ஜோய் கார்ப்ஸ்ட்ராங் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோசப் ஆம்ஸ்ட்ராங் நவம்பர் 26, 1988 |
தேசியம் | ஆஸ்திரேலியா |
பணி | விலங்குரிமை ஆர்வலர் |
அறியப்படுவது | விலங்குரிமை செயற்பாடு |
வலைத்தளம் | |
www |
ஜோய் கார்ப்ஸ்ட்ராங் | |
---|---|
யூடியூப் தகவல் | |
ஒளிவழித்தடம் | |
Presented by | ஜோசப் டொமினிக் ஆம்ஸ்ட்ராங் |
செயலில் இருந்த ஆண்டுகள் | 2015-இன்று வரை |
காணொளி வகை(கள்) | விலங்குரிமை செயற்பாடு |
சந்தாதாரர்கள் | 161,000 |
மொத்தப் பார்வைகள் | 42 மில்லியன் |
திசம்பர் 2024 அன்று தகவமைக்கப்பட்டது |
ஜோய் கார்ப்ஸ்ட்ராங் (ஆங்கில மொழி: Joey Carbstrong) (பிறப்பு: 26 நவம்பர் 1988[1]) என்று அறியப்படும் ஜோசப் ஆம்ஸ்ட்ராங் ஒரு ஆஸ்திரேலிய விலங்குரிமை ஆர்வலர் ஆவார். முன்னாள் குற்றவாளியான இவர்,[2] பின்னர் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் உரையாற்றுவதன் மூலமும் விவாதங்கள், பல்வேறு தொலைக்காட்சி நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலமும் விலங்குரிமை குறித்தும் விலங்கின விடுதலை குறித்தும் நனிசைவ வாழ்க்கை முறை குறித்தும் பரப்புரை செய்பவராக மாறினார்.
கார்ப்ஸ்ட்ராங் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்து ஜோசப் ஆம்ஸ்ட்ராங் என்று அழைக்கப்பட்டார்.[2] அவர் புகழ்பெறுவதற்கு முன்பு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பகிரங்கமாகக் கூறியுள்ளார்.[2] சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் நனிசைவ வாழ்க்கை முறையை பின்பற்றலானார்.[2] அவர் தனது வலது காதுக்குப் பின்னால் "நனிசைவ" பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.[3]
தனது பதினான்காவது வயதில் கார்ப்ஸ்ட்ராங் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்.[2] பலதரப்பட்ட அடிமட்ட வேலைகளைச் செய்து வந்த இவரை 22-வது வயதில் காவல்துறை சீர்த்திருத்ததிற்கு ஆட்படுத்தியது. இந்தக் காலகட்டத்திற்குள் மூன்று தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட குற்றப் பதிவை அவர் பெற்றிருந்தார்.[2] 18 மாதங்கள் வீட்டுக் காவலில் இருந்த கார்ப்ஸ்ட்ராங், செப்டம்பர் 2011-ல் ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்திற்காக குண்டுகள் ஏற்றப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது விடுதி அறையில் மேலும் பல ஆயுதங்களும் கூடுதல் வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக அவர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.[2] சிறையில் இருந்தபோது தனக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்ததாகவும் கார்ப்ஸ்ட்ராங் கூறியுள்ளார்: "நான் என் வாழ்க்கையைப் புதிய கண்கள் கொண்டு பார்க்கத் துவங்கினேன். அங்குள்ள மற்ற கைதிகளையும் கவனித்தேன். அதன் பின்னர் நான் அங்கு இருக்க விரும்பவில்லை. அந்தக் கும்பலை விட்டு வெளியேறவே விரும்பினேன்."[2][4]
மே 2021-ல், கார்ப்ஸ்ட்ராங் தான் தீயப் பழக்கங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஒரு காணொளியினை வெளியிட்டார்.[5]
கார்ப்ஸ்ட்ராங் ஆஸ்திரேலியா, ஹாங்காங்,[6] இங்கிலாந்து ஆகிய இடங்களில் விலங்குரிமை குறித்த தெருச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அடிதொட்டிகளுக்கு வெளியே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வதைகூடப் படங்களையும் காணொளிகளையும் பகிர்வதன் மூலமும் நனிசைவ முறையை ஊக்குவிக்கும் இயக்கங்களான அனானிமஸ் ஃபார் தி வாய்ஸ்லெஸ் (Anonymous for the Voiceless), தி சேவ் மூவ்மெண்டு (the Save Movement) உள்ளிட்ட விலங்குரிமைக் குழுக்கள் சார்பில் நேரிலும் சமூக ஊடகங்களிலும் உரையாடி வருகிறார்.[7][8]
மே 2023-ல் இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஆஷ்டன்-அண்டர்-லைன் நகரில் உள்ள பில்கிரிம்ஸ் பிரைட் வதைகூடத்தில் கண்காணிப்புக் கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை கார்ப்ஸ்ட்ராங் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவ்வதைகூடத்தில் பன்றிகள் "மிகவும் கொடூரமான" முறையில் கரியமில வாயுவைக் கொண்டு வதைக்கப்பட்டு கொல்லப்படுவதை இப்படங்கள் வெளிப்படுத்தின.[9] இப்படங்கள் யாவும் கார்ப்ஸ்ட்ராங் தனது "பிக்னொரண்ட்" (Pignorant) என்ற புதிய ஆவணப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒரு பகுதியாகும்.[9]
ஜனவரி 2018-ல், அவர் ஒரு 'நனிசைவக் கணிப்பு ஐக்கிய இராஜ்ஜிய சுற்றுப்பயணம்' ஒன்றை மேற்கொண்டார். இதில் பல வதைகூடங்களுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.[2]
2018-ல் கார்ப்ஸ்ட்ராங் பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான திஸ் மார்னிங் என்ற நிகழ்ச்சியில் இரண்டு விவசாயிகளுடன் விவாதம் நடத்தினார்.[10] அனல் பறக்கும் அந்த விவாதத்தின் போது, கார்ப்ஸ்ட்ராங் மாடுகளின் மீது நிகழ்த்தப்படும் செயற்கைக் கருவூட்டலை பாலியல் துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாக விவரித்தார்.[10] மேலும் பால் பண்ணைத் தொழில் பசுக்களின் மீது "பாலியல் அத்துமீறல்களைப்" புரிகின்றன என்றும் கூறினார்.[10] 'தி ஜெர்மி வைன் ஷோ' நிகழ்ச்சியில், கார்ப்ஸ்ட்ராங் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான வைன் அருந்திய பன்றி இறைச்சியும் பாலாடைக்கட்டியைக் கொண்டும் செய்த சாண்ட்விச்சிற்குக் கண்டனம் தெரிவித்தார்.[11][12] 2020-ல் கார்ப்ஸ்ட்ராங் பிபிசி 3 தொலைகாட்சியில் நடந்த வீகன்வில் நிகழ்ச்சியில் பங்கோற்றார்.[13][14]