ஜீன் அப்துல்லா Jeanne Abdullah | |
---|---|
![]() ஜீன் அப்துல்லா (2010) | |
மலேசிய பிரதமரின் மனைவி | |
5-ஆவது பிரதமரின் மனைவி 9 சூன் 2007 – 3 ஏப்ரல் 2009 | |
ஆட்சியாளர் | மிசான் சைனல் ஆபிதீன் |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | எண்டோன் மாமூட் |
பின்னவர் | ரோஸ்மா மன்சூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சூலை 1953 கோலாலம்பூர், மலாயா கூட்டமைப்பு, பிரித்தானிய மலாயா (தற்போது மலேசியா) |
துணைவர்(கள்) | உத்மான் கமூத் அப்துல்லா அகமது படாவி (தி. 2007) |
பிள்ளைகள் | நதியா கிமி நாடேனே கிமி |
துன் ஜீன் அப்துல்லா அல்லது துன் ஜீன் அப்துல்லா நீ டாங்கர் (பிறப்பு: சூலை 29, 1953) (ஆங்கிலம்: Tun Jeanne Abdullah; Jeanne Abdullah née Danker) என்பவர் மலேசியாவின் 5-ஆவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி (Tun Abdullah Ahmad Badawi) அவர்களின் இரண்டாவது மனைவி ஆவார்.[1]
அப்துல்லா அகமது படாவியின் முதல் மனைவி எண்டோன் மாமூட் இறந்த பின்னர் அப்துல்லா படாவியின் இரண்டாவது மனைவியானார். அப்துல்லா படாவி பதவியில் இருந்தபோதே இவர்களின் திருமணம் நடைபெற்றது.
ஜீன் அப்துல்லா, முன்பு அப்துல்லா படாவியின் மறைந்த முதல் மனைவி எண்டோன் மாமூட்டின் தம்பியை மணந்தவர் ஆவார். ஜீன் அப்துல்லாவுக்கு முந்தைய திருமணத்தில் இருந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[2]
இருப்பினும், 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில், மறுமணம் செய்து கொள்ளப் போவதாக வந்த வதந்திகளை அப்துல்லா படாவி நிராகரித்தார், ஆனாலும் ஓர் ஆண்டிற்கும் மேலாக வதந்திகள் பரவி வந்தன. இருப்பினும், அவர்களின் திருமணம் செரி பெர்தானாவில் 9 சூன் 2007-இல் நடைபெற்றது.[3]
ஜீன் டாங்கர் (Jeanne Danker) எனும் ஜீன் அப்துல்லா, சூலை 29, 1953 அன்று, கோலாலம்பூரில் பிறந்தார். அவரின் குடும்பம் மலாக்கா மாநிலத்தில் போர்த்துகீசிய-யூரேசிய குடும்ப மரபு வேர்களைக் கொண்டது. இவர் ரோமன் கத்தோலிக்கம் சார்ந்த (கிறித்தாங்) (Kristang people) குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார்.
இவருக்கு நான்கு உடன்பிறப்புகள்; இவர் குடும்பத்தில் மூத்த மகள். இவர் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா உயர்நிலைப் பள்ளியின் (SMK Assunta|) முன்னாள் மாணவி ஆவார்.
பின்னர் ஜீன் டாங்கர் தன் 23-ஆவது வயதில் இசுலாத்திற்கு மாறினார். ஜீன் அப்துல்லா என்று பெயர் மாற்றம் கண்டது.[4] ஜீன் அப்துல்லா தன் முதல் கணவர் உசுமான் மகமூத்தை (Othman Mahmood) மணந்தபோது, உசுமான் மகமூத், அப்துல்லா படாவியின் முதல் மனைவி (மறைந்த) துன் எண்டோன் மாமூட்டின் தம்பியாக இருந்தார்.
கோலாலம்பூர் இல்டன் (Kuala Lumpur Hilton) மற்றும் பான் பசிபிக் (Pan Pacific Hotel) உள்ளிட்ட முக்கிய தங்கும் விடுதிகளில் மேலாண்மைத் துறையில் பணியாற்றினார்.
ஒரு கட்டத்தில் ஜீன் அப்துல்லா, அப்துல்லா அகமது படாவி மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்தபோது, மலேசிய துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மேற்பார்வையாளராக இருந்தார், மேலும் அப்துல்லா அகமது படாவி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டபோது பிரதமரின் இல்லமான செரி பெர்தானாவின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.[1][3]
ஜீன் அப்துல்லாவுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் நதியா கிமி (Nadiah Kimie) வயது 46; மற்றும் நடீன் கிமி (Nadene Kimie) வயது 44; என இரண்டு மகள்கள் உள்ளனர். நதியா கிமி, கோலாலம்பூரில் ஒரு காட்சி தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடீன் கிமி ஃபேஷன் துறையில் ஈடுபட்டுள்ளார், அலங்காரம் தொடர்பான வாழ்க்கை முறை திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜீன் அப்துல்லா மலேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (Open University Malaysia) இரண்டாவது வேந்தராக நியமிக்கப்பட்டார். முதலாவது வேந்தர், முன்னாள் பிரதமரின் முதல் மனைவியான மறைந்த துன் எண்டோன் மாமூட் ஆவார்.[5]
மேலும் அவர் மலேசிய மாற்றுத் திறனாளர் மன்றத்தின் (Paralympic Council of Malaysia) புரவலராகவும் உள்ளார்.