சௌக்-பூரணா (Chowk poorana ) அல்லது சௌக்புராணா என்பது பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள நாட்டுப்புறக் கலையாகும். [1] உத்தரபிரதேசத்தில், சௌக்-பூரணா என்பது மாவு மற்றும் அரிசியைப் பயன்படுத்தி சுவரில் பல்வேறு வடிவமைப்புகளால் அலங்கரிப்பதைக் குறிக்கிறது [2] மேலும் அப்பகுதிக்கு குறிப்பிட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அலங்கரிக்கின்றனர். [3]
இதேபோல், ஆர்யனின் (1983) கூற்றுப்படி, பஞ்சாபில் சௌக்-பூரணா என்ற சொல் தரைக்கலை மற்றும் மண் சுவர் ஓவியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த கலை முதன்மையாக பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புற பாரம்பரியமாகும். [4] பஞ்சாபில், ஹோலி, கர்வா சௌத் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, கிராமப்புற வீடுகளின் சுவர்கள் மற்றும் முற்றங்கள், தென்னிந்தியாவில் நிறக்கோலம், இராஜஸ்தானில் மந்தனா ஓவியங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள கிராமிய கலைகள் போன்ற வரைபடங்கள் மற்றும் ஓவியங்களால் மேம்படுத்தப்படுகின்றன. பஞ்சாபில் உள்ள சௌக்-பூரணா மண் சுவர் கலை மாநிலத்தின் விவசாய பெண்களால் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. முற்றங்களில், இந்த கலை ஒரு துண்டு துணியைப் பயன்படுத்தி வரையப்படுகிறாது. செங்குத்து, கிடைமட்ட மற்றும் சாய்ந்த கோடுகளுடன் மரத்தின் உருவங்கள், பூக்கள், பன்னம், கொடிகள், செடிகள், மயில்கள், பல்லக்குகள், வடிவியல் வடிவங்களை வரைவது கலையில் அடங்கும். இந்த கலைகள் பண்டிகை சூழலை சேர்க்கின்றன. [5]
சௌக்-பூரணா என்ற சொல் இரண்டு வார்த்தைகளால் ஆனது: சௌக் என்றால் சதுரம் மற்றும் பூரணா என்றால் நிரப்புதல். அலங்காரம் அல்லது திருவிழாக்களுக்காக வரையப்பட்ட பஞ்சாபின் நாட்டுப்புற மண் சுவர் கலையை இந்தக் கலை பிரதிபலிக்கிறது. 1849-1949 காலங்களில் மண் சுவர்களில் அவ்வப்போது பறவைகள் அல்லது விலங்குகளுடன் அலங்கார வடிவமைப்புகள் வரையப்பட்டதாக பதிவுகள் உள்ளன. [6] பஞ்சாபின் நாட்டுப்புறக் கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். கிராமக் குயவர்களின் களிமண் பொம்மைகள் மற்றும் அரப்பா சிலைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடுகிறது. பெண்கள் மண் சுவர்களில் சிக்கலான வடிவமைப்புகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள். [7]
இதேபோல், கலைஞர்கள் மண் சுவர்களை மாட்டு சாணத்தால் பூசுகிறார்கள். பின்னர் அதன்மேல் வெள்ளையடிக்கப்படுகிறது. "லாபம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு" ஆகியவற்றைக் குறிக்கும் குறியீட்டு ஓவியங்களை உருவாக்கும் கோடுகள் பின்னர் வரையப்படுகின்றன. [8] லலித் கலா அகாதமி 1968 இல் வடஇந்தியாவில் உள்ள கலைஞர்கள் எப்படி ஓவியங்களை வரைகிறார்கள் என்று குறிப்பிட்டது. சில கலைஞர்கள் "காவியங்களில் இருந்து வண்ணமயமான காட்சிகளை சித்தரிப்பதில் ஒரு சிறப்பு பரிசு பெற்றுள்ளனர்: சிலர் கருப்பு மை மற்றும் சிந்துர் ஆகியவற்றில் மிக நேர்த்தியாக வேலை செய்கிறார்கள்". அதே வெளியீட்டில், சஞ்சி திருவிழாவில் சுவர்க்கலையின் பரவலானது விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரியின் போது இவ்விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள வட இந்தியாவில் பெண்கள், சுவர்கள் மற்றும் உள் முற்றங்களில் சேறு மற்றும் மாட்டு சாணம் பூசுகிறார்கள். பின்னர் வடிவியல் வடிவமைப்புகள் வட்ட அல்லது முக்கோண களிமண் வட்டுகளுடன் ஒன்றாக வரையப்படுகின்றன. [9]