ஜொகூர் சுல்தான் Sultan of Johor Sultan Johor Darul Takzim | |
---|---|
![]() | |
ஆட்சிக்காலம் | ஜொகூர் சுல்தான் பதவியில்: (2010 – இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 23 மார்ச் 2015 |
முன்னையவர் | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் |
பின்னையவர் | ஜொகூர் சுல்தான் இசுமாயில் இட்ரிஸ் |
பிறப்பு | 22 நவம்பர்1958 |
மரபு | தெமாங்கோங் |
தந்தை | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் |
தாய் | யோசபீன் ரூபி திரெவொரோ |
ஜொகூர் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Johor; மலாய்: Sultan Johor; சீனம்: 柔佛苏丹; ஜாவி: سلطان جوهر) என்பவர் ஜொகூர் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், ஜொகூர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் சுல்தான் ஆவார்.
முன்னர் காலத்தில், ஜொகூர் சுல்தான் தன் மாநிலத்தின் மீது முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார்; மற்றும் ஒரு பெண்டகாராவால் அறிவுரை வழங்கப்பட்டார். தற்போது, பெண்டகாராவின் பதவி, மந்திரி பெசார் (Menteri Besar) எனும் மாநில முதல்வரால்; ஜொகூர் மாநில முடியாட்சி அரசியலமைப்பின் வழி ஏற்கப்பட்டுள்ளது. ஜொகூர் சுல்தானுக்கு ஜொகூர் அரச இராணுவப் படை எனும் சொந்த இராணுவப் படையும் (Royal Johor Military Force) உள்ளது.[1]
ஜொகூரின் முதல் சுல்தான் ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா; இவர் மலாக்காவின் கடைசி சுல்தானான சுல்தான் மகமுட் சாவின் மகன் ஆவார். ஜொகூரில் இருந்த மலாக்கா சுல்தானகத்தின் வழித்தோன்றல்களின் ஆட்சி, 1699-இல் ஜொகூர் சுல்தான் இரண்டாம் மகமுத் சாவின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது. 1699-இல் அரியணை ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் சாலீல் சா என்பவரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து ஜொகூரில் புதிய ஜொகூர் பெண்டகாரா வம்சாவளியின் ஆட்சி தொடங்கியது. [2]
ஜொகூர் சுல்தான்களின் வம்சாவளிகளிகளைச் சார்ந்த ஜொகூர் சுல்தானகம் என்பது மலாய் மாநிலங்களில் உள்ள பழைமையான அரச வம்சாவளிகளில் ஒன்றாகும்.
தற்போதைய ஜொகூர் சுல்தான் பதவி, ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் என்பவரால் வழி நடத்தப்படுகிறது, 23 சனவரி 2010-இல் ஜொகூர் மாநிலத்தின் 23-ஆவது சுல்தானாக அறிவிக்கப்பட்டு; 23 மார்ச் 2015 அன்று ஜொகூர் பாரு இசுதானா பெசாரில் முடிசூட்டப்பட்டார்.