சைரஸ் அணு உலை

சைரஸ் (CIRUS) என்பது மும்பையில், ட்றோம்பே என அறியப்படும் இடத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் ஒரு அணு உலையைக் குறிப்பதாகும். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆக்க பூர்வமான ஆராய்ச்சிகள் புரியும் நோக்குடன் கனடா நாட்டில் இருந்து 1954 ஆம் ஆண்டில் பெற்றதாகும்.[1] 40 மெகா வாட் திறன் கொண்ட இந்த அணு உலை, யுரேனியம் தனிம எரிபொருளை பயன்படுத்துகிறது. இது ஐதரசன் தனிமத்தின் ஓரிடத் தனிமம் ஆன துத்தேரியம் கலந்த ஒரு கனநீர் அணு உலை ஆகும், இந்த உலையை செயல்படுத்த தேவைப்படும் கனநீர் அமெரிக்காவிடம் இருந்து வரவழைக்கப் படுகிறது. கனநீர் எரிபொருள் எரியும் செயல்முறை வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பியாக இங்கு பயன்படுகிறது, அணு உலையின் செயல் முறையில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. முதன் முதலாக இந்த உலை 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செயல்பாட்டில் வந்தது.[2]

இந்த ஆராய்ச்சியில் கனடா, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் பங்கேற்றதால் CIRUS என இந்த அணு உலைக்கு பெயர் சூட்டினார்கள்.(C கனடாவையும், I இந்தியாவையும், நடுவில் இருக்கும் எழுத்தான R ஆராய்ச்சி (ரிசேர்ச்) என்ற பதத்தையும், US அமெரிக்காவையும் குறிப்பதாக அமைந்ததாகும்.) இந்த அணு உலையை பயன்படுத்தி புளுத்தோனியம் என்ற தனிமத்தை இந்தியா தயாரிப்பதில் வெற்றி கண்டது.[3] புளுத்தோனியம் எரிபொருளாக கல்ப்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் பயன்படுகிறது. 1974 ஆம் ஆண்டில் ஆக்கபூர்வமான வழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக பொக்ரானில் நடத்திய சோதனைக்கான புளுத்தோனியம் சைரஸ் திட்டத்தின் கீழ் பெற்றதாகும். 1974, 1998 ஆகிய ஆண்டுகளில் இந்தியா நடத்திய சோதனைகள் மூலமாக, அணு ஆலைகளில் பயன்படும் எரிபொருட்களை தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்ததையும், பாதுகாப்பான முறையில் அவற்றை பயன்படுத்தும் திறனை பெற்றிருப்பதையும் உலகத்திற்கு உணர்த்தியது.

சைரஸ் அணு உலையை பழுதுபார்ப்பதற்காக 1997 ஆம் ஆண்டில் நிறுத்தி வைத்தார்கள். 2005 ஆம் ஆண்டு முதல் இது மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. இந்த உலையின் கழிவெப்பத்தை பயன்படுத்தும் வகையில் நீரில் உள்ள உப்பை அகற்றி நீரை தூய்மையாக்கும் எந்திரத்தையும் இத்துடன் இணைத்தார்கள்.

ஐம்பது ஆண்டுகள் நிறைவடைதல்

[தொகு]

சைரஸ் அணு உலை தொடங்கிய பின் ஐம்பது ஆண்டுகள் (1960 -2010) நிறைவடைந்ததையும், துருவா அணு உலை தொடங்கிய பிறகு இருபத்தி ஐந்து ஆண்டுகள் (1985 -2010) நிறைவடைந்ததையும் நினைவு கூர்ந்து அண்மையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஒரு பாராட்டு விழா நடத்திக் கொண்டாடினார்கள். இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே குடிமுறைசார் ஒப்பந்தங்கள் கை எழுத்தான பிறகு, ஒப்பந்தத்தில் கூறியபடி சைரஸ் அணு உலையையும், துருவா அணு உலையையும் டிசம்பர் 2010 முடியும்பொழுது செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு இதர ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவார்கள். கல்லூரி மாணவர்களும் இந்த உலையை நேரில் பார்த்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ^ "Canadian-Indian Reactor, U.S. (CIRUS)"
  2. "CIRUS REACTOR". Bhabha Atomic Research Center. http://www.barc.ernet.in/webpages/reactors/cirus.html பரணிடப்பட்டது 2007-07-09 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2007-04-09
  3. http://www.ccnr.org/exports_3.html#3.2.2
  4. ^ http://www.thehindu.com/sci-tech/article970457.ece