டி. ஏ. ராஜபக்ச D. A. Rajapaksa | |
---|---|
வேளாண்மைத்துறை மற்றும் நிலவள அமைச்சர் | |
பதவியில் 1959–1960 | |
துணை நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் 11 பெப்ரவரி 1964 – 12 நவம்பர் 1964 | |
முன்னையவர் | இயூ பெர்னாண்டோ |
பின்னவர் | சேர்லி கொரேயா |
பெலியத்தை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1947–1960 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | டி. பி. அத்தபத்து |
பதவியில் 1960–1965 | |
முன்னையவர் | டி. பி. அத்தபத்து |
பின்னவர் | டி. பி. அத்தபத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டொன். அல்வின் ராஜபக்ச 5 நவம்பர் 1906 மெதமுலானை, இலங்கை |
இறப்பு | 7 நவம்பர் 1967 | (அகவை 61)
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | தந்தினா சமரசிங்க திசாநாயக்க |
பிள்ளைகள் | |
முன்னாள் கல்லூரி | ரிச்மண்ட் கல்லூரி, காலி |
வேலை | அரசியல்வாதி |
டி. ஏ. ராசபக்ச (Don Alwin Rajapaksa, சிங்களம்: දොන් අල්වින් රාජපක්ෂ; 5 நவம்பர் 1906 – 7 நவம்பர் 1967) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1947 முதல் 1965 வரை அம்பாந்தோட்டை, பெலியத்தை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான இவர் விஜயானந்த தகநாயக்காவின் அரசில் விவசாய மற்றும் நில அமைச்சராகப் பணியாற்றினார். இவரது இரண்டு புதல்வர்கள் மகிந்த ராசபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இலங்கையின் அரசுத்தலைவர்கள் ஆவர்.
ராசபக்ச 1906 நவம்பர் 5 இல் மதமுலானை என்ற கிராமத்தில் பிறந்தார். வீரகெட்டிய என்ற ஊரில் மந்ததுவ பாடசாலையில் கல்வி கற்றார். இவரது தந்தை டொன் டேஎவிட் ராஜபக்ச கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்விகற்ற டி. ஏ. ராஜபக்ச தனது குடும்ப நெல் வயல்கள், தென்னந்தோட்டங்களைப் பராமரிக்க தந்தைக்கு உதவியாக இருந்தார்.
இலங்கை அரசாங்க சபையின் அம்பாந்தோட்டை தொகுதி உறுப்பினராக இருந்த இவரது மூத்த சகோதரர் டொன் மத்தியூ ராஜபக்சவுடன் அவரது தொகுதிப் பணிகளுக்கு ஆதரவாக இருந்து அரசியலில் அறிவை வளர்த்துக் கொண்டார். டி. எம். ராஜபக்சவின் இறப்பை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசாங்க சபைக்குத் தெரிவானார்.
1947 இல் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் புதிய அரசியலமைப்பின் கீழ் நடைபெற்ற போது இவரது அம்பாந்தோட்டை தேர்தல் தொகுதி இரண்டு தொகுதிகளாக பெலியத்தை, திசமகராமை எனப் பிரிக்கப்பட்டன. ராசபக்ச பெலியத்தை தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பட்டு வெளியேறி 1951 இல் இலங்கை சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தபோது,[1] ராஜபக்ச உட்பட பல உறுப்பினர்கள் பண்டாரநாயக்காவுடன் 1951 சூலை 12 இல் எதிர்க்கட்சியில் இணைந்தனர்.[2][3] 1952 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராசபக்ச பெலியத்தை தொகுதியில் சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு பெற்றி பெற்றார். 1956 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்ற அரசு அமைத்த போது ராஜபக்ச நிலங்கள் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற செயலாலராக நியமிக்கப்பட்டார். 1959 இல் விஜயானந்த தகநாயக்காவின் அரசில் வேளாண்மை மற்றும் நிலங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1960 மார்ச் தேர்தலில் சுதந்திரக் கட்சி தோல்வி அடைந்த போது, ராஜபக்சவும் தனது தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனாலும் இரண்டு மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு கலைக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ர சூலை 1960 தேர்தலில் ராசபக்ச மீண்டும் வெற்றி பெற்றார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசில் இவர் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராகவும், பின்னர் துணை சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டார்.[4] டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 1965 தேர்தலில் மீன்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போது அத்தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்தார்.
1965 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோது, ராஜபக்ச தனது அரசியல் அதிகாரத்தை இழந்தது மட்டுமல்லாமல், தனது சொந்த வளங்களையும் இழந்திருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது பிள்ளைகளான சாமல், மகிந்தா, பசில், கோட்டா, சந்திரா ஆகியோர் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தனர், அவர்களுடைய செலவுகளைச் சமாளிப்பது கடினமாக இருந்தது. 1967 நவம்பரில் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அருகில் எந்த வாகனமும் இருக்கவில்லை, போக்குவரத்து தாமதமாக ஏற்பாடு செய்யப்பட்டபோது அவரது இதய நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் 1967 நவம்பர் 7 இல் இறந்தார்.
1. டொன் டேவிட் ராஜபக்ச விதானாராச்சி + டோனா கிமாரா வீரக்கூன் இரத்திநாயக்க