் வரும்.
இந்த திருவிழா வசந்த காலத்தையும், அறுவடையின் வருகையையும் குறிக்கிறது.[5] ஆனால் சிந்தி சமூகத்தில், கொடுங்கோல் முஸ்லிம் ஆட்சியாளர் மிர்சாவின் துன்புறுத்தலில் இருந்து தங்களைக் காப்பாற்ற சிந்து நதிக்கரையில் உள்ள இந்து கடவுளான வருண தேவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்த பிறகு 1007இல் உதேரோ லால் பிறந்ததைக் குறிக்கிறது.[4][6][7] வருண தேவன் ஒரு போர்வீரனாகவும், பிரசங்கம் செய்யும் முதியவராகவும் உருவெடுத்தார். முஸ்லிம்களும் இந்துக்களும் ஒரே மாதிரியான மத சுதந்திரத்திற்கு தகுதியானவர்கள் என்று மிர்சாவை கண்டித்தார். இந்துக்கள் கோயிலில் உள்ள துறவியை ஜூலேலால் என்றும் குறிப்பிடுகின்றனர்.[4] இவர் சிந்துவில் இரு மதங்களைச் சேர்ந்த மக்களின் அன்பைப் பெற்றார். இவரைப் பின்பற்றும் சூபி முஸ்லிம்களால், இவர் "கவாஜா கிசிர்" அல்லது "ஜிந்தாபிர்" என்று அழைக்கப்படுகிறார். இந்து சிந்தி, புராணத்தின்படி, புத்தாண்டை உதேரோ லாலின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.[4][6]
இந்த பாரம்பரியம் தர்யபந்திகளுடன் தொடங்கியிருக்கலாம். பிரித்தானிய குடியேற்ற ஆட்சி காலத்தில், முக்கிய வருடாந்திரத் திருவிழாக்கள் ஜிந்தாபீரில் ( பாகித்தானின் ஐதராபாத்து அருகில்) நடத்தப்பட்டன.[3] சமகாலத்தில், சிந்தி சமூகம் சேத் சந்த் பண்டிகையை முக்கிய திருவிழாக்கள், விருந்துகளுடனும், சமூக நடனங்களுடனும் மற்ற இந்து தெய்வங்களுக்கான ஊர்வலங்கள் போல (விட்டலர் திருவிழா போன்று) கொண்டாடுகிறது.[3][8]
இந்த நாளில், பல சிந்திகள் ஜூலேலாலின் பிரதிநிதியான பகாரானா சாகிப் என்ற உருவத்தை அருகிலுள்ள நதி அல்லது ஏரிக்கு எடுத்துச் செல்கிறார்கள். பகாரானா சாகிப்பானது எண்ணெய் விளக்கு, சர்க்கரைக் கட்டி, ஏலக்காய், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது தண்ணீர் கலசமும், ஒரு தேங்காய், துணி, பூக்கள், இலைகள் ஆகியவற்றால் மூடப்பட்டிருக்கும்.[9][10] மேலும், ஜூலேலால் தேவதையின் சிலையும் இருக்கும். சேதி சந்த் இந்தியாவிலும், பாக்கித்தானில் உள்ள சிந்தி இந்துக்களாலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். மேலும் உலகெங்கிலும் உள்ள இந்து சிந்தி புலம்பெயர்ந்தோரால் கொண்டாடப்படுகிறது.[3][7]