டத்து முசுதபா டத்து அருன் Datu Mustapha Datu Harun داتو مصطفى داتو هارون | |
---|---|
![]() | |
3-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 12 மே 1967 – 1 நவம்பர் 1975 | |
ஆளுநர் | பெங்கிரான் அகமட் ரபியி புவாட் இசுடீபன்ஸ் முகமட் அம்டான் அப்துல்லா |
முன்னையவர் | பீட்டர் லோ சு இன் |
பின்னவர் | முகமட் சாயிட் கெருவாக் |
1-ஆவது சபா ஆளுநர் | |
பதவியில் 16 செப்டம்பர் 1963 – 16 செப்டம்பர்1965 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Datu Badiozaman Mustapha Datu Harun[1] 31 சூலை 1918 ![]() |
இறப்பு | 2 சனவரி 1995 கோத்தா கினபாலு, சபா, மலேசியா | (அகவை 76)
அரசியல் கட்சி | அசுனோ (1961–1989) அம்னோ (1989–1994) |
துன் டத்து முசுதபா டத்து அருன் (ஆங்கிலம்; Datu Mustapha Datu Harun அல்லது Tun Mustapha; மலாய்: Datu Mustapha bin Datu Harun) (பிறப்பு: 31 சூலை 1918; – இறப்பு: 2 சனவரி 1995) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மே 1967 முதல் நவம்பர் 1975 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 3-ஆவது முதலமைச்சராகவும்; செப்டம்பர் 1963 முதல் செப்டம்பர் 1965 வரை சபாவின் 1-ஆவது ஆளுநராகவும் பணியாற்றியவர் ஆவார். இவர் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[2][3])
16 செப்டம்பர் 1963-இல் சபாவை மலேசியக் கூட்டமைப்பிற்குள் இணைப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
டத்து முசுதபா, சபா, கூடாட், லிமாவ்-லிமாவான் கிராமத்தில் பிறந்தார். இவர் கலப்பு தவுசுக்-பஜாவ் (Tausūg; Suluk; Bajau) வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4]
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு நடந்த போது முக்கியமாக கூடாட்டில் அவர் நடத்திய கிளர்ச்சிகளின் காரணமாக அவர் சப்பானியப் படைகளால் தேடப்பட்டார். ஆனால் சப்பானியர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சப்பானியர்கள் அவரின் இளைய சகோதரரைப் பிடித்துக் கொன்றனர். ஏனெனில் டத்து முசுதபா எங்கு மறைந்திருக்கிறார் என்பதை அவரின் சகோதரர் வெளிப்படுத்தவில்லை.
இந்தக் கட்டத்தில் ஆல்பர்ட் குவாக் (Albert Kwok) எனும் மற்றொரு கிளர்ச்சியாளர் முசுதபாவை செசல்டன் கிளர்ச்சியில் (Jesselton Revolt) சேர அழைத்தார். ஆனால் கிளர்ச்சிக்கான நேரம் சரியாக இல்லை என்று கூறி காத்திருந்து தயார்படுத்துமாறு ஆல்பர்ட் குவாக்கை டத்து முசுதபா அறிவுறுத்தினார்.
செசல்டன் கிளர்ச்சி என்பது வடக்கு போர்னியோவில் சப்பானிய படைகளுக்கு எதிராக ஆல்பர்ட் குவோக் என்பவரின் தலைமையிலான கினபாலு கெரில்லா இயக்கத்தின் (Kinabalu Guerrillas) கிளர்ச்சி ஆகும்.[5] இருப்பினும், சபா வாழ் சீனர்கள், சப்பானியர்களால் துன்புறுத்தப்படுத்தப் படுவார்கள் என்பதால், ஆல்பர்ட் குவாக் முன்னதாகவே கிளர்ச்சியைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தக் கிளர்ச்சியில் உள்ளூர் சீனர், மலேசிய பழங்குடியினர், இயூரேசியர் மற்றும் சீக்கியர் (Sikh Indians of Jesselton) போன்றவர்களும் பங்கு எடுத்துக் கொண்டனர். கினபாலு கெரில்லா படையினர் ஏறக்குறைய 50 - 90 சப்பானிய வீரர்களைக் கொன்று, செசல்டன் நகரப் பகுதி; மற்றும் துவாரான் மாவட்டம், கோத்தா பெலுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் கட்டுப்பாட்டையும் தற்காலிகமாகத் தக்க வைத்துக் கொண்டனர்.[6]
கினபாலு கெரில்லாக்களிடம் மிகக் குறைவான ஆயுதங்கள் இருந்ததாலும்; சப்பானியர்களை எதிர்த்துப் போராடுவதற்கு, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயுதங்கள் கிடைக்காமல் போனதாலும் கிளர்ச்சி தோல்வி அடைந்தது. அதன்பின்னர் சப்பானியர்கள், சுலுக் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உள்நாட்டு குடிமக்கள் மீது பெரிய அளவிலான படுகொலைகளில் ஈடுபட்டனர்.
டத்து முசுதபா ஐக்கிய சபா தேசிய அமைப்பை (அசுனோ) நிறுவினார். அந்த அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார் என்றும் அறியப்படுகிறது.[7] இவர் 'சபா சுதந்திரத்தின் தந்தை' என்றும்; 'சபா வளர்ச்சியின் தந்தை' என்றும் அழைக்கப்படுகிறார்.
டத்து முசுதபா 2 சனவரி 1995 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள சபா மருத்துவ மையத்தில், தம்முடைய 76-ஆவது வயதில் காலமானார். அவர் கம்போங் உலு/உலு செபெராங், புத்தாத்தான், பெனாம்பாங்கில் உள்ள முசுலிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
சபா மாநிலத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில், சபா அறக்கட்டளை கட்டிடத்தை துன் முஸ்தபா கோபுரம் என சபா மாநில அரசு மறுபெயரிட்டுள்ளது. மேலும், சபா கூடாட் கடல்பகுதியில் உள்ள ஒரு கடல் பூங்கா; துன் முசுதபா கடல் பூங்கா என அவரின் நினைவாகப் பெயரிட்டுப்பட்டுள்ளது.