கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை அய்யர் நடேசன் | |
---|---|
1933-இல் ஜி. ஏ. நடேசன் | |
பிறப்பு | கணபதி அக்ரகாரம், பாபநாசம், தஞ்சாவூர் | 25 ஆகத்து 1873
இறப்பு | 29 ஏப்ரல் 1948 | (அகவை 74)
பணி | எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி, நூல் வெளியிட்டாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் |
வாழ்க்கைத் துணை | மங்கலம்மாள் |
கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை அய்யர் நடேசன் அல்லது ஜி. ஏ. நடேசன் (Ganapathi Agraharam Annadhurai Ayyar Natesan) (25 ஆகஸ்டு 1873 – 29 ஏப்ரல் 1948) சென்னை மாகாணத்தில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி மற்றும் நூல் வெளியிட்டாளர் ஆவார்.
இவர் நிறுவிய ஜி. ஏ. நடேசன் & கோ நூல் வெளியிட்டு நிலையம், இந்திய தேசிய விடுதலை உணர்வுகளை தூண்டும் நூல்களை வெளியிடுவதில் முன்னிலை வகித்தது.
ஜி. ஏ. நடேசன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில், அண்ணாதுரை அய்யர் என்பாருக்கு 25 ஆகஸ்டு 1873ல் பிறந்தார்.
பள்ளிப் படிப்பை கும்பகோணத்தில் முடித்தார்.[1] கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார்.[2] பின்னர் சொந்தமாக நூல் வெளியிட்டு நிறுவனத்தை துவங்குவதற்கு முன்னர் ஒரு ஆங்கிலேயரின் நூல் வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 1897ல் ஜி. ஏ. நடேசன் & கோ (G. A. Natesan & Co) எனும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை துவக்கினார்.[2][3]
ஜி. ஏ. நடேசன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1900ல் ஆங்கில மொழியில் The Indian Review, எனும் மாத இதழை வெளியிட்டார்.[4] இம்மாத இதழில் இலக்கிய விமர்சனங்கள், விளக்கப் படங்கள், பொருளாதாரம் மற்றும் வேளாண்மை குறித்து செய்திகள் வெளியிட்டார்.[4]
1915ல் முதன் முறையாக மகாத்மா காந்தியடிகள் சென்னைக்கு வருகை புரிந்த போது, ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டித் தெருவில் இருந்த ஜி. ஏ. நடேசனின் இல்லத்தில்,[5][6] 17 ஏப்ரல் முதல் 8 மே 1915 வரை தங்கியிருந்தார்.[6]
பின்னர் தனது காங்கிரஸ் கட்சி கொள்கையை கைவிட்ட ஜி. ஏ. நடேசன், இந்திய லிபரல் கட்சியில் இணைந்தார்.[7] 1922ல் இந்திய லிபரல் கட்சியின் தேசிய இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1923 மற்றும் 1931களில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக ஜி. ஏ. நடேசன் நியமிக்கப்பட்டார்.[7][8]
29 ஏப்ரல் 1948ல் ஜி. ஏ. நடேசன் தமது 74வது அகவையில் மறைந்தார்.[1]