ஜோதி வெங்கடாச்சலம் | |
---|---|
![]() | |
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,அமைச்சர் | |
கேரளா ஆளுநர் | |
பதவியில் 14 அக்டோபர் 1977 – 27 அக்டோபர் 1982 | |
முன்னையவர் | என்.என். வாங்கூ |
பின்னவர் | பா. ராமச்சந்திரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஜோதி வெங்கடாச்சலம் (Jothi Venkatachalam; 27 அக்டோபர் 1917 - 28 நவம்பர் 1992) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.
இவர் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பிறந்தவர். அங்கே வாழ்ந்த வெங்கடாசலம் என்பவரும் இவரும் 1930-களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். சாதி அடுக்குமுறையில் கணவரின் சமூகத்தைவிட, ஜோதியின் சமூகம் உயர்ந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.[1] இவரது கணவர் வெங்கடாசலம் ஒரு தொழிலதிபரும் சென்னையின் ஷெரீப்பாகவும் இருந்தவர்.[2]
திருமணத்துக்குப் பிறகு ஜோதி சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டினார். காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962ல் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக எழும்பூர் தொகுதியில் தி.மு.க.வின் க.அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். 1971ல் இந்திய தேசிய நிறுவன காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீரங்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார்[3][4]. அக்டோபர் 10, 1953 முதல் ஏப்ரல் 12,1954 வரை சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்[5][6]. 1962 - 63 ல் காமராஜர் அமைச்சரவையில் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும்[7][8][9] பின்னர் அக்டோபர் 14,1977 முதல் அக்டோபர் 26, 1982 வரை கேரளத்தின் முதல் பெண் ஆளுனராகவும் இருந்தார்[10].
சென்னையில் இவரது குடும்பத்தின் பரம்பரை வீடு இருந்தஅட்கின்சன்ஸ் சாலைக்கு அவரது இறப்புக்குப் பிறகு அட்கின்சன்ஸ் சாலைக்கு, ஜோதி வெங்கடாசலம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.[11] சென்னை வேப்பேரியில் இப்போதும் பெயர் மாற்றப்படாமல் இந்தச் சாலை உள்ளது. இவர் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் ஆவார். 1974 இல் இந்திய அரசு இவருக்கு பொதுவிவகாரங்கள் பிரிவில் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[12]