துன் டான் சியூ சின் Tun Tan Siew Sin | |
---|---|
மலேசிய சீன சங்கத்தின் 3-ஆவது தலைவர் | |
பதவியில் நவம்பர் 1961 – 8 ஏப்ரல் 1974 | |
முன்னையவர் | லிம் சோங் இயூ |
பின்னவர் | லீ சான் சூன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மலாக்கா, மலேசியா | 21 மே 1916
இறப்பு | 17 மார்ச்சு 1988 கோலாலம்பூர், மலேசியா | (அகவை 71)
அரசியல் கட்சி | மலேசிய சீனர் சங்கம் (MCA) |
துணைவர் | தோ புவான் கேத்தரின் லிம் செங் நியோ |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | சிங்கப்பூர் ராபிள்சு கல்லூரி |
வேலை | ம.சீ.சங்கம் தலைவர் மலேசிய அமைச்சரவை |
துன் டான் சியூ சின் (பிறப்பு: 21 மே 1916; இறப்பு: 17 மார்ச் 1988); (மலாய்: Tan Siew Sin; ஆங்கிலம்: Tan Siew Sin; சீனம்: 陈修信) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி. மலேசிய சீன சங்கத்தின் 3-ஆவது தலைவராகப் பணியாற்றியவர்.
1960- 1970-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சீனர்களின் தலையாயக் கட்சியாக மலேசிய சீனர் சங்கம் விளங்கியது. மலேசிய கூட்டணி; பின்னர் பாரிசான் நேசனல் (பி.என்) எனும் கூட்டணிகளின் முக்கிய உறுப்புக் கட்சியாக விளங்கி வந்தது.
இவர் மலேசியாவின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தவர். இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில், மலேசிய ரிங்கிட் என்ற புதிய மலேசிய நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது.
பதினைந்து ஆண்டுகள் நிதி அமைச்சராகப் பதவி வகித்ததன் மூலம், மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு.[1]
இவர் பாபா பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். சீனராக இருந்தாலும் சீன மாண்டரின் மொழி பேச மாட்டார். அவர் மலாக்காவில் உள்ள மலாக்கா உயர்நிலைப் பள்ளியிலும்; பின்னர் சிங்கப்பூரில் உள்ள ராபிள்ஸ் கல்லூரியிலும் படித்தவர்.[2]
1935-ஆம் ஆண்டில், அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. காசநோயால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இங்கிலாந்தில் சட்டத் துறையில் தன் உயர்கல்வி பயின்றார். இரண்டாம் உலகப் போரினால் அவர் சட்டப் படிப்பை முடிக்கவில்லை.
அவர் ஒரு வருடம் மட்டுமே சட்டம் படித்தார். 1939-இல் குடும்பத்தின் தோட்டத் தொழிலைப் பார்த்துக் கொள்ள லண்டனில் இருந்து மலாயா திரும்பினார்.
1955-இல் டான் சியூ சின் மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மலேசிய அமைச்சரவையில் அவர் முதலில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகச் சேர்ந்தார். பின்னர் 1959-இல் நிதி அமைச்சரானார்.[4] பின்னர் அவர் நவம்பர் 1961-இல் மலேசிய சீன சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
சீன மொழியை மலேசியாவில் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப் படுவதற்கும்; சீன மொழி பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும்; அவர் அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதற்காக விமர்சனத்திற்கு உள்ளானார்.[3]
இருப்பினும், மார்ச் 1968 இல், சீன இளைஞர்களுக்காக துங்கு அப்துல் ரகுமான் கல்லூரியை அமைக்கத் திட்டம் வகுத்தார். அந்தக் கல்லூரி பிப்ரவரி 24, 1969-இல் நிறுவப்பட்டது.
டான் சியூ சின், 1988 மார்ச் 17-ஆம் தேதி கோலாலம்பூரில் காலமானார். மலாக்காவில் அவரின் குடும்பச் சமாதி வனத்தில் அடக்கம் செய்யப் பட்டார்.[5][6]
அவரின் மனைவி, கேத்தரின் லிம் செங் நியோ (Catherine Lim Cheng Neo), குடும்பக் கட்டுப்பாட்டுக்கான தீவிரப் பரப்புரையாளர். இவர்களுக்கு மூன்று மகள்கள்.
கோலாலம்பூரில், 2003-ஆம் ஆண்டில், ஒரு சாலைக்கு, துன் டான் சியூ சின் சாலை என அவரின் பெயரில் பெயரிடப்பட்டு உள்ளது.
கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதன்மை வளாகத்தில் அவரின் பெயரில் ஒரு புதியக் கட்டடம் உள்ளது. அதன் பெயர் துன் டான் சியூ சின் கட்டடம் (Bangunan Tun Tan Siew Sin).