ஜி. மாரிமுத்து | |
---|---|
பிறப்பு | 12 சூலை 1967 பசுமலைத்தேரி, பிரிக்கப்படாத மதுரை மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது தேனி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 8 செப்டம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 56)
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2008-2023 |
வாழ்க்கைத் துணை | பாக்கியலட்சுமி (தி. 1994) |
பிள்ளைகள் | 2 |
கு. மாரிமுத்து (G. Marimuthu, 12 சூலை 1967 – 8 செப்டம்பர் 2023) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமாவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றினார். கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கியதோடு, நடிகராக துணை வேடங்களில் நடித்தார்.
மாரிமுத்து தமிழ்நாட்டிலுள்ள, தேனி மாவட்டம், வருசநாடு ஊராட்சிஅருகிலுள்ள பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990 ஆம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு வந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார். பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இலக்கியம் வழியாக அறிமுகமானார். மாரிமுத்து பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட திரைப்படப் படைப்பாளிகளிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிலம்பராசனின் அணியில் மன்மதன் (2004) படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார்.[1] ஜி.மாரிமுத்து கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பிரசன்னா, உதயதாரா ஆகியோர் நடித்த காதல் படம் இதுவாகும். இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை, ஆனால் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. பிஹைண்ட்வுட்ஸ்.காம் எழுதிய விமர்சனத்தில் "ஜி. மாரிமுத்து, கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் ஆகியவற்றுடன் அறிமுகமான படமான இதில் அண்மைய காலத்தில் மிகவும் தூய்மையான, மிகவும் நேர்மையான, அன்பான காதல் கதைகளில் ஒன்றை வழங்கியுள்ளார்".[2] அதேபோல், சிஃபி.காம் எழுதிய விமர்சனத்தில், "தமிழ்த் திரைத்துறையில் துணிச்சலான புதிய இயக்குநர்களில் ஒருவராக மாரிமுத்து வந்துள்ளார். இவர் வணிக வடிவத்திற்குள் தனது வித்தியாசமான காதல் கதையை வழங்க முயற்சிக்கின்றார்".[3] மாரிமுத்து பின்னர் மலையாளத் திரைப்படமான சப்பா குரிஷு (2011) படத்தின் கதையைக் கொண்டு புலிவால் (2014) படத்தை உருவாக்கினார்.[4]
2010 களில், இவர் நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்தி, தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மிஷ்கின் இவரை யுத்தம் செய் (2011) படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார். அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம் (2012), நிமிர்ந்து நில் (2014), கொம்பன் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் காவல் அதிகாரியாக நடித்தார். விஷாலின் மருது (2016) படத்தில் இவரது நடிப்பானது இவரை கத்தி சண்டை (2016) படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுதலானது.[5], அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார் முக்கியமாக, சிவகார்த்திகேயனின் டாக்டர், கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடரான எதிர்நீச்சல் தொடரில் அவர் ஏற்று நடித்த ஆதிகுணசேகரன் கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
2008 | கண்ணும் கண்ணும் | |
2014 | புலிவால் |
செப்டம்பர் 8, 2023 அன்று சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடருக்குப் பின்னணிக் குரல் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு சென்றார் . அங்கு சிகிச்சையின் போதே ஏற்பட்ட இதய நிறுத்தம் மற்றும் நுரையீரல் வீக்கம் காரணமாக காலமானார் மாரிமுத்து.[7]