ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு

ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு (Gerald Maurice Clemence) (ஆகஸ்டு 16, 1908நவம்பர் 22, 1974) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சைமன் நியூகோம்பு அவர்களால் கவரப்பட்டவர் ஆவார். எனவே இவர் தம் வாழ்நாளில் கணினியைப் பயன்படுத்தி வானியலில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். இவர் அமெரிக்க கடற்பயண நாவாய் இயக்க வழிகாட்டி அலுவலகத்துக்குப் பெருமையைச் சேர்த்தார்.[1]

இளமை

[தொகு]

இவர் உரோடே தீவில் உள்ள கிரீன்வில்லியில் பிறந்தார். இவரது தந்தையார் இரிச்சர்டு ஆர். கிளெமான்சு ஆவார். இவரது தாயார் ஓவட்லீ எனும் உலோரா ஆவார். இவரது தொடக்கக் கல்வி பள்ளி ஆசிரியராக இருந்த தன் தாயாரால் அளிக்கப்பட்டது. தன் ஆர்வத்தால் இவர் வானியலைக் கற்றார்.இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் சேர்ந்து 1930 இல் தன் பட்டத்தைப் பெற்றார். இவர் வானியலுக்கான அரசுப் பணித் தேர்வில் கலந்துகொண்டு போட்டியிட்ட 50 பேரில் முதல்வராகத் தேறி, அமெரிக்க நாவாயியல் வான்காணகத்தில் சேர்ந்தார்.இந்தப் பதவியில் சேர்ந்ததும், இவர் எடித் மெல்வினா வைல் எனும் செவிலியை 1928 இல் மணந்தார்.[1]

புதனும் செவ்வாயும்

[தொகு]

வில்லியம் மார்க்கோவிட்சுடன் நேரச் சேவைத் துறையில் பணியாற்றிய பிறகு,[2] கிளெமான்சு எச். ஆர். மார்கனின் கீழ பணியமர்த்தப்பட்டார். ஜார்ஜ் வில்லியம் ஜில் 19 ஆம் நூற்றாண்டில் வியாழன், காரிக்கோள்(சனி) வட்டணைகளை கணித்தார். நியுகோம்பு பிற சூரியக் குடும்பக் கோள்களுக்கான வட்டணைகளைக் கணக்கிட்டுள்ளார். என்றாலும், அப்போது கிளெமான்சு காலத்தில் பிந்தைய 50 ஆண்டுகளுக்கான புதிய தரவுகள் பேரளவில் குவிந்திருந்தன. எனவே, இவர் புதன் வட்டணைக் கூறுகளை மிகத் துல்லியமாக மீண்டும் கணக்கிடலானார். இவரது முடிவுகள் 1943 இல் வெளியிடப்பட்டன. இவை பொதுச் சார்பியல் கோட்பாடு முன்கணித்தபடி புதனின் தலையாட்டம் அமைவதைத் தெளிவாக நிறுவின.[1][3]

இவர் செவ்வாய் வழித்தடத்தின் அமைப்பியல் பிழைகளை இனங்கண்டார். புள்ளியியலாகப் பெறப்பட்ட இப்பிழைகளும் எச்சங்களும்(residuals) குறிப்பிட்ட அலைவுநேரத்தில் இருப்பதைக் காட்டின. எனவே பூரியரின் தொடர்சார்ந்த முன்கணிப்புகள் பிழையானவை என்ற முடிவுக்கு வந்தார். இதனால், இவரும் கில்லும் பீட்டர் ஆந்திரியாசு கேன்சனும் 19 ஆம் நூற்றாண்டில் விவரித்திருந்த முறைகளைப் பின்பற்றி முதலில் இருந்தே புதியதொரு தொடரை உருவாக்க முனைந்தார். இந்தக் கணக்கீடுகளை இவர் "ஈய எழுதுகோல், பெரிய கணினித் தாள்கள், கையியக்க கணிப்பான்" ஆகியவற்றின் உதவியோடு செய்தார் ".[1] இந்தத் திட்ட இறுதிக்குள் மின்னனியல் கணிப்பான்கள் நடப்புக்கு வந்தபோதும் கண்க்கீடுகள் முடிய 12 ஆண்டுகள் ஆகின.[4]

நாவாய் வழிகாட்டி அலுவலகம்

[தொகு]

வாலசு ஜான் எக்கர்ட்டு 1940 இல் நாவாய் வழிகாட்டி அலுவலக இயக்குராகப் பணியமர்த்தப்பட்டார். இவர் உடனடியாக, அறிவியல் கணக்கீடுகளுக்காக துளையட்டைக் கணினி எந்திரங்களை இறக்குமதி செய்தார். இந்தப் புதிய பகுதிக்கு முதுநிலையாளராக கிளெமான்சு முதலில் பணிபுரிய வந்துள்ளார். விரைவில் கிளெமான்சு மின்னனியல் கணக்கீடுகளின் வல்லமையைப் புரிந்துகொண்டார். தொடக்கநிலையில், இவற்றைத் தன் செவ்வாய்ப் பணிகளுக்குப் பயன்படுத்தி, விரைவில் அமெரிக்க இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டபோது, அன்றைக்கு மிகவும் பரலாகத் தேவைப்பட்ட படைத்துறைப் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.[1]

இவர் 1942 இல் உதவி இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். பவுல் கெர்கெட்டின் பணியாளர்களில் ஒருவாகச் சேர்ந்தார்.[1] இவரும் பவுலும் இணைந்து, மாறா இடைவெளிகளுக்கு மாற்றாக, உகப்புநிலை இடைவெளி நுட்பத்தைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்து, கணிதவியல் பட்டியல்களை உருவாக்கினர். இப்பணிக்கு நேரியல் இடைக்கணிப்பு பயன்படுத்தப்பட்டது.[5]

எக்கர்ட்டு 1945 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயக்கிய ஐபிஎம் கணிப்பு அலுவலகத்தை விட்டு விலகினார். எர்கெட்டு சிஞ்சினாட்டி வான்காணக இயக்குநரானார். கிளெமான்சு நாவாய் வழிகாட்டி அலுவலக இயக்குநரானார். இப்பதவில் ஒருகாலத்தில் இவரது அணுக்க வழிட்டியான நியுகோம்பு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இங்கே இவர் திறமையும் வல்லமையும் வாய்ந்த ஆட்சியாளராகப் புகழ்பெற்றார்.[1]

கூட்டுமுறை ஆராய்ச்சி

[தொகு]

செறிவான கூட்டுறவுமுறை ஆராய்ச்சி 1947 இல் வானியக்கவியலில் தொடங்கியது. இதில் கிளெமான்சின் அலுவலகமும் கொலம்பியா எக்கர்ட் ஆராய்ச்சிக் குழுவும் யேல் பல்கலைக்கழக வான்காணகமும் டிர்க் பிரவுவேரின் வழிகாட்டுதலின்கீழ் கலந்துக்கொண்டன. டிர்க் பிரவுவேர் ஏற்கெனவே எக்கர்ட்டுடன் கணினித் துளையட்டைகள் ஆய்வில் ஈடுபட்டவராவார்.[1]

பின்னாள் வாழ்க்கை

[தொகு]

இவர் 1958 இல் ஐக்கிய அமெரிக்க நாவாய் வான்காணத்தின் அறிவியல் இயக்குராகப் பணியமர்த்தப்பட்டார். இவர் இப்பதவியில் ஆர்வத்தோடும் மும்முரமாகவும் ஈட்பட்டார். இவரது முதன்மையான ஆராய்ச்சி இரண்டாம் நிலைக்குத் தாழ்ந்தது. ஆனால், இவர் சார்பியல் கோட்பாடு, வானியல் மாறிலிகள், கால அளவீடு ஆகிய புலங்களில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இவர் பாடநூல்களை இயற்றவும் பிறரோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.[1][6][7]

என்றாலும் இவர் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்ததால் 1962 இல் மேலாண்மைப் பதவிகளைத் துறந்தார். இவருக்கு பிரவுவேர் 1963 இல் யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை வாங்கித் தந்தார். இங்கு இவர் தன் புவி வட்டணைச் சிற்றலைவுக் கோட்பாட்யு ஆய்வினைத் தொடர்ந்தார். ஆனால் இதற்கும் தடங்கல் ஏற்பட்டதால் ஆராய்ச்சியை முடிக்க முடியவில்லை. பிரவுவேர் 1966 இல் இறந்தமையால் கிளெமன்சு துறையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டிய தேவை உருவாகியது.[1]


பல மாதங்கள் நோய்வாய்பட்டிருந்து, 1974 நவம்பர் 22 இல் உரோடே தீவில் உள்ள புராவிடென்சில் இறந்தார்.[1]

ஆளுமை

[தொகு]

இவர் எப்போதுஅடக்கமான, ஆனால் தன்மதிப்பில் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். நடத்தையிலும் தோற்றத்திலும் மரபுசார்ந்தவராக விளங்கினார். இவரது எழுத்து சுருக்கமாகவும் துல்லியமாகவும் அமைந்தது. இவர் தம் பெற்றோரைப் போலவே உண்மையானவராகவும் அறச் சிந்தனை வாய்ந்தவராகவும் விளங்கினார். இவர் குடும்பப் பாங்கானவர். இவர் இரு ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையார். இவர் மூன்று ஆண் உடன்பிறப்புகளோடும் தங்கையுடனும் எப்போதும் இணக்கமான தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். இவர் இசையில் ஆர்வம் மிகத் தானே இசையும் வயலினும் பியானோவும் குழலும் கற்றுகொண்டுள்ளார். இவருக்குத் தொடர்வண்டிப் பயணம் பிடிக்கும்.[1]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் (பெரும்பிரித்தானியா), (1946);[1]
  • கனடிய அரசு வானியல் கழக உறுப்பினர், (1946);[1]
  • அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர், (1952);[1]
  • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், (1955);[1]
  • அமெரிக்க வானியல் கழகத் தலைவர், (1958–1960);[1]
  • அமெரிக்க வானியல் கழகப் பொற்பதக்கம், (1965);[1]
  • வானியல் இதழின் பதிப்பாசிரியர், (1969–1974);[1]
  • தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம், (1975);[1]
  • முதன்மைப் பட்டைச் சிறுகோள் 1919 கிளெமான்சு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 Duncombe (2001)
  2. "William Markowitz, 1907-1998". U.S. Naval Observatory. Department of the Navy. Archived from the original on 2016-05-10. பார்க்கப்பட்ட நாள் 2007-08-29.
  3. Astronomical Papers of the American Ephemeris (1943)
  4. Astronomical Papers of the American Ephemeris (1949)
  5. Herget, P.; Clemence, G. M. (1944). "Optimum-interval punched-card tables". Mathematical Tables and Other Aids to Computation (American Mathematical Society) 1 (6): 173–176. doi:10.2307/2002889. 
  6. Brouwer & Clemence (1961)
  7. Woolard & Clemence (1966)
  8. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1919) Clemence. Springer Berlin Heidelberg. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் April 2016. {{cite book}}: Check date values in: |accessdate= (help)

நூல்தொகை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]