ஜே. பி. சந்திரபாபு J. P. Chandrababu | |
---|---|
பிறப்பு | தூத்துக்குடி, இந்தியா | ஆகத்து 5, 1927
இறப்பு | மார்ச்சு 8, 1974 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 46)
பணி | நகைச்சுவை நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர், நடனம் |
சமயம் | கிறித்தவர் |
வாழ்க்கைத் துணை | சீலா (தி. 1958; ம.மு. 1958) |
சந்திரபாபு (J.P.Chandrababu; 5 ஆகத்து 1927 – 8 மார்ச் 1974) தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] ஜோசப்பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரைப் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர், சந்திரகுல வம்சத்தில் பிறந்திருந்த காரணத்தால் தமது பெயரைப் பின்னாளில் சந்திரபாபு என மாற்றிக் கொண்டார்.[சான்று தேவை]
சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும் பின்னர்க் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது 16-ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தனது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."
1947-ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-ஆம் ஆண்டுகளில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்ராஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
தமது நடிப்பிற்காகவும் பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் மகிழ்ச்சியாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)
சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
கவலை இல்லாத மனிதன் மற்றும் குமார ராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்கத் தொடங்கினார்.
அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 -ஆம் ஆண்டுகளில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் தொடங்கியதும் சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.
1975-ஆம் ஆண்டு வெளிவந்த 'பிள்ளைச் செல்வம்' (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார். [Source: http://www.lakshmansruthi.com/cineprofiles/chandrababu-01.asp பரணிடப்பட்டது 2016-08-24 at the வந்தவழி இயந்திரம்]
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.
சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர். 20-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக் கொண்டிருந்த சமயம். சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின் மீது அதிகபற்றுக் கொண்டவராக இருந்தார். அந்தச் சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் (1958) மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேவாலயம் கட்டுவதற்காகக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தார். அந்தத் தொகையைக் கொண்டே இந்தத் தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் தொடங்கப்பட்டன. இதைக் குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.[2]
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்: