தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தாயாரிடம் இசை பயின்றார். அதன்பிறகு ராமநாதபுரம் சி. எஸ். சங்கரசிவனிடம் இசை கற்றுத் தேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இசைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் குருப் பரம்பரையின்படி ஹரிகதை சொல்லுவதில் இவர் வல்லவர். இவர் தில்லானா, பஜன், நாமாவளி மற்றும் அபங் பாடல்களை தானும் எழுதிப் பாடி வருகிறார். வட இந்திய ராகங்களைப் பாடுவதிலும் ஆர்வம் காட்டும் இவர், பல்வேறு ஜுகல்பந்திகளிலும் பங்கேற்கிறார்.
1984 ல் ஆஸ்திரேலியாவின் அடிலைய்டு நகரில் நடந்த சர்வதேசத் திருவிழாவில் கலந்துகொண்டு பாடுமாறு இவர் அழைக்கப்பட்டார். பெர்த், சிட்னி மற்றும் நியூசிலாந்திலும் நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1987 ல் ருஷ்யாவுக்கான இந்தியாவின் கலாச்சாரத் தூதராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், இலங்கை மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார்.