சையது மொகமது ஆரிஃப் S. M. Arif Sahaab | |
---|---|
பிறப்பு | 29 சனவரி 1944 ஐதராபாத்து |
தேசியம் | இந்தியர் |
பணி | இறகுப்பந்தாட்ட பயிற்சியாளர் |
சையது மொகமது ஆரிஃப் (Syed Mohammed Arif) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட பயிற்சியாளராவார். எசு.எம். ஆரிஃப் என்று சுருக்கமாக இவரை அழைப்பர். 1944 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதி இவர் பிறந்தார். ஆரிஃப் சாகிப் என்று பிரபலமாகவும் அறியப்படுகிறார். 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் ஆரிஃபுக்கு முறையே துரோணாச்சார்யா விருது[1] மற்றும் பத்மசிறீ விருதுகளை[2] வழங்கி சிறப்பித்துள்ளது.[1] உலக இறகுப்பந்தாட்ட கூட்டிணைவும் ஆரிஃபுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.
மொகமது ஆரிஃப் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் ஆரிஃப் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆரிஃப் துடுப்பாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். அன்வர் உல் உலூம் கல்லூரி அணியை நான்கு ஆண்டுகள் தலைவராக இருந்து வழிநடத்தினார். ஐதராபாத்து துடுப்பாட்ட சங்க கூட்டிணைவு போட்டிகளில் டெக்கான் புளூசு அணிக்காக இவர் துடுப்பாட்டம் விளையாடினார்.[3] தனது துடுப்பாட்ட பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துடுப்பாட்ட விளையாட்டிலிருந்து விலகி இறகுப்பந்தாட்டத்திற்குள் நுழைந்தார்.
தனது கல்லூரி நாட்களில் ஆரிஃப் ஐதராபாத்து பல்கலைக் கழக இறகுப்பந்தாட்ட அணியில் இடம்பெற்று பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான சாம்பியன் பட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். பல தேசிய அளவு போட்டிகளிலும் ஆந்திராவை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் இறகுப்பந்தாட்ட பயிற்சியில் பட்டயம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு இவர் இறகுப்பந்தாட்டத்திற்கான தேசிய பயிற்சியாளர்கள் குழுவில் சேர்ந்தார். 1997 ஆம் ஆண்டு தேசிய தலைமை இறகுப்பந்தாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[4]
ஆரிஃப் பல இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அனைத்து இங்கிலாந்து திறந்தநிலை இறகு பந்தாட்ட சாம்பியன் புல்லேலா கோபிசந்த்தும் இவரிடம் பயிற்சி பெற்றவரே.[5] பி.வி.வி லட்சுமி, யூவாலா கட்டா, மற்றும் சாய்னா நேவால் போன்ற வீராங்கனைகளுக்கும் ஆரிஃப் பயிற்சியளித்துள்ளார்.