ஜான் தாமசு பியர்சன் (John Thomas Pearson)(22 ஆகத்து 1801 - 5 மார்ச் 1851) இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு இங்கிலாந்து அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் வங்காள ஆசிய சங்கத்தின் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகக் குறுகிய காலப் பணியிலிருந்தார்.
பியர்சன் 1825-ல் தனது இலண்டனில் உள்ள அரச அறுவையிலாளர் கல்லூரியின் உறுப்பினர் தகுதியினைப் பெற்றார். 1826-ல் வங்காளத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார். மேலும் 1841-ல் அறுவை சிகிச்சை நிபுணராக பதவி உயர்வு பெற்றார். டார்ஜிலிங்கில் இவர் பணியிலிருந்தபோது, அங்குள்ள விலங்கியல் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இப்பகுதியில் உள்ள விலங்கு மாதிரிகளை அடையாளம் காண இங்கிலாந்துக்கு அனுப்பினார். பெலோமிஸ் பியர்சோனி [1] எனும் பறக்கும் அணில் இவரது மருத்துவ மாணவர் நாட்களில் நண்பரான ஜான் எட்வர்டு கிரே என்பவரால் அடையாளம் காணப்பட்டு 1942-ல் பெயரிடப்பட்டது. ரைனோலோபசு பியர்சோனி என்பது 1851-ல் கோர்சூபீல்டால் பியர்சன் நினைவாகப் பெயரிடப்பட்டது.
பியர்சன் சூலை 1833-ல் ஆசியச் சமூகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஜேம்ஸ் பிரின்செப்பிற்கு ஆதரவாக 1835 வரை பதவியிலிருந்தார். இந்த காலகட்டத்தில் இவர் ஹிஸ்பிட் முயல் மற்றும் ஒரு புதிய வகை மீன்கொத்தி, பழுப்பு சிறகு மீன்கொத்தியினை விவரித்தார்.[2] பியர்சன், வங்காள ஆசியச் சமூகத்தின் அருங்காட்சியகத்தை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்று வில்லியம் ஜேம்சன் மீது புகார் தெரிவித்தார்.[3]
1827ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி கல்கத்தாவில் பிரான்சிசு பிட்சுபாட்ரிக்கை பியர்சன் மணந்தார்.[4] பியர்சன் பரக்பூரில் இறந்தார்.[5]