ஜெகதேவன் | |
---|---|
![]() ஜெகதேவனின் தங்க நாணயங்கள் | |
துணைவர் | விர்மதி (அலெக்சாண்டர் கின்லோச் போர்ப்சின் இராசமாலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது) |
அரசமரபு | பரமாரப் பேரரசு |
தந்தை | உதயாதித்தன் |
மதம் | இந்து சமயம் |
ஜெகதேவன் (Jagadeva) (Jagadeva) மேலும் ஜெகத்தேவன் என்றும் ஜெகதேவ் பர்மார் எனவும் அறியப்படும் இவன் மத்திய இந்தியாவின் பரமார வம்சத்தைச் சேர்ந்த 11-12 ஆம் நூற்றாண்டு இளவரசனாவான். ஜெயநாட்டு கல்வெட்டுகளாலும், சில நாட்டுப்புறக் கதைகளின் மூலமும் இவன் அறியப்படுகிறான். இவனது அரசியல் நிலை நிச்சயமற்றது. ஒரு கோட்பாட்டின் படி, இவன் மேலைச் சாளுக்கியர்களின் அடிமையாக இருந்திருக்கலாம்.
ஜெகதேவன் காலத்து நாணயங்களும் கல்வெட்டுகளும் மகாராட்டிராவின் பெரார் , மராத்வாடாவின் வடக்குப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மால்வாவின் பாரம்பரிய பரமாரப் பிரதேசத்தில் அல்ல. இப்பகுதிகள் மேலைச் சாளுக்கியர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. ஜெயநாடு கல்வெட்டு ஒன்று ஜெகதேவனை பரமார அரசன் உதயாதித்தனின் மகன் (1060-1086கள்) என்று குறிப்பிடுகிறது. [1] ஸ்ரீ ஜெகதேவன்" என்ற பெயர் கொண்ட நான்கு தங்க நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பி. சி. ராய் உட்பட பல அறிஞர்கள், இந்த நாணயங்களை பரமாரா இளவரசன் வெளியிட்டதாக அடையாளம் காட்டுகின்றனர். [2] சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் தனது இராச்சியத்தின் வடக்குப் பகுதியில் "ஜெகதேவன்" ("உலகின் இறைவன்") என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டான் என்றும், இந்த நாணயங்களை அவன்தான் வெளியிட்டான் என்றும் எம். எச். கிருஷ்ணா யூகித்தார். இருப்பினும், அறியப்பட்ட அனைத்து சாளுக்கிய நாணயங்களும் கன்னட எழுத்துக்களைக் கொண்டுள்ளன. அதே சமயம் ஜெகதேவனின் நாணயங்கள் பரமாரர்கள் பயன்படுத்திய நாகரி எழுத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே, கிருஷ்ணாவின் கோட்பாடு முற்றிலும் யூகமானது. [3]
ஜெகதேவன் கல்யாணியின் ஆறாம் விக்ரமாதித்தனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாக வி. பி. ரோட் கருதுகிறார். விக்ரமாதித்தன் இவனை பெரார் மற்றும் தக்காணத்தின் ஒரு பகுதியின் ஆளுநராக மாற்றினார். பி.சி. ராய் இந்தக் கோட்பாட்டுடன் உடன்படவில்லை. ஒரு ஆட்சியாளர் தனது சொந்த பெயரில் தங்க நாணயங்களை வெளியிட்டிருக்க முடியாது என்று வாதிடுகிறார். மேலும் நாணயங்களில் சாளுக்கியர்களைக் குறிப்பிடவில்லை.[4]
1856ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்றத்துவ நிர்வாகி அலெக்சாண்டர் கின்லோச் போர்ப்சின் வரலாற்றுப் படைப்பான இராச மாலாவில் உள்ள ஒரு புராணக் கணக்கு, உதயாதித்தனுக்குப் பிறகு ஜெகதேவன் மன்னரானான் என்று கூறுகிறது.[5] எனவே, ஜெகதேவன் என்பது இலட்சுமதேவனின் (ஆட்சி;பொ.ச. 1086-1094கள்) மற்றொரு பெயர் என்று பரமாரர்களை பற்றி ஆராய்ந்த வரலாற்றாளர் டி. சி. கங்குலி பரிந்துரைத்தார். ஜெகதேவன் பரமாரக் கல்வெட்டுகளின்படி, உதயாதித்தனின் வாரிசாக இருந்தான். கங்குலியின் கோட்பாட்டின்படி, இவன் தனது சகோதரன் நரவர்மனுக்கு (ஆட்சி;பொ.ச.1094-1133) ஆதரவாக அரியணையைத் துறந்தான். பின்னர் பரமார இராச்சியத்தின் தெற்குப் பகுதியை (பெரார் மற்றும் தக்காணத்தின் வடக்குப் பகுதிகள்) குறைந்தது பொ.ச.1112 வரை ஆட்சி செய்தான். பின்னர், விக்ரமாதித்தனின் அழைப்பின் பேரில் சாளுக்கிய அரசவைக்குச் சென்றான். [6] வரலாற்றாளர் கே. சி. ஜெயின் இந்தக் கோட்பாட்டுடன் உடன்படவில்லை. ஜெகதேவவானும் இட்சுமதேவனும் இரண்டு தனித்துவமான இளவரசர்கள் என்று வாதிடுகிறார். [7]
தேதி குறிப்பிடப்படாத ஜெயநாட்டுக் கல்வெட்டு ஒன்று அவ்வூரின் கோயில் மண்டபத்தின் தரையில் கண்டெடுக்கப்பட்டது. இது சமசுகிருத மொழியில் கவிஞர் அசுவத்தாமானால் இயற்றப்பட்டது. மேலும் இது பழங்கால அடிப்படையில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பத்மாவதி என்ற ஒருவரால் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் கட்டப்பட்டதை இது பதிவு செய்கிறது. ஜெகதேவனின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.[8]
சூரியனையும் சிவனையும் போற்றும் வசனங்களுடன் கல்வெட்டு தொடங்குகிறது. பராமர வம்சத்தின் நிறுவனர் வசிட்டரால் ஒரு தியாக நெருப்புக் குழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகக் கூறும் அக்னிவன்ச புராணத்தை அது குறிப்பிடுகிறது.ஜெகதேவன் இந்த வம்சத்தில் பிறந்தான்: இவனது தந்தை மற்றும் தந்தைவழி மாமா முறையே உதயாதித்தன், போஜன் என்றும் குறிபிடப்பட்டுள்ளனர்.[9]
அடுத்து, ஜெகதேவனின் இராணுவ சாதனைகளை இந்த பதிவு விவரிக்கிறது:[10]
மீதமுள்ள கல்வெட்டு பத்மாவதி என்பவளை விவரிக்கிறது. அவள் லட்சுமியை ஒத்தவள் என்றும், "இந்த நகரத்தில்" "நிம்பாதித்யா" என்ற கோயிலைக் கட்டினாள் என்றும் கூறுகிறது. கல்வெட்டு நகரத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் இது ஒரு கோயிலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஜெயநாட்டைக் குறிக்கிறது. தகிமா குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சுனனின் இராணியாக பத்மாவதி விவரிக்கப்படுகிறாள். அர்ச்சுனன் உதயாதித்திய மன்னனுக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் மிகவும் பிடித்தவனாகவும் விவரிக்கப்படுகிறான். தகிமா குடும்பத்தின் மற்றொரு உறுப்பினராக உதயாதித்தனின் மந்திரி லோலர்காவையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவன் ஜெகதேவனுக்கு விசுவாசமாக இருந்த சைவர் என்று விவரிக்கப்படுகிறான். லோலர்காவின் தந்தை குணராசனும் உதயாதித்தனுக்கு மிகவும் பிடித்தமானவனாக இருந்தான். [13]
குசராத்தி புராணங்களின் தொகுப்பான இராச மாலாவில் ஜெகதேவனைப் பற்றிய ஒரு புராணக்கதை குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜெகதேவ் பர்மர் தார் பகுதியின் மன்னன் உதயாதித்தனுக்கும், அவனது சோலங்கி (சௌலுக்கிய) மனைவிக்கும் பிறந்தவன் என்று குறிப்பிடுகிறது. வகேலா வம்சத்தைச் சேர்ந்த ஒரு மனைவி மூலம் பிறந்த இரிந்த்வால் என்பவன் மன்னனுக்கு விருப்பமான மகனாகவும், வாரிசாகவும் இருந்துள்ளான். துக்தோடாவின் சாவ்டா ஆட்சியாளர் ஜெகதேவனின் தகுதிகளால் ஈர்க்கப்பட்டு தனது மகள் விர்மதியை பரமார இளவரசருக்கு திருமணம் செய்து வைத்தார். வகேலா இராணியின் தொல்லை காரணமாக ஜெகதேவன் தனது தந்தையின் இராச்சியத்தை விட்டு வெளியேறி துக்தோடாவை அடைந்தான். அங்கிருந்து, அவனும் அவனது மனைவி விர்மதியும் சோலங்கி மன்னர் சித் ராஜ் ஜெய்சிங்கின் ( ஜெயசிம்ம சித்தராஜா ) தலைநகரான அன்கில்வரத்துக்கு (பதான்) அணிவகுத்துச் சென்றனர். [14]
மற்றொரு பரமார பாரம்பரியத்தின் படி, இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சில பழங்குடியினர் "ஜெகதேவ் பர்மார்", அதாவது ஜெகதேவனின் வழிவந்தவர்கள் எனக் கூறினர். ஜெகதேவனின் மருமகன் யசோவர்மனின் (ஆட்சி. பொ.ச.1133-1142 ) ஆட்சியின் போது, தில்லி சுல்தானகம் மால்வா, மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்பின் விளைவாக ஜெகதேவனின் வழித்தோன்றல் இராய் சங்கரும் சில பரமாரர்களும் இராஜ்புதனம் வழியாக பஞ்சாபிற்கு குடிபெயர்ந்ததாக பரமாராக் படைப்புகள் கூறுகின்றன. இராய் சங்கருக்கு கியோ, தியோ அல்லது தெனு, சியோ என மூன்று மகன்கள் இருந்தனர். தியோவின் வழித்தோன்றல்கள் இன்றைய அரியானாவிலுள்ள மாதவூர் கிராமத்தை நிறுவினர். அங்கிருந்து அவர்கள் மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்களில் சிலர் இந்து மதத்திலிருந்து சீக்கிய மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள். [15]
இன்றைய குசராத்தில் உள்ள முலி மாகானத்தின் ஆட்சியாளர்களும் ஜெகதேவ் பரமாரனின் வம்சாவளியைக் கூறினர். [16]
இன்றைய ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்த அக்னூர் சமஸ்தானத்தின் அம்பராயன் ஆட்சியாளர்கள் தார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த "ஜெகதேவ் சிங்" (ஜெகதேவன்) அவர்களின் வம்சாவளியைக் கண்டறிந்தனர். [17]