எடை | 184.5 காரட்டுகள் (36.90 g) |
---|---|
நிறம் | நிறமற்றது |
வெட்டு | செவ்வக மெத்தை வெட்டு |
மூல நாடு | இந்தியா |
எடுக்கப்பட்ட சுரங்கம் | இந்தியா |
கண்டுபிடிப்பு | 1884 |
உண்மையான உடைமையாளர் | இந்திய நிசாம் |
தற்போதைய உடைமையாளர் | இந்திய அரசு |
கணப்பிடப்பட்ட பெறுமதி | £100 மில்லியன் (2008) |
ஜேக்கப் வைரம் (Jacob Diamond) (முன்னர் இம்பீரியல் அல்லது கிரேட் ஒயிட் டயமண்ட் என அறியப்பட்டது) என்பது ஒரு பெரிய வைரம் ஆகும். இது உலகின் ஐந்தாவது பெரிய வைரம் என்ற இடம் பெற்றுள்ளது.[1][2] முன்பு இது ஐதராபாத் நிசாமுக்கு சொந்தமான விக்டோரியா வைரம் என நம்பப்பட்டது, தற்போது இதன் உரிமையாளராக இந்திய அரசு உள்ளது.
இந்த வைரமானது செவ்வக மெத்தை வடிவில் வெட்டப்பட்டு, 58 பட்டைகள் கொண்டது ஆகும். மேலும் இது 39.5 மிமீ நீளம், 29.25 மிமீ அகலம் கொண்டதாக, 22.5 மிமீ தடிமன் கொண்டதாக 184.75 காரட் (36.90 கி) எடைகொண்டது ஆகும்.
புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தைப் போலன்றி, ஜேக்கப் வைரமானது வன்முறையால் கிடைத்த வைரமில்லை எனலாம். இதன் வரலாற்றில் இது இரு முறை கை மாறியுள்ளது.[3] என்றாலும் இறுதியில் இந்திய ஒன்றியத்துடன் ஐதராபாத் இராச்சியம் இணைக்கப்பட்ட பிறகு இந்திய அரசின் உடைமையாக மாறியது.
இந்த வைரக் கல்லானது வெட்டப்படுவதற்காக ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, சுமார் 400 காரட் (80கி) எடையில் இருந்தததாக கருதப்படுகிறது.
இந்த வைரத்தை விற்பனை செய்ய 1891 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் மால்கம் ஜேக்கப் என்பவர் ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தின் ஆறாவது நிசாமான மெஹபூப் அலிகானிடம் வைரத்தின் மாதிரியைக் காட்டி அதை விற்பது குறித்து பேசினார். வைரத்தின் விலை ரூ. 46 லட்சம் எனவும், அதை வாங்க சம்மதித்தால் பாதிபணத்தை முன்பணமாக செலுத்தவேண்டும் என்றார். அ்வாறானால் வைரத்தை தருவிப்பதாக கூறினார். இதற்கு அசல் வைரக்கல்லைக் கொண்டுவந்தால் அதை பார்த்துவிட்டு, பணம் கொடுப்பதாக நிசாம் கூறினார். இதையடுத்து நிசாமின் சொல்லை நம்பி வைரக்கல்லை ஜோக்கப் வரவழைத்தார். அதற்காகத் தன்னுடைய பணத்திலிருந்து ரூ. 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரியின் கணக்கில் கட்டியிருந்தார். அசல் வைரம் வந்ததும் அதை நிசாமிடம் கொடுத்தர். அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிசாம் தான் எதிர்பார்த்தது போல் வைரம் இல்லை என்று வைரத்தை திருப்பி கொடுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் ஜேக்கப் இங்கிலாந்து வணிகரிடம் வைரத்தைத் திருப்பி அனுப்புவதாகவும், தான் செலுத்திய பணத்தைத் திரும்பத் தரும்படியும் கேட்டுக்கொண்டார். இதற்கு ஒப்புக்கொள்ளாத இங்கிலாந்து வணிகர், ஜேக்கப், தன்னை ஏமாற்ற நினைப்பதாகப் புகார் கொடுத்தார். இதையடுத்து ஜேக்கப் கைது செய்யப்பட்டு, அவர்மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோக்கப் வழக்கில் இருந்து விடுதலையானார், என்றாலும் அவர் வைரத்துக்கு செலுத்திய பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இறுதியில் வைரத்தின் விலையில் மீதி பாதியான ரூ. 23 லட்சத்தை, நிசாமிடம் வாங்கிக் கொண்ட இங்கிலாந்து வியாபாரி வைரத்தை நிசாமிடமே அளித்துவிட்டார். ஆக வைரமானது பாதி விலைக்கு நிசாமிடம் வந்து சேர்ந்தது.
கடைசி நிசாமான உஸ்மான் அலிகான் தன் தந்தை காலமான பல ஆண்டுகளுக்குப் பிறகு, சௌமகல்லா அரண்மனையில் உஸ்மானின் தந்தையும், முன்னாள் நிஜாமுமான மெஹபூப் அலிகானின் பழைய காலணிக்குள் இருந்து இந்த வைரக்கல்லை எடுத்தார். அவர் வைரத்தின் உண்மையான மதிப்பை உணராமல் அதை ஒரு சாதாரணக் கல் என்று கருதி, நீண்டகாலம் அதை தன் மேசையில் தாள்கள் பறக்காமலிருக்க வைத்திருந்தார். பின்னர் இது நிசாமின் பொக்கித்தை வந்தடைந்தது.
நிசாம் சொத்துகள் தொடர்பான வழக்குகளுக்குப் பிறகு இந்த வைரமானது நிசாமின் இதர நகைகளுடன் சேர்த்து 1995 ஆம் ஆண்டு 13 மில்லியன் டாலர் விலையில் நிசாமின் அறக்கட்டளையிடமிருந்து இந்திய அரசால் வாங்கப்பட்டு, மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டது. [citation needed]
2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத் சலார் ஜங் அருங்காட்சியகத்தில் நடந்த நிசாமின் நகை கண்காட்சியின் ஒரு முக்கிய அம்சமாக ஜேக்கப் வைரம் காட்சிப்படுத்தப்பட்டது.