டுரியான் துங்கல் Durian Tunggal | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 2°19′N 102°17′E / 2.317°N 102.283°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | அலோர் காஜா மாவட்டம் |
உருவாக்கம் | 1910 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | Alor Gajah District Website |
டுரியான் துங்கல் (மலாய்; ஆங்கிலம்: Durian Tunggal, சீனம்: 榴梿洞加仑), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மலாக்காவில் புகழ்பெற்ற ஆயர் குரோ விலங்கு காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
உலகிலேயே பெரிய மயில் பறவை பூங்காக்களில் ஒன்றான மயில்களின் சொர்க்கபுரி (Peacock Paradise) இங்குதான் உள்ளது. இந்தப் பூங்காவில் உலகின் 100 வகையான மயில் இனங்களின் 3220 பறவைகள் உயிர்க் காட்சிப் பொருள்களாக வலம் வருகின்றன.
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka) இந்த டுரியான் துங்கல் நகரில்தான் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் மலேசியாவின் முதல் தொழில்நுட்ப பொதுப் பல்கலைக்கழகம்; மற்றும் 14-ஆவது பொதுப் பல்கலைக்கழகம் ஆகும்.
1900-களில் டுரியான் துங்கல் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த போது, அங்கு நிறைய காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இந்த யானைகள் மாச்சாப் பாரு, கீசாங், தங்காக், தம்பின் பகுதிகளில் இருந்து டுரியான் துங்கல் காடுகளுக்கு வந்தவை.
அந்தக் காலகட்டத்தில், டுரியான் துங்கல் காடுகளில் டுரியான் எனும் முள்நாரிப் பழ மரங்கள் அதிகமாக விளைந்தன. முள்நாரிப் பழங்கள் என்றால் காட்டு யானைகளுக்கு மிகவும் பிடிக்கும்[2][3]
ஒரு முறை, டுரியான் துங்கல் காட்டுப் பகுதிகளில் பல ஆயிரம் முள்நாரிப் பழமரங்கள் இருந்தும், ஒரு மரத்தில்கூட காய்கள் காய்க்கவில்லை. ஆனால், ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு காய் மட்டும் காய்த்து இருந்தது. அந்தக் காய், காய்த்துப் பழமாக விழும் வரையில் எல்லா யானைகளும் அந்த மரத்தின் அடியிலேயே காத்து இருந்தன.
நாட்கள் வாரங்களாகி பல மாதங்கள் ஆகியும், அந்த முள்நாரிப் பழம் கீழே விழவே இல்லை. மரத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்தது. யானைகள் ஏமாந்து காட்டை விட்டு திரும்பிப் போய்விட்டன.
அதன் பின்னர், அந்த இடத்திற்கு டுரியான் துங்கல் என்று பூர்வீகக் குடிமக்கள் பெயர் வைத்தனர். டுரியான் என்றால் முள்நாரிப் பழம் (Durian). துங்கல் (Tunggal) என்றால் தனிமை என்று பொருள். ஆக, டுரியான் துங்கல் என்பது ’தனிமையான முள்நாரிப் பழம்’ என்று பொருள்படுகிறது. இப்படித்தான் டுரியான் துங்கல் எனும் பெயர் அந்தப் பகுதிக்கு வந்ததாக அறியப்படுகிறது.
டுரியான் துங்கல் நகரில் இருந்து ஜாசினுக்குச் செல்லும் வழியில் பெரிய அளவிலான டுரியான் துங்கல் ஏரி உள்ளது. இந்தத் நீர்த் தேக்கத்தில் இருந்து குடிநீர் மலாக்கா மாநிலம் முழுமைக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. 1992-ஆம் ஆண்டில் சீனப் புத்தாண்டின் போது அந்த நீர்த் தேக்கத்தில் இருந்த நீர் முழுமையாக வற்றிப் போனது.[4]
அதனால் இந்நீர்த் தேக்கத்தை நம்பியிருந்த பெரும்பாலான மலாக்கா வாசிகள் அவதியுற்றனர். தேக்கத்தில் இருந்த எல்லா உயிர்ப் பொருள்களும் அழிந்து போயின. அந்தக் குளம் மீண்டும் புத்துயிர் பெற ஐந்து ஆண்டுகள் பிடித்தன. அதன் பின்னர், மூவார் ஆற்றில் இருந்து, நீர் டுரியான் துங்கல் குளத்திற்குத் திருப்பி விடப்பட்டது. அதன் பிறகு அப்படிப்பட்ட இடர்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை.[5]
உலகிலேயே பெரிய மயில் பறவை பூங்காக்களில் ஒன்றான மயில்களின் சொர்க்கபுரி இங்குதான் உள்ளது. 4.5 எக்டர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் உலகின் 100 வகையான மயில் இனங்களில் 3220-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. அவை அனைத்தும் வண்ண நிறங்களிலான அழகிய மயில்கள்.[6]
இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பாவோ கிரிஸ்டாடஸ் (Pavo cristatus) எனும் இந்திய மயில்கள்; மியன்மார், ஜாவா நாடுகளில் காணப்படும் பாவோ முடிக்கஸ் (Pavo muticus) எனும் பச்சை மயில்கள்; காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆப்ரோபாவோ கான்ஜென்சிஸ் (Afropavo congensis) எனும் கரும்பச்சை மயில்கள்; தாய்லாந்து, கம்போடியா நாடுகளைச் சேர்ந்த வெண்பச்சை மயில்கள் இங்கே வளர்க்கப்படுகின்றன.[7]
சப்பானியர்களின் ஆட்சிகாலத்தை நினைவுபடுத்தும் அடையாளங்களாக, டுரியான் துங்கல் பகுதிகளில் பழைய தொடருந்து தண்டவாளங்கள் இன்னும் உள்ளன. 1903-ஆம் ஆண்டு, புலாவ் செபாங் பட்டணத்தில் இருந்து மலாக்காவுக்குச் செல்ல 32 கி.மீ. தொலைவிற்கு அந்த தொடருந்து பாதைகள் அமைக்கப்பட்டன.[8]
1943-ஆம் ஆண்டு அங்கிருந்த தண்டவாளங்கள் சயாம் மரண இரயில்பாதை போடுவதற்காகப் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன. ஒரு சில தண்டவாளங்களே நினைவுச் சின்னங்களாக இன்னும் இருக்கின்றன.
மீண்டும் புதிதாக ஓர் இரயில் பாதையை அமைப்பதற்கு மலேசிய இரயில் சேவை நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும் மிகுதியாகச் செல்வினங்கள் ஏற்படலாம் எனும் ஐயப்பாட்டில் பலமுறை அந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
108 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் கடந்த 06.02.2013-இல் உடைக்கப்பட்டதால் மலாக்காவிற்கு மறுபடியும் இரயில் சேவை கிடைக்கும் என்பது நிறைவேறாது என்று தெரிகிறது[9]
1946ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி திறக்கப்பட்டது. சுற்று வட்டாரங்களில் இருந்த பெர்த்தாம் தோட்டம், காடிங் தோட்டம், செட்டித் தோட்டம், மாச்சாப் உம்பு கிராமம், பதினோறாம் கட்டை பகுதியில் வாழும் இந்தியக் குழந்தைகளுக்கு ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கித் தருவதற்கு டுரியான் துங்கல் ம.இ.கா. கிளையினர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.
இருபது மாணவர்களுடன் வி.பி. பழனியாண்டி அவர்களைத் தலைமையாசிரியராகக் கொண்டு டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா கண்டது.[10]
முருகப்பன் செட்டியார் என்பவர் அந்தக் காலக்கட்டத்தில் மலாக்கா மாநிலத்தில் ஒரு நிலச்சுவான்தாரராக இருந்தார். அவருக்குச் சொந்தமாகப் பல தோட்டங்கள் இருந்தன. அவருடைய தோட்டங்களில் ஒன்றில் இருந்த ஒரு வீட்டில் மாதம் மூன்று ரிங்கிட் வாடகையில் மூன்று ஆண்டுகளுக்கு பள்ளியின் வகுப்புகள் நடைபெற்றன.
பின்னர், 1949 அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி, ஒரு சீனருக்குச் சொந்தமான கட்டடத்தில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் கூடுதலான வகுப்புகள் தேவைப்பட்டன.
மலாக்கா மாநிலத் தொழிலாளர் இலாகாவில் அதிகாரியாக இருந்த நாராயணன், தன்னார்வலர் சி.எம். சேத், மலாக்கா தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் எஸ். ஜேசுதாசன், சமூகநலவாதி கொச்சப்பன் நாயர், முதலமைச்சர் கபார் பாபா ஆகியோரின் அயராத உழைப்பின் காரணமாக புதிய ஒரு பள்ளிக் கட்டடம் உருவானது.[11]
அதன் பின்னர் 1961இல் வி.பி. பழனியாண்டி, அதே இடத்தில் தனக்குச் சொந்தமான ஓர் ஏக்கர் நிலத்தை இலவசமாக டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கினார். அந்த நிலத்தில் அரசாங்கம், இப்போது இருக்கும் புதிய பள்ளியைக் கட்டித் தந்தது.
2011-ஆம் ஆண்டில் இப்பள்ளியில் 81 மாணவிகள், 96 மாணவர்கள் என 177 பேர் கல்வி பயின்றனர். 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். திருமதி. பிரேமாபதி பாலக்கிருஷ்ணன் தலைமையாசிரியையாக இருக்கின்றார்.[12]
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka), 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி டுரியான் துங்கல் நகரில் கட்டப்பட்டது. இது மலேசியாவின் 14-ஆவது பல்கலைக்கழகம் ஆகும்.
இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று பயிற்று வளாகங்கள் உள்ளன. தலை வளாகம் டுரியான் துங்கல் நகரில் உள்ளது. 2010-ஆம் ஆண்டு 766 ஏக்கர் பரப்பளவில் தலை வளாகம் உருவாக்கப்பட்டது.
மிக நவீன வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளுடன் இந்தப் பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இரு பயிற்று வளாகங்கள் மலாக்கா ஆங் துவா சாலையிலும், ஆயர் குரோ தொழில்பேட்டையிலும் இயங்கி வருகின்றன. இந்தோனேசியா, சவூதி அரேபியா, சாட், சிரியா, பாகிஸ்தான், கேமரூன், வங்காள தேசம், தான்சானியா, இந்தியா, சோமாலியா, சிங்கப்பூர், கத்தார், பாலஸ்தீனம், லிபியா, ஈராக், ஈரான், கானா, பிரான்சு, ஏமன், நைஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு உயர்க்கல்வி பெறுகின்றனர்.