ஜயலத் ஜயவர்தன | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கம்பகா மாவட்டம் | |
பதவியில் 1994 - 2010 – மே 29, 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை | ஆகத்து 16, 1953
இறப்பு | மே 29, 2013 சிங்கப்பூர் | (அகவை 59)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | உதித்தா ஜயவர்தன |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | மருத்துவர் |
ஜயலத் ஜயவர்தன (Jayalath Jayawardena, ஆகத்து 16 1953 - மே 29, 2013), இலங்கை அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து குரல் கொடுத்து வந்தவர். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். 2000, 2001, 2004 தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
கந்தானை டி மெசெனாட் கல்லூரியின் பழைய மாணவரான ஜயவர்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவரானார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அமைப்பில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1994 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் முதற்தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். 2002 - 2004 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் மீள்குடியேற்ற அமைச்சராகவும், இறக்கும் வரை நீர்கொழும்பு தமது கட்சியின் அமைப்பாளராகவும் பணியாற்றினார்[1].
1998 ஆம் ஆண்டில் சிறுவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தமைக்காக கிரீன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் பன்னாட்டு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்[2].
நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த ஜயலத் ஜயவர்தன சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு 2013 மே 29 இல் காலமானார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.