ஜோடி இவான்சு ( Jodie Evans ) ( பிறப்பு செப்டம்பர் 22, 1954) அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலரும், எழுத்தாளரும், ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுனின் அமைச்சரவையில் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கான அவரது பிரச்சாரத்தை நிர்வகித்தார். [1] மெடியா பெஞ்சமின் மற்றும் பிறருடன் இணைந்து கோட் பிங்க் என்ற பெண்களின் போர் எதிர்ப்பு ஆர்வலர் அமைப்பை நிறுவினார். [2] மழைக்காடு நடவடிக்கை வலைத்தளக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் பிறந்து வளர்ந்தார். லாஸ் வேகஸில் உள்ள ஒரு பெரிய விடுதியில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தபோது முதலில் சமூக நீதி செயல்பாட்டில் ஆர்வம் காட்டினார். சக பணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், தனது அன்றாட வாழ்க்கைக்காகவும் இதில் ஈடுபட்டார்.[3]
இவரது இளஞ்சிவப்பு குறியீடு எதிர்ப்பு நடவடிக்கைகளில் 2008 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் சேரா பேலின் உரையை சீர்குலைத்தது. [4] [5] 2009 ஆம் ஆண்டு சாண்டா மோனிகாவில் இஸ்ரேலிய அழகுசாதன நிறுவனமான அஹாவாவுக்கு எதிரான போராட்டமும் அடங்கும். [6] ஆப்கானித்தானில் இருந்து திரும்பியதும், அங்கு நடக்கும் மோதலுக்கு புதிய துருப்புக்களை அனுப்ப வேண்டாம் என்று ஆப்கனிலும், அமெரிக்காவிலும் பெண்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கினார். [7] [8]
இவர் மக்கள் ஆதரவு அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் மற்றும் தலைவராகவும் உள்ளார். இது 2017 இல் நிறுவப்பட்ட "தாட் ஒர்க்ஸ் (ThoughtWorks ) என்ற ஒரு இலாப நோக்கற்ற மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. [9]
2019 ஆம் ஆண்டில், நடிகையும் ஆர்வலருமான ஜேன் ஃபோண்டாவுடன் வாசிங்டன், டி. சி.யின் தலைநகரில் " ஃபயர் டிரில் ஃப்ரைடேஸ்" என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான வாராந்திர பேரணிகள் மற்றும் கீழ்ப்படியாமையின் செயல்களில் சேர்ந்தார். உலகளாவிய காலநிலை நெருக்கடியை முன்னிலைப்படுத்த ஃபோண்டாவுடன் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டார். [10]
மேக்ஸ் பலேவ்ஸ்கி என்பவரை மணந்தார். இவரது கணவர் 2010இல் இறந்து போனார். தற்போது வெனிஸ், கலிபோர்னியாவில் வசிக்கிறார். நெவில் ராய் சிங்காம் என்பவர் இவரது செயல்பாட்டில் தொழில்நுட்ப பங்குதாரராக இருக்கிறார். [9]
2010 கோடையில், ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரரின் தாயார் டெப்பி லீயிடம், "உங்கள் மகன் ஈராக்கிற்குச் செல்லும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்தால், அவன் அங்கேயே இறக்கத் தகுதியானவன்" என்று 2008 இல் இவான்சு கூறியதாகக் கூறப்படும் கருத்து சர்ச்சை எழுந்தது. [11] குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக் விட்மேன் தனது 2010 கலிபோர்னியாவிற்கான ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். இவான்சு நடத்திய நிதி திரட்டலில் இருந்து ஜெர்ரி பிரவுன் பணத்தைத் திரும்பக் கோரினார்.