ஜுகாடு (Jugaad அல்லது Juggaar) , விதிமுறைகளை தவிர்த்திடும் ஓர் எளிய மாற்று அமைப்பையோ, சாதுரியமான திருத்தத்தையோ[1] அல்லது குறைந்த வளங்களைக் கொண்டு சிக்கலைத் தீர்ப்பதையோ குறிக்கும் இந்தி சொல் ஆகும். இருக்கும் கருவிகளைக் கொண்டு புதிய கருவிகளைப் படைப்பதும் இதனில் அடங்கும். இச்சொல் பரவலாக இந்தியாவில் பிறமொழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழில் இதனை மாற்றி யோசி எனலாம்.
ஜுகாடு தத்துவம் மேற்கத்திய உலகின் ஹேக் அல்லது இக்ளட்ஜ் சொற்களுக்கு இணையானது. ஜுகாடு பிழைப்பிற்காக உருவாக்கப்பட்ட வழிமுறை எனக் கொள்ளலாம். ஏற்படும் சிக்கலுக்கு மரபார்ந்த வழிகளைப் பற்றிக் கவலைப்படாது தீர்வு காணும் முறை என்றும் கருதலாம்.
அண்மைக்காலங்களில் ஜுகாடு ஓர் மேலாண்மை நெறியாக ஏற்கப்படுகின்றது.[2] அனைத்துலகிலும் இந்தியாவின் சிக்கனமான பொறியியல் முறையாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[3] இந்திய நிறுவனங்கள் தங்களின் ஆய்வும் விருத்தியும் செலவினங்களைக் குறைத்திட ஜுகாடு வழிமுறைகளை நாடுகின்றனர்.[4] இது நிறுவனத்தின் வளங்களையும் பங்கேற்பாளர்களின் வளங்களையும் உயர்த்துகின்ற வாழ்வியல் மாத்தி யோசி கருத்தியலாக ஏற்கப்படுகின்றது.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் புழங்கும் மீன் பாடி வண்டி இத்தகைய மாற்றி யோசி வண்டிதான். இது உள்ளூர் மீனவர்களால் உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. மூன்று சக்கரங்களுடைய இவ்வூர்தி சைக்கிள் ரிக்ஷாவை மாற்றியமைத்து[5] கூடுதல் பளுதாங்கும் அடித்தாங்கியையும் விசையுந்து பொறியையும்—பொதுவாக யெசுதி அல்லது இரோயல் என்பீல்டு புல்லட் பொறி— இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இறந்த மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்ற பயன்பாடுகளுக்கு தூய்மையற்றதாகக் கருதப்பட்டதால் இந்த வண்டியை உருவாக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது. இத்தகைய வண்டிகளை தெற்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் காணலாம்.[6]