ஜஹனாரா இமாம் | |
---|---|
জাহানারা ইমাম | |
![]() 1993இல் ஜஹனாரா இமாம் | |
தாய்மொழியில் பெயர் | জাহানারা ইমাম |
பிறப்பு | முர்சிதாபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 3 மே 1929
இறப்பு | 26 சூன் 1994 டிட்ராயிட், மிச்சிகன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 65)
கல்லறை | டாக்கா, வங்காளதேசம் |
தேசியம் | வங்கதேசத்தவர் |
கல்வி | இலக்கியத்தில் முதுகலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் சான்டியாகோ பல்கலைகழகம் |
பெற்றோர்கள் |
|
வாழ்க்கைத் துணை | செரிப் இமாம் (தி. 1948–1971) |
பிள்ளைகள் | ஷபி இமாம் ரூமி (மகன்) ஷபி இமாம் ஜாமி (மகன்) |
ஜஹனாரா இமாம் (Jahanara Imam) (3 மே 1929 - 26 சூன் 1994) ஒரு வங்காளதேச எழுத்தாளரும் அரசியல் ஆர்வலரும் ஆவார்.[1] வங்காளதேச விடுதலைப் போரில் போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் "ஷாஹீத் ஜனானி" (தியாகிகளின் தாய்) என்று அழைக்கப்படுகிறார்.[2]
இமாம் 1929 மே 3 ஆம் தேதி அப்போதைய பிரிட்டிசு இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத்தில் பிறந்தார். இவர் மூன்று சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார். இவரது தந்தை சையத் அப்துல் அலி வங்காள குடிமைப் பணியில் அரசு ஊழியராக இருந்தார். தந்தையின் பணி காரணமாக இவர் வங்காளத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்தார். இவரது தாயார் ஹமீதா அலி என்பவராவார். அந்த நேரத்தில் மேலதிக படிப்பைத் தொடரும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக நிறைய சமூக அழுத்தங்கள் இருந்தன. ஆனால் இவரது கல்வி தடைபடக்கூடாது என்று இவரது தாயார் உறுதியாக இருந்தார்.
இரங்க்பூரில் உள்ள கார்மைக்கேல் கல்லூரியில் 1945இல் தனது படிப்பை முடித்த பின்னர், இமாம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் லேடி பிராபோர்ன் கல்லூரிக்குச் சென்றார். அங்கு 1947இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தனது கல்லூரிக் காலத்தில் சமூக ஆர்வலராக இருந்தார்.[3] இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இவர் தனது குடும்பத்துடன் மைமன்சிங்கிலிருந்து கிழக்கு பாக்கித்தானுக்கு மாறினார். மேலும் வித்யாமோய் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார்.[4]
1948ஆம் ஆண்டில், கட்டிடப் பொறியாளரான ஷெரிப்ஃபுல் ஆலம் இமாம் அகமதுவை மணந்தார். அவரை கார்மைக்கேல் கல்லூரியில் படிக்கும் போது இவர் இரங்க்பூரில் சந்தித்தார்.[4] இவர்கள் டாக்காவில் குடியேறினர். இவர் சித்தேசுவரி பெண்கள் பள்ளியில் தலைமையாசிரியராகச் சேர்ந்தார். பள்ளியை டாக்காவின் சிறந்த பெண்கள் பள்ளிகளில் ஒன்றாக மாற்றுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[3]
"கவாதீன்" என்ற மாதாந்திர மகளிர் பத்திரிகையின் முதல் ஆசிரியராகவும் இருந்தார்.[3] இது 1952இல் அதன் வெளியீட்டைத் தொடங்கியது. இவர் அதை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்தார். தனது இரண்டு மகன்களான ரூமி மற்றும் ஜாமியை கவனித்துக் கொள்வதற்காக தனது தலைமைஆசிரியர் பணியை1960 ஆம் ஆண்டில் கைவிட்டார்.
இந்த காலத்தில் இவர் வங்காள மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை பட்டத்தையும் கல்வியில் இளங்கலை பட்டத்தையும் தாக்கா பல்கலைக்கழகத்தில் முறையே 1962 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் முடித்தார். அதன் பிறகு இவர் முழுநேர கற்பித்தல் பணிக்குத் திரும்பினார். 1966 முதல் 1968 வரை தாக்காவில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1970 முதல் தாக்கா பல்கலைக்கழகத்தில் நவீன மொழி நிறுவனத்தில் பகுதிநேர அடிப்படையில் பல ஆண்டுகள் கற்பித்தார்.
இமாம் தனது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை கல்வியில் கழித்தார். இவர் 1964-65ல் சான் டியாகோ பல்கலைக்கழகத்திற்கு புல்பிரைட் அறிஞராகவும், 1977ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச பார்வையாளர் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குச் சென்றார்.[3]
1971 ஆம் ஆண்டில், மார்ச் 25 அன்று வங்காளதேச விடுதலைப் போர் வெடித்தது. கெரில்லா முறை எதிர்ப்பு இயக்கமான முக்தி வாகினியில் இவரது மூத்த மகன் ஷஃபி இமாம் ரூமி உட்பட பலர் விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்தனர். போரின் போது, போராட்டம் குறித்த தனது உணர்வுகள் குறித்து ஒரு நாட்குறிப்பை எழுதினார். இது பின்னர் விடுதலைப் போர் பற்றிய மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக மாறியது.
பாக்கித்தான் இராணுவத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளில் இவரது மகன் ரூமி பங்கேற்றார். துரதிர்ஷ்டவசமாக, அவரை பாக்கித்தான் இராணுவம் பிடித்துச் சென்றது. அதன்பின்னர், இவர் அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியவில்லை. இவரது கணவரும் இளைய மகன் ஜாமி மற்றும் குடும்பத்தின் மற்ற ஆண் உறுப்பினர்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இவரது கணவர் ஷெரீப் இமாம் 1971 டிசம்பர் 16 அன்று வங்காளதேசம் சுதந்திரம் அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு உடைந்த மனிதனாகத் திரும்பினார்.[5][6]
வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, இமாம் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நேரத்தில் இவர் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கும் விரிவாக பயணம் செய்தார். 1986ஆம் ஆண்டில் இவர், தனது போர்க்கால நாட்குறிப்பான "ஏகட்டுரர் டிங்குலி" (எழுபதோரு நாட்கள்) என்பதை வெளியிட்டார்.[4] இவரது நாட்குறிப்பு, ஆன் பிராங்க் எழுதியதை போன்ற சில விஷயங்களில், சோகம் குறித்த தனிப்பட்ட கணக்காக இருந்தது. இவரது எளிய எழுத்து நடை பல இதயங்களைத் தொட்டது. குறிப்பாக போரின் போது உறுப்பினர்களை இழந்த குடும்பங்கள்.
இவர், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அமெரிக்கக் குழந்தை எழுத்தாளாரான லாரா இங்கால்ஸ் வைல்டரின் பிரபலமான "லிட்டில் ஹவுஸ்" புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து வங்காள மொழிக்கு மொழிபெயர்த்தார்.
1981 ஆம் ஆண்டில், இவருக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை இவருக்கு பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்தின. ஆனாலும், இவர் தொடர்ந்து எழுதினார். மேலும், சுதந்திர போராளிகளுடன் தனது ஈடுபாட்டைத் தொடர்ந்தார். இவர் சூன் 26, 1994 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் இறந்தார். பின்னர் இவர் டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவரது இறந்த ஆண்டு வங்காளதேசத்தில் அனுசரிக்கப்படுகிறது.[7] வங்காளதேச தேசியவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சையதா ஆஷிபா அஷ்ரபி இமாமை பாராட்டியுள்ளார்.[8] சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் வங்காளதேச விடுதலைப் போரில் தனது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அலி அஹ்சன் முகமது மொஜாஹீத் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.[9] வங்காளதேச ஒரு விஞ்ஞானியும் எழுத்தாளருமான நூரன் நபி "அமெரிக்காவில் ஜஹனாரா இமாமின் கடைசி நாட்கள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.[10]