டி. எல். அஷ்லிமான் (D. L. Ashliman) (பிறப்பு ஜனவரி 1, 1938), ஒரு அமெரிக்க நாட்டுப்புறவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியின் பேராசிரியராக உள்ளார். [1] மேலும், நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதைகளின் முன்னணி நிபுணராகக் கருதப்படுகிறார். [2]
ஜனவரி 1, 1938 இல் இடாஹோவில் லாரன் ஏர்ல் அஷ்லிமான் மற்றும் எல்கார்டா சோபெல் ஆஷ்லிமான் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [3] குழந்தையாக இருந்தபோதே இவரது குடும்பத்தினர் ரெக்ஸ்பர்க்கிற்கு குடிபெயர்ந்தனர். பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் தேவாலயத்தில் உறுப்பினராக இருந்தார். இவரது பெற்றோர் அங்கு ஒரு காலணி கடையை நிறுவினர். இது 1976 இல் டெட்டன் அணை இடிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. [4] ஆஷ்லிமான் ஆகஸ்ட் 1960 இல் இடாஹோ பால்ஸ் இடாஹோ கோவிலில் [5] பயிற்றுவிப்பாளரான பாட்ரிசியா டெய்லர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [6] இவர் இப்போது தெற்கு யூட்டாவிலுள்ள செயின்ட் ஜார்ஜ் நகரில் வசித்து வருகிறார். [2]
ஆஷ்லிமான் 1963 இல் யூட்டா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1969 இல் ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் முதுகலையையும், முனைவர் பட்டத்தையும் பெற்றார். இவரது முதுகலை படிப்புகள் ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. இவரது முனைவர் பட்ட ஆய்வு "பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன் இலக்கியத்தில் மேற்கு அமெரிக்கா" என்பதாகும்.
ஆஷ்லிமான், தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் செலவிட்டார். அங்கு 1977 முதல் 1986 வரை ஜெர்மன் மொழியின் இணைப் பேராசிரியராகவும், 1994 முதல் 1997 வரை ஜெர்மன் துறையின் தலைவராகவும் இருந்தார். மேலும் தான் ஓய்வு பெற்ற மே 2000 வரை ஆசிரிய உறுப்பினராக இருந்தார். [7] 1990கள் முழுவதும் ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். [6] தான் ஓய்வு பெற்றதிலிருந்து, யூட்டாவில் உள்ள திக்சி மாநிலக் கல்லூரியில் தொடர்ந்து கற்றல் நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக, நாட்டுப்புறக் கதைகள், தொன்மவியல் மற்றும் மின்னணு புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கற்பித்தார். [8]
நாட்டுப்புறக் கதைகள் குறித்த தனது படைப்பில், ஆஷ்லிமான் முதன்மையாக ஆங்கில மொழி நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இந்திய-ஐரோப்பியக் கதைகளைப் படித்து எழுதுகிறார். ஃபோக் அண்ட் ஃபேரி டேல்ஸ்: எ ஹேண்ட்புக், என்பது நாட்டுப்புறக் கதைகளுக்கான ஒரு குறிப்பு வழிகாட்டியாகும். இது, "அதன் சுருக்கம் மற்றும் குறுக்கிடும் எழுத்து நடைக்காக தனித்து நிற்கிறது" என்று விவரிக்கப்பட்டது. [9] இவரது படைப்புகளில் கிரிம்ஸின் விசித்திரக் கதைகள், [10] ஈசாப்பின் நீதிக்கதைகள் போன்ற விரிவான பட்டியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மூலம் நாட்டுப்புற மற்றும் விசித்திரக் கதைகள் குறித்த இணையதளத்தை ஆஷ்லிமான் பராமரிக்கிறார்.[11] இந்த தளம் "நாட்டுப்புறவியல் மற்றும் விசித்திரக் கதை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் மரியாதைக்குரிய அறிவார்ந்த ஆதாரங்களில் ஒன்றாக" கருதப்படுகிறது. [2] இவர் சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கதைகள், விசித்திரக் கதைகள் மற்றும் கற்பனைகளுக்கான சசெக்ஸ் மையத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.[12]